Published:Updated:

ஆதிச்சநல்லூர்:17 ஆண்டுகளுக்குப் பிறகு அகழாய்வு; முதுமக்கள் தாழி கண்டெடுப்பு!

இந்த அகழாய்வில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி கிடைத்திருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ளது ஆதிச்சநல்லூர். ’உலக நாகரிகம் தோன்றிய முதல் இடம் ஆதிச்சநல்லூர்தான்’ என பல அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது, சிந்துசமவெளி நாகரிகத்திற்கும் முந்தைய நாகரிகம் என வங்க தேசத்து அறிஞர் பானர்ஜி குறிப்பிட்டுள்ளார். இங்கு கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகள், மெசபடோமியா பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகளை ஒத்துள்ளதாகவும், சில ஆய்வுகள் கூறுகின்றன. இங்கு முதன்முதலாக 1876-ல் அகழாய்வு நடந்துள்ளது.

ஆதிச்சநல்லூரில் கனிமொழி ஆய்வு
ஆதிச்சநல்லூரில் கனிமொழி ஆய்வு

கடந்த 2004-ம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை சார்பில் இங்கு நடத்தப்பட்ட அகழாய்வில் 169 முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த அகழாய்வின் முக்கியத்துவம் குறித்து நீதிமன்றத்தில் விளக்கப்பட்ட பிறகுதான் அகழாய்வுப் பகுதியைச் சுற்றி கம்பிவேலி போட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையில், இரண்டு முதுமக்கள் தாழிகளை கார்பன் சோதனைக்காக அமெரிக்காவிலுள்ள புளோரிடாவிற்கு அனுப்பியதில் ஒன்று ’கி.மு 905’, மற்றொன்று ‘கி.மு 791’ஐ சேர்ந்தது எனத் தெரிய வந்தது.

அகழாய்வாளர்கள், தொல்லியல் ஆர்வலர்களின் மிகுந்த போரட்டத்திற்குப் பிறகு இதன் மாதிரி ஆய்வறிக்கையை மட்டும் சமர்ப்பித்தது மத்திய தொல்லியல்துறை. இங்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2020-ம் ஆண்டும், இந்த ஆண்டும் தமிழக தொல்லியல்துறை சார்பில் அகழாய்வுப் பணிகள் நடந்து முடிந்துள்ளது. இதற்கிடையில், கடந்த 2019-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட மத்திய பட்ஜெட்டில் ’ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும்’ என மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீத்தாராமன் அறிவித்தார்.

கனிமொழி முன்பு திறக்கப்பட்ட 2,500 ஆண்டுக்கு முந்தைய முதுமக்கள் தாழி
கனிமொழி முன்பு திறக்கப்பட்ட 2,500 ஆண்டுக்கு முந்தைய முதுமக்கள் தாழி
"கொற்கையில் கடல்சார் அகழாய்வு மேற்கொள்ளப்படும்!"- அமைச்சர் தங்கம் தென்னரசு

இதையடுத்து, 160 ஒன்றிய நினைவுச்சின்னங்கள் மத்திய மற்றும் தெற்கு மண்டலத்தில் உள்ள 21 தொல்லியல் தளங்களை உள்ளடக்கி திருச்சி மண்டலம் உருவாக்கப்பட்டது. திருச்சி மண்டல மத்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளரும், ஆதிச்சநல்லூர் அகழாய்வு இயக்குனருமான அருண்ராஜ் தலைமையில் அகழாய்வுப்பணிகள் கடந்த அக்டோபர் 10-ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. ஆதிச்சநல்லூர் பரம்புப் பகுதியில் மூன்று இடங்களில் 15 குழிகள் அமைக்கப்பட்டு அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த அகழாய்வில் ஏற்கெனவே 12 முதுமக்கள் தாழிகள், சங்க காலத்தில் மக்கள் வாழ்ந்ததற்காக வாழ்விடப் பகுதிகள், சுமார் 2,500 ஆண்டுகள் முதல் கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆதிச்சநல்லூரில் மனிதர்கள் வாழ்ந்துள்ளதை உறுதிப்படுத்தும் விதமாக ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட சுண்ணாம்புத் தளம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், ஆதிச்சநல்லூரில் இரண்டாம் அடுக்கில் சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி
அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி

இந்தத் தாழிக்குள் பல்வேறு பொருட்கள் இருக்கும் என நம்பப்பட்டது. இந்த அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள், சுண்ணாம்புத் தளத்தை தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் பார்வையிட்டனர். அவர்களின் முன்பாக 2,500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி திறக்கப்பட்டது. அந்த தாழிக்குள் மனிதனின் மண்டை ஓடு, கால் எலும்புகள், சிறு பானைகள், கலயங்கள் இருந்ததை பார்வையிட்டனர்.

மேலும் பானைகளில் தானியங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தொல்லியல் அதிகாரிகள் தெரிவித்தனர். நடைபெற்று வரும் ஆய்வுகள் குறித்து தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண்ராஜ் விளக்கமளித்தார். இந்த அகழாய்வுப் பணிகளை பார்வையிட தமிழக கலை பண்பாட்டுத்துறை ஆணையரும், தூத்துக்குடி மாவட்ட பேரிடர் மேலாண்மை கண்காணிப்பாளருமான பிரகாஷ் நேரில் பார்வையிட வருகை தந்தார்.

பிரகாஷ் ஆய்வு
பிரகாஷ் ஆய்வு

இதையடுத்து தொல்லியல் அதிகாரிகளிடம் பேசிய பிரகாஷ், “ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைய உள்ளது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று. ஆதிச்சநல்லூரில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் இந்த அகழாய்வு பணிகள் நடைபெற வேண்டும். அப்போதுதான் முழுமையான அகழாய்வு பணிகளை மேற்கொள்ள முடியும். வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தைத் தாண்டி இந்த அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு