Published:Updated:

கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வுப் பணி துவக்கம்... இதுவரை 6 கட்ட ஆய்வில் கிடைத்தவை என்னென்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கீழடி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்...
கீழடி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்...

கீழடியில் ஏழாம் கட்ட தொல்லியல் அகழாய்வுப் பணியினை முதல்வர் காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.

மதுரை அருகே, சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட கீழடியில் இன்று (13.02.2021) ஏழாம் கட்ட அகழாய்வு பணிகளைத் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலி காட்சி மூலம் துவங்கி வைத்தார். துவக்க விழாவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் நேரடியாகக் கலந்துகொண்டார். கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய நான்கு இடங்களிலும் அகழாய்வு ஆராய்ச்சி ஆறு முதல் எட்டு மாதங்களுக்குள் நடைபெற உள்ளது. தொடர்ந்து கீழடியில் சர்வதேச தரத்தில் ரூ.12.21 கோடி மதிப்பீட்டிலான தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கும் கட்டடப் பணிகளும் நடைபெற்றுவருகின்றன.

கீழடியில் அகழாய்வுப் பணி துவங்கியபோது...
கீழடியில் அகழாய்வுப் பணி துவங்கியபோது...

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழைமையானப் பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தின் அகழ்வைப்பகத்தில் வைக்கப்படும். இதன் மூலம் அறிஞர் பெருமக்கள், தொல்லியல் வல்லுநர்கள், தொல்லியல் ஆர்வலர்கள், அயல்நாட்டு வல்லுநர்கள், பொதுமக்கள் ஆகியோர் 2,600 வருட பழைமையான பண்பாட்டு சான்றுகளைப் பார்வையிட்டு பயனடையக்கூடிய வரலாற்று சிறப்பு மிக்க இடமாக இது அமையும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஆட்சியருடன், அகழ் ஆராய்ச்சித்துறை துணை இயக்குநர் சிவானந்தம், வருவாய் கோட்டாச்சியர் முய்துக்கலூவன், கீழடி ஊராட்சி மன்றத்தலைவர் வெங்கடசுப்பிரமணியன், கொந்தகை ஊராட்சி மன்ற தலைவர் தீபலெட்சுமி, அரசு அலுவலர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

கீழடியில் கடந்த 2014 -ம் ஆண்டு மத்திய தொல்லியல் துறையின் சார்பாக அகழாய்வு பணிகள் துவங்கின. முதல் மூன்று கட்ட அகழாய்வை மத்திய தொல்லியல்துறை நடத்தியது. அதற்கு பின் 4, 5, 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் தமிழக தொல்லியல் துறையின் சார்பாக நடைபெற்றன.

கொந்தகை தாழி
கொந்தகை தாழி

முதல் மூன்று கட்ட அகழாய்வுகளில் 7818 தொல்லியல் எச்சங்களும், தமிழகத் தொல்லியல் துறை மேற்கொண்ட நான்காம் கட்ட அகழாய்வில் 5820 தொல்லியல் எச்சங்களும், ஐந்தாம் கட்ட அகழாய்வில் 900 எச்சங்களும் கிடைத்தன. அதே போல் ஆறாம் கட்ட அகழாய்வில் கீழடியில் 950-ம், கொந்தகையில் 21-ம், மணலூரில் 29-ம், அகரத்தில் 786-ம் என மொத்தம் 1786 தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. பழைமையான ஈமக்காடான கொந்தகையில் 40 முதுமக்கள் தாழிகளும், மேற்கண்ட நான்கு இடங்களில் இதுவரை 128 கரிமப் படிமங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கீழடி, கொந்தகை 6ம் கட்ட அகழாய்வின் கடைசி நாள்... பிரத்யேகப் படங்கள்! #SpotVisit

6-ம் கட்ட அகழாய்வில் இதுவரை தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகள், சூது பவளம், அகேட், அமெதிஸ்ட் போன்ற விலை மதிப்பற்ற மணிகள், சுடுமண்ணாலான ஆமை வடிவமைப்பு இடம் பெற்ற முத்திரைகளும் கிடைத்தன. மாட்டு இனத்தைச் சேர்ந்த விலங்கு ஒன்றின் விலா எலும்பு, எடைக்கற்கள், செங்கல் கட்டுமானங்கள், ஒரே முதுமக்கள் தாழியில் 10 எண்ணிக்கைகள் கொண்ட பளபளப்பான சிவப்பு நிற பானைகள் மற்றும் கறுப்பு சிவப்பு நிற பானைகள் கிடைத்தன.

கீழடி 7ம் கட்ட அகழாய்வு - காணொலி காட்சி
கீழடி 7ம் கட்ட அகழாய்வு - காணொலி காட்சி

ஏழுக்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள், மண்டை ஓடுகள், நுண் கற்காலத்தைச் சேர்ந்த மெல் அழகு கத்திகள், நுண் கருவிகள் நீக்கப்பட்ட வெட்டு முகப்புடன் கூடிய செர்ட் வகை மூலக்கூறு, வழவழப்பு தன்மையுடைய கல் மழு கிடைத்தன. 300 மில்லி கிராம் எடையுடைய தங்க நாணயம், கரிம மயமான நெல்மணிகள், செலடான் வகை சீன மண்பாண்ட ஓடு, புகைப்பான்கள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. 6-ம்கட்ட ஆய்வில் மூன்று உறைகிணறுகள் கண்டறியப்பட்டன என்பதும் கூடுதல் தகவல்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு