தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர், கொற்கை மற்றும் சிவகளை ஆகிய மூன்று இடங்களையும் தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்பட்டு அங்கே தமிழக தொல்லியல்துறையின் சார்பில் அகழாய்வுகள் நடந்து வருகின்றன. இதில், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள சிவகளையில் இதுவரை இரண்டு கட்டங்களாக அகழாய்வுப் பணிகள் நடந்தன. இதற்காக 5 இடங்களில் 70 குழிகள் அமைக்கப்பட்டன. இந்த அகழாய்வில் சுடுமண் பானைகள், முதுமக்கள் தாழிகள், இரும்பு உலோகப் பொருள்கள், பாண்டி விளையாட்டு உபகரணங்கள், களிமண் பொம்மை, களிமண் கிண்ணம், கல்லால் செய்யப்பட்ட பந்து, உலோகங்களைச் சானைப் பிடிக்கும் கல், செம்பு நாணயங்கள், பானைகள், பானை ஓடுகள் என ஏராளமான பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதுமட்டுமில்லாமல், முதல்முறையாகச் செங்கற்களால் அமைக்கப்பட்ட கழிவுநீர் வடிகால் போன்ற அமைப்பும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில், சில முதுமக்கள் தாழியில் இருந்து நெல்மணிகள், எலும்புகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
“2,600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழரின் தொன்மையை சிவகளை அகழ்வாராய்ச்சி எடுத்துக்காட்டிக் கூறுகிறது. ‘சிவகளை நாகரிகம்’ தமிழகத்தின் தொன்மையான நாகரிகம். தூத்துக்குடி மாவட்டத்திற்கு ’சிவகளை’ ஒரு முக்கிய அடையாளமாக உள்ளது. இதன் ஆராய்ச்சி முடிவுகள் வெளியிடப்படும்போது, தமிழகத்தில் ‘சிவகளை’ ஒரு முக்கிய அடையாளச் சின்னமாகத் திகழும்” எனத் தமிழக தொழில்துறை மற்றும் தொல்லியல்துறை அமைச்சரான தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
இந்த நிலையில் தொடர்ந்து மூன்றாவது கட்டமாக சிவகளையில் அகழாய்வுப் பணிகள் நடைபெறும் எனத் தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.

அதன் அடிப்படையில் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணியினை சிவகளை பரம்புப் பகுதியில் தொடங்கி வைத்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் டாக்டர். செந்தில்ராஜ், “திருநெல்வேலியில் அமையுள்ள பொருநை அருங்காட்சியத்திற்கு இணையாக சிவகளையில் திறந்தவெளி அருங்காட்சியகத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இந்த அகழாய்வுப் பணிகளுக்காக தமிழக அரசு ரூ.29 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை இந்த அகழாய்வுப் பணிகள் நடைபெற உள்ளன.