Published:Updated:

ஐந்தாயிரம் ஆண்டுகள் பழைமையான கற்கருவிகள் கண்டெடுப்பு - பண்பாட்டுப் பொக்கிஷமா கல்வராயன் மலை?

பெருங்கற்கால நினைவுச் சின்னம்

திருவண்ணாமலை அருகேயுள்ள கல்வராயன் மலைக் கிராமங்களில் ஐந்தாயிரம் ஆண்டுகள் பழைமையான கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஐந்தாயிரம் ஆண்டுகள் பழைமையான கற்கருவிகள் கண்டெடுப்பு - பண்பாட்டுப் பொக்கிஷமா கல்வராயன் மலை?

திருவண்ணாமலை அருகேயுள்ள கல்வராயன் மலைக் கிராமங்களில் ஐந்தாயிரம் ஆண்டுகள் பழைமையான கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Published:Updated:
பெருங்கற்கால நினைவுச் சின்னம்

திருவண்ணாமலை மாவட்டம், தண்டாரம்பட்டு தாலுகாவுக்கு உட்பட்ட கல்வராயன் மலைத் தொடரில் கீழ்வலசை, மேல்வலசை, அக்கரைப்பட்டி என மூன்று கிராமங்கள் இருக்கின்றன. இந்த கிராமங்களில் பெருங்கற்காலப் படிவங்கள் இருப்பதாகவும், புதிய கற்காலக் கருவிகள் கிடைப்பதாகவும் தகவல்கள் கிடைத்ததால், மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த பழனிசாமி, கிராம உதவியாளர் முருகன் இருவரும் கிராம மக்கள் உதவியுடன் அந்தப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களைக் கண்டறிந்தனர். கீழ்வலசை கிராமத்திலிருக்கும் மாரியம்மன் கோவில் பகுதியில் பல்வேறு காலத்தைச் சேர்ந்த சிலைகளும், நடுகற்கள் போன்ற சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய பலகைக் கற்களும் காணப்படுகின்றன. 

கற்சிற்பம்
கற்சிற்பம்

இவற்றில், சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய 5 கற்கருவிகளை, இங்கு வைத்து வணங்குவதையும் அடையாளம் கண்டனர். இதேபோல், அரசினர் உண்டு உறைவிடப் பள்ளியின் அருகிலிருக்கும் விநாயகர் கோயிலில் 20-க்கும் மேற்பட்ட புதிய கற்காலக் கருவிகள் வழிபாட்டில் வைக்கப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமன்றி, புதிய கற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட 25-க்கும் மேற்பட்ட இரும்புக் கருவிகளும் கோயிலில் வைக்கப்பட்டிருந்ததையும் கண்டறிந்தனர். கோயிலுக்கு அருகிலுள்ள மலைப்பகுதியில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த 100-க்கும் அதிகமான கற்திட்டைகளும் காணப்படுகின்றன. முதலில் காணப்படும் கற்திட்டைகள் இடுதுளையுடன் கூடியதாக அமைந்திருக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தக் கற்திட்டைகள் நான்கு புறமும் செங்குத்துக் கற்களை வைத்தும், அதன்மேல் ஒரு பெரிய பலகைக் கல் வைத்தும் மூடப்பட்டிருக்கின்றன. இதன் கிழக்குப் பக்கக் கல்லில் வட்ட வடிவத் துளை காணப்படுகின்றன. இந்தக் கற்திட்டைக்குள் பீமரப்பட்டியைச் சேர்ந்த கிராம மக்கள் சிலை வைத்து வழி வழியாக வணங்கி வருகிறார்கள். மற்றொரு இடத்தில் காணப்படும் கற்திட்டைகள் நான்கு புறமும் கற்கள் வைத்து அடுக்கியும் அதன்மேல் பலகைக் கல் வைத்தும் மூடப்பட்டிருக்கின்றன. இதே அமைப்பிலான கற்திட்டைகள் தென்பெண்ணை ஆற்றை ஒட்டிய மற்றொரு இடத்திலும் காணக்கிடைக்கின்றன. இவ்வாறாக, கற்குவையுடன் கூடிய கற்திட்டைகள், பூமிக்குள் புதைந்திருக்கும் கல் பதுக்கைகள் போன்றவை பலவகைப்பட்ட வடிவில் கண்டறியப்பட்டிருக்கின்றன. இந்த இடத்தில் இரும்பினை உருக்கிக் கருவிகள் செய்ததற்கான தடயங்களும் இருக்கின்றன.

புதிய கற்காலக் கருவிகள்
புதிய கற்காலக் கருவிகள்

இது குறித்து, தொல்லியல் ஆய்வாளர் கா.ராஜன் கூறுகையில், ‘‘இந்த இடத்தில் கண்டறிப்பட்டிருக்கும் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகள் மிகவும் தனித்தன்மை வாய்ந்தவை. இவை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட கற்கள், அதன் இடம் ஆகியவற்றை மேலும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இந்த இடத்தில் புதிய கற்கால மக்கள் வாழ்ந்த வசிப்பிடங்கள், பாறை ஓவியங்கள் போன்றவை குறித்தும் ஆய்வு செய்தால், மேலும் பல பண்பாட்டுத் தகவல்கள் கிடைக்கும். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாது மலை, கல்வராயன் மலைப்பகுதிகளுக்கு இடையிலிருக்கும் செங்கம் கணவாய், தென்பெண்ணையாற்றுப் பகுதி, பாம்பாற்றுப் பகுதி ஆகிய இடங்களில் பல நூற்றுக்கணக்கான தொல்லியல் சுவடுகள் கிடைத்த வண்ணம் உள்ளன. திருவண்ணாமலை மாவட்டத் தொல்லியல் வரலாற்றுக்கு வளம் சேர்க்கும் இந்தக் கண்டுபிடிப்புகளை அரசு பாதுகாத்து ஆவணப்படுத்தி வருங்காலத் தலைமுறைக்கு விட்டுச் செல்ல வேண்டும்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism