Published:Updated:

உத்தரமேரூர்: சோழர் காலக் கோயிலில் தங்கப்புதையல் கண்டெடுப்பு! - தொல்லியல் துறையினர் ஆய்வு

உத்தரமேரூர் கோவிலில் கிடைத்த தங்கப்புதையல்
உத்தரமேரூர் கோவிலில் கிடைத்த தங்கப்புதையல்

உத்தரமேரூரில் உள்ள பழமைவாய்ந்த கோயிலில் பழங்காலத்துத் தங்க நாணயங்கள் மற்றும் நகைகள் கிடைத்துள்ளது. கிடைத்துள்ள நகைகளை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் பழமைவாய்ந்த கொளம்பேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. தற்போது, இந்த கோயிலைச் சீரமைத்து புதிதாகக் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சீரமைக்கும் பணிக்காக கருவறை பகுதியில் இடிக்கும் போது, படியின் இடுக்குகளிலிருந்து துணியால் சுற்றப்பட்ட ஒரு சிறிய மூட்டை கிடைத்தது. அந்த துணியை பிரித்து பார்க்கும் போது, ஏராளமான தங்க நாணயங்கள் மற்றும் ஆபரணங்கள் இருந்தன. கிடைத்த நகைகளின் எடையிட்ட போது 561 கிராம் இருந்தது.

உத்தரமேரூர் கோவிலில் கிடைத்த தங்கப்புதையல்
உத்தரமேரூர் கோவிலில் கிடைத்த தங்கப்புதையல்

இதனிடையே, கிடைத்த தங்க நகைகளைக் கொண்டு கோயில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடிவுசெய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கோயிலில் தங்கநகைகள் கிடைத்தது குறித்து அந்த பகுதியினர் சிலர் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த உத்திரமேரூர் வட்டாட்சியர், கிடைத்த தங்கத்தைப் பறிமுதல் செய்ய முற்பட்டனர். இதற்கு, கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் எதிர்ப்பு கிளம்பியது. ஊர்மக்கள் சார்பில் இந்த கோவில் இந்து அறநிலையத்துறையின் கீழ் வரவில்லை என்றும் இந்த நகைகளைக் கோயிலிலேயே வைக்கும்படியும் கூறினார்.

பூமியில் கண்டெடுக்கும் புதையல் அரசுக்குச் சொந்தம் என்று அதிகாரிகள் எடுத்துக்கூறியும் அதை மக்கள் ஏற்க மறுத்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் காவல்துறை உதவியுடன் அந்த தங்கம் கோயிலிலிருந்து, உத்திரமேரூர் கருவூலத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது. மேலும், தங்கத்தை வேறு யாரும் கொண்டு சென்றுள்ளாரா என்ற விசாரணையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

உத்தரமேரூர் கோவிலில் கிடைத்த தங்கப்புதையல்
உத்தரமேரூர் கோவிலில் கிடைத்த தங்கப்புதையல்

மிகவும் பழமைவாய்ந்த கோவிலில் யாருடைய அனுமதியும் இல்லாது எப்படி இடித்தார்கள் என்றும், கோயிலிலிருந்த சிலைகள் எங்குச் சென்றது என்றும் வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், அந்த கோயிலை தொல்லியல் துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளும் பணிகளும் நடந்து வருகின்றன. கிடைத்துள்ள நகைகளின் தொன்மை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆய்வின் முடிவில் நகைகள் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது தெரியவரும்.

உத்தரமேரூர் கோவிலில் கிடைத்த தங்கப்புதையல்
உத்தரமேரூர் கோவிலில் கிடைத்த தங்கப்புதையல்

இந்த சம்பவம் தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், "கிடைத்த நகைகள் 100 வருடத்திற்கும் பழமையான நகைகள் என்றால் அது அரசுக்குத் தான் சொந்தம். அந்த நகைகளை அருங்காட்சியகத்தில் வைப்பதா அல்லது, கோயிலில் வைப்பதா என்பதைத் தமிழக அரசு முடிவு செய்யும்" என்று கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு