Published:Updated:

10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரர் சிற்பம்... மதுரையில் புதைந்து கிடக்கும் சமண அடையாளங்கள்!

மகாவீரர் சிற்பத்துடன் ஆய்வாளார் முனீஸ்வரன்
மகாவீரர் சிற்பத்துடன் ஆய்வாளார் முனீஸ்வரன்

மதுரையில் ஆச்சர்யப்படுத்தும் பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த மகாவீரர் சிற்பம்!

ஆதி காலத்திலிருந்து நகர நாகரிகத்துடன், தனித்த பண்பாட்டுடன் சிறந்து விளங்கிய முதுநகரங்களில் மதுரை முக்கியமானது. மதுரையை மையமாக வைத்து பல்வேறு மன்னர்களின் ஆட்சிகள், சமயங்கள் வாழ்ந்து மறைந்துள்ளன. அதன் அடையாளங்கள் மதுரையைச் சுற்றி நிறைய உள்ளன. மண்ணிலும் புதைந்தும் கிடக்கின்றன.

அந்த வகையில்தான் வைகை நதி கரையோர தமிழர்களின் நாகரிகத்தை முழுமையாக கண்டறிய கீழடியில் ஆய்வுகள் நடந்து வருகின்றன. பல அறிய பொருள்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.

இது ஒருபக்கமென்றால், தமிழர்களின் வரலாற்று எச்சங்களாக புரதானமான கல்வெட்டுகள், சின்னங்கள், சிற்பங்கள், இடிந்த மண்டபங்கள், மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் அவ்வப்போது கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் பேரையூர் வட்டம் தே.கல்லுப்பட்டி அருகே வேளாம்பூரில் 10-ம் நூற்றாண்டை சேர்ந்த மகாவீரர் சிற்பம் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

மகாவீரர் சிற்பம்
மகாவீரர் சிற்பம்

இதை ஆய்வு செய்த பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர் முனைவர் முனீஸ்வரனிடம் பேசினோம். "வேளாம்பூரில் பழைமையான சிற்பம் இருப்பதாகக் கவசக்கோட்டை விவசாயி ராதாகிருஷ்ணன் தகவல் சொன்னார். உடனே தொல்லியல் ஆர்வலர்கள் நாகபாண்டி, சிவக்குமார் ஆகியோருடன் வேளாம்பூர் மாரியம்மன் கோயிலுக்குச் சென்றோம். அங்கே பின்புறமுள்ள முட்புதரில் சிதைந்த நிலையில் மகாவீரர் சிற்பத்தைக் கண்டோம்.

மக்கள் பிழைப்புக்காக இடம் பெயர்ந்ததால் ஊர் அழிந்த நிலையில் இருந்தாலும், வரலாற்று தடயங்கள் அழியாமல் உள்ளன. முட்புதரில் சிதைந்த நிலையில் 3 அடி உயரமும் 2 அடி அகலத்திலும் கண்டெடுக்கப்பட்டது வர்த்தமானர் எனும் சமணத்தின் 24-வது தீர்த்தங்கரான மகாவீரரின் சிற்பம்.

நீண்ட துளையுடைய காதுகளுடன் தியான கோலத்தில் முகம் தெளிவற்று தேய்ந்த நிலையில் விரிந்த மார்புடனும் காணப்பட்டது.

தேய்ந்த நிலையில் 3 சிங்கங்கள் கொண்ட பீடத்தின் மீது சிம்மாசனத்தில் யோகமுத்திரையுடன் அமைதி தவழும் வகையில் அந்த மகாவீரர் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மகாவீரர் சிற்பம்
மகாவீரர் சிற்பம்

சமீபத்தில் செங்கமேடு பகுதியில் கண்டறியப்பட்ட மகாவீரர் சிற்பமும் இச்சிற்பமும் ஓப்பீட்டின்படி பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தாகக் கருதலாம். இப்பகுதியிலும் ஒரு சமண பள்ளி வழிபாட்டில் இருந்து அழிந்துள்ளதை அறிந்துகொண்டோம். அருகிலுள்ள காரைக்கேணியிலும் ஒரு தீர்த்தங்கரர் சிற்பம் உள்ளதும் கவனிக்கத்தக்கது. செங்கற்கள் மூலம் கட்டப்பட்ட சமணப்பள்ளி இருந்துள்ளதும் ஆய்வில் தெரிய வந்தது" என்றார்.

மதுரையை சுற்றியுள்ள மலைகளில் சமணத்தின் தடங்கள் இன்றும் காட்சி தந்து கொண்டிருக்கும் நிலையில் சமவெளிகளில் அவ்வப்போது கண்டெடுக்கப்படும் சமண சமய சின்னங்கள் மேலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகின்றன.

அடுத்த கட்டுரைக்கு