Published:Updated:

தேனியில் 2500 ஆண்டுகள் பழைமையான பெருங்கற்கால கல்வட்டம்; கண்டெடுத்த ஆய்வாளர்கள்!

கல்வட்டம்
News
கல்வட்டம்

``2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தொல்குடி மக்கள் இறந்த குழுத்தலைவர்களைத் தாழி அல்லது கற்பதுக்கையில் வைத்து அடக்கம் செய்து, அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஒழுங்கற்ற கற்களை வட்டமாக அடுக்கி கல்வட்டம் உருவாக்கி இறந்தவரின் நினைவாகக் குத்துக்கல் அமைப்பது வழக்கம்."

தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து மேற்கே 8 கிலோ மீட்டர் தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஏகலூத்துப் பகுதியில் வைகை தொல்லியல் பண்பாட்டுக் கழக நிறுவனர் மோகன்குமாரமங்கலம் தலைமையில் தொல்லியல் ஆர்வலர்கள் வழக்கறிஞர் பாலதண்டாயுதம், ஜெ.முருகன், சிவராமன் உள்ளிட்டோர் ஏகலூத்துப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

குத்துக்கல்
குத்துக்கல்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அப்போது புளியந்தோப்புக்குள் அருகருகே ஒரே தொடர் வரிசையில் கிழக்கு மேற்காக மூன்று கல்வட்டங்கள் இரண்டு சிதிலமடைந்த நிலையில் இருப்பது கண்டறியப்பட்டன. கரடுமுரடான ஒழுங்கற்ற கற்களால் அமைக்கப்பட்ட இக்கல்வட்டங்கள் ஒவ்வொன்றும் ஏறத்தாழ 28 முதல் 30 அடி விட்டம் கொண்டவை. கீழ்ப்பக்கம் உள்ள கல்வட்டத்தில் குத்துக்கல்லோ கற்பதுக்கையோ இல்லாமல் கல்வட்டம் மட்டும் உள்ளது. நடுவில் உள்ள கல்வட்டம் குத்துக்கல்லுடன்கூடியது. இதில் தரைக்கு மேல் ஏறத்தாழ மூன்று அரை அடி உயரம் மூன்று அரை அடி அகலத்தில் ஒழுங்கற்ற இயற்கையான குத்துக்கல் ஊன்றப்பட்டுள்ளது. தரை மண்மேடிட்டுக் காணப்படுவதால் இதன் உயரம் தரைக்குள் இன்னும் கூடுதலாக இருக்கும் என்று கூறுகின்றனர். அதையொட்டி மேல்புறம் உள்ள கல்வட்டத்தின் நடுவில் கற்பதுக்கை சிதைந்த வடிவத்தில் உள்ளது.

இதுகுறித்து ஆய்வாளர் மோகன்குமாரமங்கலத்திடம் பேசினோம். ``2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தொல்குடி மக்கள் இறந்த குழுத்தலைவர்களைத் தாழி அல்லது கற்பதுக்கையில் வைத்து அடக்கம் செய்து, அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஒழுங்கற்ற கற்களை வட்டமாக அடுக்கி கல்வட்டம் உருவாக்கி இறந்தவரின் நினைவாகக் குத்துக்கல் அமைப்பது வழக்கம். இந்நினைவுச் சின்னங்களை பெரிய கற்களைக் கொண்டு அமைத்ததால் அக்காலம் பெருங்கற்காலம் என அழைக்கப்பட்டது. இந்நினைவுச் சின்னங்களை அவர்களின் குழுவும் வம்சாவளியினரும் வணங்கி வந்துள்ளனர்.

இவை மூன்றும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டவையா அல்லது வெவ்வேறு காலத்தில் எடுக்கப்பட்டவையா என்று தெரியவில்லை. இக்கல்வட்டங்கள் ஆநிரை கவரும் ஆகோள் பூசலில் ஈடுபட்டு இறந்த வீரர்கள் குழுவுக்கு எடுக்கப் பட்டிருக்கலாம். குத்துக்கல் அமைக்கப்பட்ட கல்வட்டம் குழுத்தலைவருக்குரியதாக இருக்கலாம்.

மோகன்குமாரமங்கலம்
மோகன்குமாரமங்கலம்

இக்கல்வட்டத்தில் உள்ள குத்துக்கல்லில் தற்போது வெள்ளை மற்றும் காவிவண்ணத்தில் நாமம் வரையப்பட்டுள்ளது. இக்குத்துக்கல் கன்னிமார் என்ற பெயரில் வழிபடப்பட்டு வருகிறது. அப்பகுதியில் உள்ள நிலங்களைக் காவல் செய்யும் பரவு காவல்காரர்கள் ஆண்டுக்கொருமுறை தை பொங்கல் நாளில் பொங்கல் வைத்து வணங்குவதாகச் சொல்லப்படுகிறது. இவ்விடத்தில் மேலும் பல கல்வட்டங்கள் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தேனி மாவட்டத்தில் அருகருகே மூன்று கல்வட்டங்களும் கற்குவைகளும் ஒரே இடத்தில் கிடைத்திருப்பது அரிதானதாகும். பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் இருக்கும் இப்பகுதியில் மக்கள் குடியிருக்கும் வாழிடம் இருந்திருக்க வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் பொதுவாக ஊற்றுகள் உள்ள பகுதிகளில் புதிய கற்கால வாழிடங்கள் இருப்பது பரவலாக கண்டறியப்பட்டுள்ளன. ஏற்கெனவே எங்கள் குழுவால் கன்னிமார் கோவில் பகுதியில் புதிய கற்காலக் கோடாரியும் கொங்கச்சிபாறைப் பகுதியில் புதிய கற்காலக் குழவியும் கண்டறியப்பட்டுள்ளது.

ஈமச்சின்னங்கள்
ஈமச்சின்னங்கள்

சேர நாட்டுக்கு மலையாடிவாரத்தின் ஓரமாகப் பழைமையான பெருவழி சென்றிருக்கலாம் என்பதை இக்கண்டுபிடிப்பு வலுப்படுத்துகிறது. இவ்வழி கம்பம் உத்தமபுரம், ஏகலூத்து, கன்னிமார் ஊத்து, கல்லொடைச்சான் பாறை, கொங்கச்சி பாறை, பெருமாள் கோவில், உள்ளுமனை, சுரங்கனாறு, கழுதை மேடுப்பகுதி வழியாகச் சென்றிருக்கலாம் என்று தோன்றுகிறது'' என்றார்.