Published:Updated:

திருவண்ணாமலை: தொன்மையான வீரனுடைய நடுகல், தவ்வை சிற்பம் கண்டுபிடிப்பு! சொல்லும் சேதி என்ன?

நடுகல்லில், வீரன் ஒருவன் இடது கையில் வில்லும், வலது கையில் வாளும் ஏந்தியபடி போருக்குத் தயார் நிலையில் உள்ளதைப் போன்று வடிக்கப்பட்டுள்ளது. வழக்கமாகச் சிற்பத்தில் பெருத்த வயிற்றுடன் காணப்படும் மூத்த தேவி, 'சுகாசனத்தில்' அழகிய உருவமாகக் காட்டப்பட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்துள்ளது அரிதாரிமங்கலம். இந்தக் கிராமத்தில்தான் வரலாற்று சிறப்புமிக்க நடுகற்களும், தவ்வை (மூத்ததேவி) சிற்பமும் கண்டறியப்பட்டுள்ளன. இதை, திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கண்டறிந்துள்ளனர்.

இதுதொடர்பாக, இந்த நடுவத்தை சேர்ந்த பாலமுருகனிடம் பேசினோம். "வரலாற்று சின்னங்கள் மீது ஆர்வம் கொண்ட நண்பர் வெற்றிவேல் என்பவர், அரிதாரிமங்கலம் பள்ளியின் அருகே நடுகல் போன்ற ஒன்று மண்ணில் புதைந்தபடி இருப்பதாக தகவல் தெரிவித்தார். அதன்படி அந்த ஊருக்குச் சென்றோம். அந்த கல் நடுகல்தான். பராமரிப்பற்று காணப்பட்டது. அதன் முக்கியத்துவத்தை பற்றி ஊர் மக்களிடம் கூறி, சிலரின் முன்னிலையில் பாதிக்குமேல் புதைந்திருந்த அந்தக் கல்லை சிதையாமல் வெளியில் எடுத்தோம். நடுகல்லின் சிற்பத்திற்கு மேல் பகுதியிலும், பின் பகுதியிலும் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டிருந்தன. அந்தக் கல்வெட்டை மாவு பூசி படியெடுத்து பார்த்தபோதுதான், இந்த நடுகல் 'முதலாம் பராந்தகன்' காலத்தையது என அறிந்தோம். சிற்பத்தின் பின்பக்கமாக உள்ள கல்வெட்டு பெருமளவு சிதைந்த நிலையில் காணப்பட்டது. பின், நண்பர்கள் உதவியோடு, அந்த நடுகல்லை அனைவரும் பார்க்கும் வகையில் நிலையான தளம் ஒன்று அமைத்து நிற்க வைத்தோம்.

திருவண்ணாமலை: சேதமடைந்த நடுகற்களை மீட்டு QR Code மூலம் வரலாற்றைத் தெரியப்படுத்தும் ஆய்வுக் குழு!
அரிதாரிமங்கலம் நடுகல்
அரிதாரிமங்கலம் நடுகல்

20 வருடங்களாக இப்படியாகவே மண்ணுக்குள் பாதி புதைந்தபடி பராமரிப்பற்று காணப்பட்ட இந்த நடுகலானது, அந்த ஊரில் கூட்டுறவு கடை கட்டுவதற்கு பள்ளம் எடுக்கும்போது மண்ணுக்குள் இருந்து கிடைத்துள்ளது. அதை, அப்போது சாலையின் மறுபுறத்தில் போட்டுவிட்டுள்ளனர். 'வரலாறு தன்னை எப்படியாவது மீட்டெத்துக்கொள்ளும்' என்பார்கள். அதன்படி இன்று அந்த நடுகல் மீண்டுள்ளது. இந்த நடுகல் சுமார் 5 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்டது. அதில், வீரன் ஒருவன் இடது கையில் வில்லும், வலது கையில் வாளும் கொண்டு போருக்குத் தயார் நிலையில் உள்ளதைப் போன்ற தோற்றத்தில் இருக்கும்படி செதுக்கப்பட்டுள்ளது.

படியெடுத்த அந்தக் கல்வெட்டின் தகவலை ஆய்வாளர் ராஜகோபால் என்பவருக்கு அனுப்பி விவரம் கேட்டோம். "மதிரை கொண்ட பரகேசரி என்ற பட்டமுடைய, பராந்தக சோழனின் 33-வது ஆட்சி ஆண்டில் (கி.பி.940) இந்தக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.

இதில், 'பல்குன்றக்கோட்டத்து கீழ்வேணாட்டு காந்தளூர் கூற்றதை சேர்ந்த அதிராக மங்கலம் என்ற ஊரில் நடைபெற்ற போரில் ஈடுபட்டு கலிமுகற் பெருங்கருமான் மருமகன் மலையன் இறந்துள்ளான்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

'அதிராக மங்கலம்' என்ற ஊரின் பெயரே தற்போது 'அரிதாரிமங்கலம்' என வழங்கப்படுகிறது. இந்த நடுகல், ஒரு காலத்தில் மக்களின் வழிபாட்டில் இருந்து வந்துள்ளது" என்று அவர் கூறினார். இந்தத் தகவலைக் கேள்விப்பட்டு மேலும் ஆர்வம் கூடவே, அந்த ஊரைச் சேர்ந்த ரமேஷ் என்ற நபரிடம் இது போன்று வேறு ஏதாவது இங்கு சிற்பங்கள், சிலைகள் போன்று உள்ளதாஎன்று கேட்டோம். அந்த இடத்திலிருந்து சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரத்தில் 'வேடியப்பன் கோயில்' உள்ளது என்று தெரிவித்தார்.

வேடியப்பன் கோயில் எனச் சொல்லப்படும் இடம்.
வேடியப்பன் கோயில் எனச் சொல்லப்படும் இடம்.

ஒரு வாரம் கழித்து அந்த இடத்தை பார்ப்பதற்கு அந்த நபரையும் அழைத்துக் கொண்டு குழுவினரோடு சென்றோம். அங்கு 5 நடுகற்கள் ஒன்றாக இருந்தன. அருகிலுள்ள ஏரிக்கரையில் சிற்பம் மாதிரி மற்றொன்று உள்ளது என்று அவர் கூறினார். அங்கு சென்று பார்த்தபோதுதான் தெரிந்தது அந்தச் சிற்பம் தவ்வையின் அரிதான சிற்பம் என்று.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்தச் சிற்பமானது 3 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட ஒரே பலகை கல்லில் அழகாக வடிக்கப்பட்டிருந்தது. அதில் 8 வரிகளில் கல்வெட்டு இருந்தது. அதையும் படியெடுத்து ராஜகோபாலுக்குத் தெரிவித்தோம்.

"நீர் ஆதாரம், மனிதனின் வாழ்வில் இன்றியமையாத ஒன்று. எனவே, அவை தெய்வங்களாக வழிபடப்படுவதும், அவற்றை தெய்வங்கள் பாதுகாப்பதாகவும் தமிழக மக்களிடையே நம்பிக்கை இருந்து வருகிறது. ஏரி மடைகளை கருப்பு காப்பதாக 'மடை கருப்பு தெய்வங்கள்' என பல இடங்களில் உள்ளன. அது போன்ற ஒரு சிற்பம்தான் இந்த அரிதாரிமங்கலத்தில் கிடைத்துள்ளது. விளைநிலங்களுக்கு நீர் பாய உதவும் மதகு எனப்படும் தூம்பு மற்றும் கேட்டையாரையும் திருவண்ணாமலையை சேர்ந்த ஒருவர் செய்து கொடுத்ததாக இக்கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தூம்பை செய்வித்த நபர்தான், இந்த தவ்வை சிற்பத்தையும் செய்ததாக செய்தி ஒருசேர காணப்படுகிறது. அது ஒரு பெண்ணாக இருக்கக் கூடும்.

தவ்வை சிற்பம்
தவ்வை சிற்பம்
பொதுவாகவே, தவ்வைக்கு பிங்கல நிகண்டு கழுதையூர்தி, காக்கைக்கொடியாள், முகடி, தௌவை கலதி, மூதேவி, சீர்கேடி, கேட்டை, கெடலணங்கு, ஏகவேணி, சேட்டை என்று 11 பெயர்கள் வரை குறிப்பிடப்படுவது உண்டு.
Vikatan

இந்தக் கல்வெட்டில், 'திருக்கேட்டையார்' என குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கமாக கிடைக்கப்பெறும் தவ்வை (மூத்ததேவி) சிற்பத்தில் தவ்வையானவள் பெருத்த வயிறுடன், கால்களை பரப்பி தொங்கவிட்டு அமர்ந்திருப்பதைப் போல காணப்படும். ஆனால் இந்த தவ்வை சிற்பம், சற்று வேறுபட்டு 'சுகாசனத்தில்' அழகிய உருவமாக காட்டப்பட்டுள்ளார். அவரது மகனாகக் கருதப்படும் மாந்தன், வழக்கத்திற்கு மாறாக இடப்புறமாக உள்ளபடி காட்டப்பட்டுள்ளான். மகள் மாந்தி, வலதுபுறமாக காட்டப்பட்டுள்ளாள். இதில் தவ்வையின் காக்கை கொடியும் இடது தோள் பக்கத்தில் காட்டப்பட்டுள்ளது. தவ்வை, மாந்தன், மாந்தி ஆகிய மூவரும் 'அபயம்' காட்டியபடி இந்த சிற்பத்தில் அமர்ந்துள்ளனர். இங்குள்ள தவ்வை, ஏரியின் காவல் தெய்வமாக இந்த இடத்தில் வழிபடப்பட்டு வந்துள்ளார். கல்வெட்டின் எழுத்து அமைதியை வைத்துப் பார்க்கும்போது 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இச்சிற்பம் இருக்கலாம்.

"ஸ்வஸ்திஸ்ரீ இவ்வேரிதூ ம்பும் இத்திரு கேட்டையாரை யும் செவித்தாள் திருவண்ணாமலை ஏவத்தாரான ராண்டார்"

என்பதே அந்த கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள செய்தி. இது போன்ற பழைமையான சின்னங்கள் முறையாகப் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானதே" என்றார் பாலமுருகன்.

விகடன் குறித்து உங்களுக்கு எவ்வளவு தெரியும்? சின்ன quiz...

விகடன்
விகடன்

விகடன் நிறுவனர் தினம்: Quizல் கலந்து கொள்ள க்ளிக் செய்க... https://bit.ly/3DjBBxi

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு