Published:Updated:

1,200 ஆண்டுகள் பழைமையான கல் செக்கு மற்றும் பிற்காலத்திய கல்வெட்டுகள் கண்டெடுப்பு... சிறப்பு என்ன?

"'ஸ்ரீ குந்தை காடன்முரி' என்பவர் இந்தக் கல்செக்கை செய்து தந்துள்ளார் என்பது இதன் பொருளாகும். செய்வித்தது என்ற சொல்லில் வரும் 'ய்' என்ற யகரம் இக்கல்வெட்டில் வித்தியாசமாக வெட்டப்பட்டுள்ளது."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள நாகலூரில் சுமார் 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான செக்கு கல்வெட்டு, 940 ஆண்டுகள் பழைமையான சோழர்கால கல்வெட்டு மற்றும் 17-ம் நூற்றாண்டு கல்வெட்டு ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. இவற்றை சேலம் வரலாற்று ஆய்வுமையத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர்களான விழுப்புரம் வீரராகவன், ஆறகளூர் பொன்.வெங்கடேசன், சங்கீதா ஆகியோர் இணைந்து கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் தகவல் பகிர்ந்து கொண்ட ஆறகளூர் பொன்.வெங்கடேசன், "தமிழரசன் என்பவர் கொடுத்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி அருகேயுள்ள நாகலூரில் சென்று, அங்கிருந்த சில கல்வெட்டுகளை ஆய்வு மேற்கொண்டோம். பிற்கால பல்லவர் காலத்தைச் சேர்ந்த செக்கு கல்வெட்டு, முதலாம் பராந்தகச் சோழன் கல்வெட்டு மற்றும் தொண்டைமான் காலத்திய கல்வெட்டு இருப்பதை கண்டறிந்தோம்.

பழங்காலத்தில் மின்சாரம் இல்லாததால் விளக்குகள் எரிப்பதற்கும், சமையலுக்கும் எண்ணெயின் தேவை மிக மிக முக்கியமானதாக இருந்துள்ளது. எண்ணெய் எடுப்பதற்கு கல்லால் ஆகிய சிறு உரல் போன்ற கல்செக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை, கோயில் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கென செய்து தானமாகத் தரப்பட்டன. செக்கில் எண்ணை ஆட்டுபவர்கள் செக்குக்குக் கூலியாக ஒரு குறிப்பிட்ட அளவு எண்ணெயை கோயிலுக்கோ அல்லது அரசுக்கோ செலுத்தியிருப்பர்.

கல்செக்கு
கல்செக்கு

குறுநில தலைவர்களாக, ஊர் முக்கியஸ்தர்களாக இருக்கும் சிலர் இது போன்ற கல்செக்கை உருவாக்கி தானமாக கொடுத்துள்ளனர். உடன்பிறந்தவர்கள், உறவினர்கள், நலம் பெறவும் வேண்டுதலின் பேரில் இத்தகைய செக்குகள் தானமாக தரப்பட்டுள்ளன. இப்படித் தானமாக தரும்போது அதைச் செய்து கொடுப்பவர் தன் ஊர், தந்தை பெயருடன் தன் பெயரையும் கல்வெட்டாக அந்தக் கல்செக்கில் பொறித்து தரும் வழக்கமும் இருந்துள்ளது.

செஞ்சி: அழியும் தறுவாயில் இருக்கும் பல்லவர் காலத்துப் பொக்கிஷம் காக்கப்படுமா? வலுக்கும் கோரிக்கை!

நாகலூர் செக்கு கல்வெட்டு:

நாகலூரில் மாரியம்மன் கோயில் தெருவில், சாலையில் ஓரத்தில் இருந்த ஒரு கல்செக்கை ஆய்வு செய்தோம். கிழக்கு திசையில் சாய்ந்தபடி புதையுண்ட நிலையில் அந்தக் கல்செக்கு காணப்பட்டது. இதன் வெளிவிளிம்பு விட்டம் 67 செ.மீ, உள் விளிம்பு 54 செ.மீ, நடுவில் உள்ள குழியின் ஆழம் 32 செ.மீ என உள்ளது. உரலின் மையப்பகுதியில் ஒரு வரியில் கல்வெட்டு வளைவாக பொறிக்கப்பட்டுள்ளது. அதன் எழுத்தமைதியைக் கொண்டு பார்க்கும்போது, பிற்கால பல்லவர் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கும் எனக் கருதலாம். சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டு இது. இது தமிழ் மற்றும் கிரந்த மொழியில் எழுதப்பட்டுள்ளது. 'ஸ்ரீ' என்ற எழுத்துடன் அக்கல்வெட்டு துவங்குகிறது.

‘ஸ்ரீ குந்தை காடன்முரி செய்வித்தது'

என அக்கல்வெட்டில் வெட்டப்பட்டுள்ளது. இதில் 'காடன்முரி' என்பது கல்செக்கை தானம் கொடுத்தவரின் பெயராகவும், 'குந்தை' என்பது அவரின் தந்தை பெயராகவும் இருக்கலாம் என கருதமுடிகிறது. 'ஸ்ரீ குந்தை காடன்முரி' என்பவர் இந்தக் கல்செக்கை செய்து தந்துள்ளார் என்பது இதன் பொருளாகும். செய்வித்தது என்ற சொல்லில் வரும் 'ய்' என்ற யகரம் இக்கல்வெட்டில் வித்தியாசமாக வெட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

5000 ஆண்டுகளுக்கு மேல் பழைமை; முன்னோர்கள் ஆயுதம் தீட்டிய இடம் கண்டுபிடிப்பு! வரலாறு சொல்வது என்ன?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதலாம் பராந்தக சோழன் கல்வெட்டு:

நாகலூரில் வரதராஜ பெருமாள் கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயிலின் கருவறையில் உள்ள பெருமாள் சிலைக்கு முன் பதிக்கப்பட்டுள்ள ஒரு கல்லில், 14 வரிகளில் கல்வெட்டு சிதைந்த நிலையில் உள்ளது. இதில் 5 வரிகள் மட்டுமே படிக்கும் நிலையில் உள்ளன. இக்கல்வெட்டின் நீளம் 88 செ.மீ, அகலம் 64 செ.மீ. இந்தக் கல்வெட்டு 1080 ஆண்டுகளுக்கு முற்பட்ட முதலாம் பராந்தக சோழனின் 33ம் ஆட்சி ஆண்டை சேர்ந்தது. கி.பி 940-ம் ஆண்டு இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.

கல்வெட்டு
கல்வெட்டு
'ஸ்ரீ மதுரை கொண்ட கோப்பரகேசரி வர்மருக்கு' என்ற முதலாம் பராந்தக சோழனின் மெய்கீர்த்தியோடு இக்கல்வெட்டு துவங்குகிறது. இப்போது நாகலூர் என்று அழைக்கப்படும் இவ்வூர், இந்தக் கல்வெட்டில் 'நாவலூர்' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. நாவல் மரங்கள் சூழ்ந்த பகுதியாக இருந்ததால் நாவலூர் என்று பெயர் அமைந்திருக்கலாம். 17-ம் நூற்றாண்டு கல்வெட்டிலும் நாவலூர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. 300 ஆண்டுகளுக்கு முன்புதான் நாவலூர் என்ற பெயர் 'நாகலூர்' என மருவியுள்ளது. அக்காலத்தில் பரனூர் கூற்றத்தில் இந்த நாவலூர் இருந்துள்ளது.

தொண்டைமான் கல்வெட்டு:

நாகலூர் வரதராஜபெருமாள் கோயில் கருவறையின் வெளிப்புறத்தில், தெற்குபக்க சுவரில் 5 வரிகளில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. எழுத்தமைதியை கொண்டு இது 17ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதலாம். இந்தக் கல்வெட்டிலும் இந்த ஊர் நாவலூர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. 'ஆனந்ததாண்டயத்தொண்டைமான்' என்பவர் இந்தப் பெருமாள் கோயிலுக்கு ஆயிரம் குழி நஞ்சை நிலத்தை சர்வமாநியமாக தானம் செய்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. சந்திரன் உள்ளவரை இந்தத் தானம் நிலைத்திருக்க வேண்டும் எனச் சொல்லப்பட்டுள்ளது.

கல்வெட்டு
கல்வெட்டு

மிகப் பழைமைவாய்ந்த இந்தச் செக்கு கல்வெட்டை பாதுகாக்க அரசு முயற்சி எடுக்கவேண்டும். இப்பகுதியில் மேலும் ஆய்வு செய்தால் இன்னும் பல வரலாற்று தடயங்கள் கிடைக்கலாம்" என்றார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு