Published:Updated:

எகிப்து: 2000 வருடங்கள் பழைமையான தங்க நாக்கு கொண்ட மம்மி கண்டுபிடிப்பு - ஆச்சர்ய தகவல்!

தங்க நாக்கு கொண்ட மம்மி
தங்க நாக்கு கொண்ட மம்மி ( Egyptian antiquities ministry )

எகிப்தில் உள்ள ஆய்வாளர்கள் தங்க நாக்கு கொண்ட 2000 வருடங்கள் பழைமையான மம்மி ஒன்றை கண்டறிந்துள்ளனர்.

எகிப்து மற்றும் டொமினிக்கன் குடியரசு நாட்டை சேர்ந்த ஆய்வாளர்கள் எகிப்தின் பழம்பெரும் கோயில்களில் நடத்திய ஆய்வில் தங்க நாக்கு கொண்ட மம்மி கண்டறியப்பட்டுள்ளது. இந்த மம்மியின் உடலை பதப்படுத்தும்போது அதன் சொந்த நாக்கு அகற்றப்பட்டு இம்மாதிரியான தங்க நாக்கு வைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறும் ஆராய்ச்சியாளர்கள் இது ஒரு நபர் உயிரிழந்த பிறகு எகிப்து கடவுளான ஒசிரிஸுடன் பேசுவார் என்ற நம்பிக்கையில் பொறுத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

எகிப்தின் கடவுள்

ஒசிரிஸ்
ஒசிரிஸ்
Freepik

ஒசிரிஸ் - பழங்கால எகிப்தின் ஒரு முக்கிய கடவுளாக கருதப்படுகிறார். இவர் பாதாள உலகின் ஆட்சியாளர் என்றும், உயிரிழந்தவர்களின் நீதிபதி என்றும் கூறப்படுகிறது.

ஆய்வாளர்கள் மற்றும் சாண்டோ டோமிங்கோ பல்கலைக்கழகத்தினர் சேர்ந்து குழுவாக டொபோசிரிஸ் மேக்னா கோயிலில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

டொபோசிரிஸ் மேக்னா என்ற நகரம் இரண்டாம் தொலேமியால் உருவாக்கப்பட்டது. இவர் பண்டைய எகிப்தின் தொலேமி வம்சத்தின் இரண்டாம் பேரரசர். இந்த ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கியவர் டோமிங்கோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் கத்லீன் மார்டினெஸ்.

16 புதையிடங்கள் கண்டுபிடிப்பு

இவரின் குழு கிரேக்க மற்றும் ரோமானியர்கள் காலத்திற்குப் பெயர்போன 16 புதையிடங்களைக் கண்டறிந்துள்ளனர். அதில் பல சரியான முறையில் பதப்படுத்தப்படவில்லை என்றும் கூறுகின்றனர். இதில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மம்மியில் கீரிடம், அதில் கொம்புகளால் அலங்காரம், தலையில் நாகபாம்பு, மார்பில் ஒரு அணிகலன் போன்றவை இருந்தன என்கிறார் ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய கத்லீன் மார்டினெஸ்.

டபோசிரிஸ் மேக்னாவில் நடைபெற்ற இந்த ஆய்வில் எகிப்து மற்றும் ரோமானிய காலத்திற்குச் சொந்தமான ஒரு பெண்ணின் இறுதி முகமுடி, எட்டு இலைகளை கொண்ட தங்க மாலை, எட்டு மார்பிள் முகமூடி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அலெக்சாண்ட்ரியாவின் தொல்பொருள் ஆராய்ச்சி ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் கலீத் அபோ எல் ஹமத் தெரிவித்தார்.

பெண் மம்மி
பெண் மம்மி
Egyptian antiquities ministry

கடந்த பத்து வருடங்களாக நடைபெற்று வரும் இந்த ஆராய்ச்சிகளில் டபோசிரிஸ் மேக்னா கோயில் குறித்த எண்ணங்களை மாற்றும் அளவிற்கு பல பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் ஒருபகுதியாக இந்த இடத்தில்தான் ஏழாம் கிளியோபாட்ரா ராணியின் முகமும் அவரின் பெயரும் பொறித்த நாணயங்கள் கிடைத்தது என எகிப்தின் தொல்பொருள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏழாம் கிளியோபாட்ரா ராணி பண்டைய எகிப்தை ஆண்ட, கிரேக்க மொழி பேசும் தொலேமி வம்சத்தின் கடைசி ராணி. இவர் எகிப்தை 51-30 BC-ல் ஆண்டுவந்தார். இவரின் இறப்பிற்கு எகிப்து ரோமானியர்களின் ஆதிக்கத்திற்கு ஆளானது.
அடுத்த கட்டுரைக்கு