Published:Updated:

ஸ்ரீரங்கம் கோயிலில் இருப்பது சீனர் சிற்பமா? வரலாற்றாய்வாளர் என்ன சொல்கிறார்?

ஸ்ரீரங்கம் கோயில் சிற்பம்
ஸ்ரீரங்கம் கோயில் சிற்பம்

ஸ்ரீரங்கம் கோயில் மண்டபத்தில், குதிரையின்கீழ் வீரர் ஒருவர் வாளால் மற்றொரு வீரரைக் குத்துவது போன்ற வடிவமைப்புடன் சிற்பமொன்று இருக்கிறது. வாளால் குத்தும் வீரர் சீனர் என்றும், குத்தப்பட்ட வீரர் நாயக்கர் கால படைவீரர் எனவும் செய்திகள் உலவின. இது உண்மையா?

கடந்த 3 மாதங்களாக நம் தேசம் கொரோனாவால் ஏற்பட்ட இன்னல்களில் சிக்கித் தவித்து வருகிறது. நோய்த் தொற்று குறித்த அச்சம், தொழில் முடக்கம், வேலையிழப்பு என பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர் மக்கள். இந்த நிலையில் கடந்த வாரம் மற்றுமொரு புதிய செய்தி மக்களை கவலைக்குள்ளாக்கியது. இந்திய எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தின் ஊடுருவல் குறித்த செய்திதான் அது. நமது ராணுவ வீரர்கள் 20 பேர் சீன ராணுவத்தால் எல்லையில் மரணித்த செய்தி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சமூக வலைதளங்களெங்கும் தற்போது அதுவே பேச்சாக இருக்கிறது.

இந்த நிலையில் நேற்றைய தினம் சமூக வலைதளங்களில் சிற்பம் ஒன்றின் புகைப்படம் பதிவிடப்பட்டது. திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோயிலில் உள்ள அந்தச் சிற்பம், முன்னங்கால்களைத் தூக்கி நிற்கும் குதிரையின்கீழ் வீரர் ஒருவர் வாளால் மற்றொரு வீரரைக் குத்துவது போன்ற வடிவமைப்புடன் இருக்கும். வாளால் குத்தும் வீரர் சீனர் என்றும், குத்துப்பட்ட வீரர் நாயக்கர் கால படைவீரர் எனவும் சிலர் எழுதினர். சீனர்களின் வஞ்சகம் குறித்து, அந்தக்காலத்திலேயே நம் முன்னோர் பதிவு செய்து வைத்திருக்கும் ஆதாரம்தான் அந்தச் சிற்பம் என்றும் சிலர் குறிப்பிட்டனர்.

உண்மையில் இந்தச் சிற்பம் என்ன சொல்ல வருகிறது? அந்தச் சிற்பத்தில் இருப்பவர் சீனர்தானா? பேராசிரியர் சா.பாலுசாமியிடம் கேட்டோம்.

பேராசிரியர் சா. பாலுசாமி தமிழகச் சுவரோவியங்கள், சிற்பங்கள் குறித்து பல ஆய்வுகளை மேற்கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். பாரதிபுத்திரன் என்ற பெயரில் பல ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார். திருப்புடைமருதூர் ஓவியங்கள் குறித்த இவர் எழுதியுள்ள `சித்திரம் கூடம்’ என்ற ஓவிய ஆய்வு நூல் தமிழில் வெளிவந்த மிகமுக்கியமான ஆவணத்தொகுப்பு.

சா.பாலுசாமி
சா.பாலுசாமி

"நீங்கள் குறிப்பிடுகிற சிற்பம் ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோயிலில் உள்ள சேஷராயன் மண்டபத்தில் அமைந்துள்ளது. சேஷராயன், விஜயநகரப் பேரரசில் தளவாய், பிரதானி போன்ற பொறுப்பில் இருந்தவர். அவருடைய பங்களிப்புதான் அந்தச் சிற்பம். அந்தச் சிற்பத்தில் வாளை கையில் வைத்திருப்பவர் சீனர் அல்ல. அவர் ஒரு போர்ச்சுகீசியர். வாளை கையில் வைத்திருப்பவர் அணிந்துள்ள மேல்சட்டை, கால் சராய், தொப்பி இவற்றை வைத்துப் பார்க்கையில் அவர் போர்ச்சுகீசியர் என்பது தெளிவாகும்.

அந்தச் சிற்பம் விஜயநகரப் பேரரசு காலகட்டத்தைச் சேர்ந்தது. சங்ககாலம் தொட்டே குதிரைகள் நமது போர்களில் முக்கிய பங்காற்றியுள்ளன. குதிரைகளை அரேபியர்கள் நமக்கு விற்பனை செய்தார்கள். சங்ககாலத்தில் அரேபியர்களுக்கு `சோனகர்கள்' என்று பெயர். ஒரு கட்டத்தில் அரேபியர்கள் கப்பலில் கொண்டு வரும் குதிரைகளை துறைமுகத்தில் உள்ள போர்ச்சுகீசியர்கள் வாங்கிக்கொள்வர். வாங்கிய அந்தக் குதிரைகளை போர்ச்சுகீசியர்கள் உள்நாட்டுக்குள் வியாபாரம் செய்வர். கிருஷ்ணதேவராயர் ஆயிரக்கணக்கில் குதிரைகளை இவ்வாறு வாங்கியிருக்கிறார். இப்படி வியாபாரம் செய்த போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்களுக்கு கூலிப்படைகளாகவும் வேலை செய்திருக்கிறார்கள். போர்ச்சுகீசியர்கள் துப்பாக்கியைக் கையாளத் தெரிந்தவர்களாகவும், போர்திறம் மிக்கவர்களாக இருந்தவர்களாகவும் இருந்ததால் நாயக்கர்களும்கூட அவர்களை படைகளில் பயன்படுத்திக் கொண்டனர்.

பல்லவர்கள் காலத்தில் யாளி சிற்பம் இருந்தது போல, விஜயநகரப் பேரரசு, நாயக்கர்கள் காலகட்டத்தில் குதிரைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிற்பங்கள் உருவாக்கப்பட்டன. ஸ்ரீரங்கத்தில் உள்ள அந்தச் சிற்பமும் விஜயநகரப் பேரரசின் காலகட்ட சிற்பம். குதிரைகள் முன் கால்களைத் தூக்கி நிற்க, அதனடியில் ஒரு வீரன் மற்றொரு வீரனை வாளால் குத்துவது போலவும், அது அவனது காலை துளைத்துக்கொண்டு வெளியேறுவது போலவும் உள்ளது. விஜயநகர பேரரசால் போரின் திறத்தை வெளிப்படுத்த உருவாக்கப்பட்ட சிற்பம் அது. அனுமர், வீரபத்ரர் போன்ற சிற்பங்களையும் போர்குணத்தின் வெளிப்படாகவே வடித்தார்கள். போர்ச்சுகீசியர்கள் பங்கேற்றிருந்த படையில் நிகழ்ந்த ஒரு போர் காட்சிதான் அது. சீனர், நாயக்கர்கள் என்றெல்லாம் குழப்பமடையத் தேவையில்லை. நாயக்க மன்னர்கள் போரில் பங்கேற்ற சிற்பங்கள் நம்மிடம் இல்லை. ஓவியங்கள் மட்டுமே உள்ளன. சீனர் சிற்பம், ஸ்ரீரங்கம் கோயில் மண்டபத்தில் இடம்பெற வாய்ப்பேயில்லை.

ஸ்ரீரங்கம் கோயில் சிற்பம்
ஸ்ரீரங்கம் கோயில் சிற்பம்

இக்கட்டான சூழல்களில் இதுபோன்ற வதந்திகள் நோய் கிருமிகளைவிட வேகமாகப் பரவுகின்றன. அதன் உண்மைத் தன்மையை ஆராய வேண்டியது அவசியம்.

அடுத்த கட்டுரைக்கு