Published:Updated:

தூத்துக்குடி: ஆதிச்சநல்லூரில் `எலும்புக்கூடு’; சிவகளையில் `நெல்மணிகள்’; தொடரும் அகழாய்வுப் பணிகள்!

அகழாய்வுப் பணி
அகழாய்வுப் பணி

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் குழந்தையின் எலும்புக்கூடும், சிவகளை அகழாய்வில் நெல்மணிகளும், அரிசியும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வுப்பணியில் அகழாய்வு கள அதிகாரிகள் தலைமையில் தொல்லியல்துறை ஊழியர்கள், ஆய்வுமாணவர்கள், உள்ளூர் மக்கள் என 50 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.

’உலக நாகரிகத்தின் தொட்டில்’ என அழைக்கப்பட்ட ஆதிச்சநல்லூர் மற்றும் அதன் அருகிலுள்ள சிவகளை பகுதியில் தொடர் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தொல்லியல் ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணிக்காக ரூ.28 லட்சமும், சிவகளை அகழாய்வுப் பணிக்காக ரூ.32 லட்சமும் அரசு நிதி ஒதுக்கியது. அதன்படி, ஆதிச்சநல்லூரில் ஏற்கெனவே 5 கட்ட அகழாய்வுப்பணிகள் நடந்து முடிந்த நிலையில், 6வது கட்ட அகழாய்வும் சிவகளையில் முதல் கட்ட அகழாய்வுப் பணிகளும் கடந்த மார்ச் 15-ம் தேதி தொடங்குவதாக இருந்தது.

அகழாய்வுப் பணி
அகழாய்வுப் பணி

ஆனால், கொரோனா ஊரடங்கினால் ஒத்திவைக்கப்பட்டு, கடந்த மே 25-ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. அகழாய்வு கள அதிகாரிகள் பிரபாகர், தங்கத்துரை ஆகியோரின் தலைமையில் தொல்லியல்துறை ஊழியர்கள், ஆய்வு மாணவர்கள், உள்ளூரைச் சேர்ந்த மக்கள் என 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

சிவகளை பரம்பு திரட்டுப்பகுதியில் முன்னோர்கள் வாழ்ந்த பகுதியை கண்டறியும் அகழாய்வுப்பணி, கடந்த ஜூன் 28-ம் தேதி துவங்கியது. இப்பகுதியில் தோண்டப்பட்ட 26 குழிகளிலிருந்து 31 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் 10 தாழிகள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து எடுக்கப்பட்ட சிறிய கிண்ணங்களில் இருந்து நெல்மணிகள், அரிசி, மனித உடல் எரிக்கப்பட்ட சாம்பல் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நெல்மணிகள், அரிசி,பற்கள்
நெல்மணிகள், அரிசி,பற்கள்

அத்துடன், மனித தாடை எலும்புகளுடன் கூடிய பற்கள் உள்ளிட்டவைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை சுமார் 3,000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இவை, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு மரபணு பரிசோதனை நடத்தப்பட உள்ளதாகவும், இதன் மூலம் சிவகளை மக்களின் தொன்மையும், பழைமையும் தெரியவரும் எனத் தொல்லியல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கீழடி அகழ்வாய்வு பற்றி நாம் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்? #MyVikatan

”சிவகளையைப் பொறுத்தவரையில் பழங்கால மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழிகள், கறுப்பு - சிவப்பு மண்பாண்டங்கள், பழங்கால மற்றும் இடைக்கால கருவிகள், எலும்புகள், தமிழ் வட்டெழுத்துக்கள், தாமிரபரணி பாய்ந்தோடிய பாதைகள் ஆகியவை புதைந்து கிடக்கின்றன. அதிகமான பாறைக் கிண்ணங்கள், இரும்புத் தாதுக்கள், குவார்ட்ஸ் வகை கற்களும் அதிகமாகக் காணப்படுகின்றன. தொடர் அகழாய்வினால், கீழடியைப் போன்றே தாமிரபரணி நாகரீகம் குறித்த தகவல்களும் வெளியாகும்" என்கின்றனர் தொல்லியல் ஆர்வலர்கள்.

குழந்தையின் எலும்புக்கூடு
குழந்தையின் எலும்புக்கூடு

சிவகளையைப் போன்றே ஆதிச்சநல்லூரில் நடந்து வரும் அகழாய்வுப் பணியிலும் பல்வேறு பழம்பொருள்கள் கிடைத்துள்ளன. இதில், 2 முதல் 3 வயது வரை மதிக்கத்தக்க குழந்தையின் எலும்புக்கூடு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகளை, ஆதிச்சநல்லூர்ப் பகுதிகளில் அகழாய்வுப்பணிகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் வரலாறு, அகழாய்வு பயிலும் மாணவர்களும் ஆர்வத்துடன் அகழாய்வுப் பணிகளை அவ்வப்போது பார்வையிட்டு வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு