’உலக நாகரிகத்தின் தொட்டில்’ என அழைக்கப்பட்ட ஆதிச்சநல்லூரில் தொடர்ந்து அகழாய்வுப் பணியை மேற்கொள்வதுடன், அதன் அருகிலுள்ள சிவகளையிலும் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தொல்லியல் துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். தொடர்ந்து, அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் ஆய்வு செய்தார்.

இதையடுத்து ஆதிச்சநல்லூர் அகழாய்விற்காக ரூ.28 லட்சமும், சிவகளை அகழாய்விற்காக ரூ.32 லட்சமும் அரசு நிதி ஒதுக்கியது. ஆதிச்சநல்லூரில் 6வது கட்டமாகவும், சிவகளையில் முதற்கட்டமாகவும் அகழாய்வுப்பணிகள் கடந்த மார்ச் 15-ம் தேதி துவங்குவதாக அறிவிக்கப்பட்டு கொரோனா ஊரடங்கினால் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர், மே 25-ம் தேதி துவங்கி அகழாய்வுப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சிவகளை அகழாய்வுப்பணி தொல்லியல்துறை அதிகாரிகள் பிரபாகரன், தங்கதுரை தலைமையிலும், ஆதிச்சநல்லூர் அகழாய்வுப்பணி அதிகாரிகள் பாஸ்கரன், லோகநாதன் ஆகியோர் தலைமையிலும் நடந்து வருகிறது. ஆய்வில் தொல்லியல்துறை பணியாளர்கள் மட்டுமில்லாமல் ஆய்வு மாணவர்கள், உள்ளூர் மக்கள் என 80-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆதிச்சநல்லூரில் 72 குழிகளும், சிவகளையில் 70 குழிகளும் அமைக்கப்பட்டு அகழாய்வுப்பணி நடந்து வருகிறது. சிவகளையில் 31 முதுமக்கள் தாழிகளும், ஆதிச்சநல்லூரில் 24 முதுமக்கள் தாழிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிவகளையில் கண்டெடுக்கப்பட்ட சில முதுமக்கள் தாழிகளுக்குள் நெல்மணிகள், இருப்பதும், ஆதிச்சநல்லூர் பகுதியில் குழந்தையின் எலும்புக்கூடும், மண் குழாய் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில், தமிழக தொல்லியல்துறை இயக்குநர் உதயச்சந்திரன். துனை இயக்குநர் சிவானந்தம் ஆகியோர், ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளைப் பகுதியில் அகழாய்வுப் பணிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து, அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள், எலும்புகள், இரும்பு பொருட்கள், சுடுமண் பொருட்கள், செம்பு நாணயங்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பொருட்களை பார்வையிட்டனர். அப்போது, ஆதிச்சநல்லூரில் ஒரு முதுமக்கள் தாழி திறக்கப்பட்டது. அதில், எலும்புக்கூடு, மண்பொருட்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன.

அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட பொருள்களைத் இங்கேயே அருங்கட்சியகம் அமைத்து பாதுகாக்க வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து ’ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்’, ’ஆதிச்சநல்லூர் வழக்கு எண்: 13,096, 2017’ என்ற நூல்களின் ஆசிரியர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவிடம் பேசினோம்.
“இரண்டு அகழாய்வுகளிலும் முதுமக்கள் தாழிகள் மட்டுமில்லாமல் பல பழங்காலப் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றை இங்கேயே அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்தி பாதுகாக்க வேண்டும்.
அப்போதுதான் ஆதிச்சநல்லூர், சிவகளை நாகரிகத்தை எதிர்காலத் தலைமுறையினரும் தெரிந்து கொள்ள முடியும். அதேபோல கீழடியின் ஆய்வு முடிவுகள் 24 மொழிகளில் வெளியிடப்பட்டதைப் போல ஆதிச்சநல்லூர், சிவகளை அகழாய்வு முடிவுகளையும் 24 மொழிகளில் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம்.

ஆதிச்சநல்லூரை 1902-ல் ஆய்வு செய்த அலெக்சாண்டர் இரியா, ஆதிச்சநல்லூர் தவிர தாமிபரணிக் கரையோரம் உள்ள வல்லநாடு, கொங்கராயக்குறிச்சி, சுகந்தலை, வசவப்பபுரம் உள்ளிட்ட 37 இடங்களை தொன்மை நாகரிகம் பரவிக்கிடக்கும் பகுதிகளாக குறிப்பிட்டுள்ளார். அதன்படி, அந்தப்பகுதிகளிலும் அகழாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். வல்லநாடு அருகிலுள்ள உழக்குடியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 13 அடி உயர நடுகல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொல்லியல் ஆய்வாளர்களும் பார்வையிட்டுச் சென்றுள்ளனர்" என்றார் காமராசு.