Published:Updated:

கீழடி: அகழாய்வில் கிடைத்த எலும்புக்கூடுகள்... மரபணு ஆய்வுக்கு உட்படுத்தும் பணிகள் தொடக்கம்!

கீழடியில் கிடைத்த எலும்புக் கூடுகள் மரபணு ஆய்வுக்கு உட்படுத்தும் பணி தொடங்கியதன் மூலம் ஆய்வுப்பணி அடுத்த கட்டத்துக்குச் சென்றுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 6 ஆண்டுகளுக்கு முன் மத்திய தொல்லியல்துறை தொடங்கிய வைகைக் கரை அகழாய்வில் தமிழர்களின் நாகரிக வளர்ச்சியின் அடையாளங்கள் ஆயிரக்கணக்கில் கிடைத்ததன் மூலம் தமிழரின் பெருமை உலகமெங்கும் நிரூபிக்கப்பட்டது. கீழடி தமிழர் நாகரீகத்தின் தாய்மடி என்று போற்றப்படுகிறது.

ஆனால், 3-ம் கட்ட அகழாய்வுப் பணியோடு ஆய்வை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள, 4-ம் கட்டத்திலிருந்து அகழாய்வுப் பணியைத் தமிழகத் தொல்லியல் துறை மேற்கொண்டு வருகிறது.

`கொந்தகை' - கீழடி
`கொந்தகை' - கீழடி

கீழடியைத் தொடர்ந்து அருகேயுள்ள கொந்தகை மற்றும் அகரம் கிராமத்தில் 7-ம் கட்ட அகழாய்வுப் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

பிப்ரவரி 13-லிருந்து நடந்துவரும் அகழாய்வில் இதுவரை 3 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன.

இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பாக இங்கு மேலும் சில முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன.

முழுவதும் மூடப்பட்ட நிலையிலான தாழிகளில் கிடைத்த எலும்பு கூடுகளை மரபணு ஆய்வுக்காக வெளியில் எடுக்கும் பணியைத் தற்போது தொடங்கியுள்ளனர்.

கீழடியில் கிடைத்த எலும்புக்கூடு
கீழடியில் கிடைத்த எலும்புக்கூடு

தொல்லியல் துறை இயக்குனர் சிவானந்தம், இணை இயக்குனர் பாஸ்கரன், அகழாய்வு பணி ஆலோசகர் சேரன் ஆகியோர் உள்ளிட்ட தொல்லியல் அலுவலர்களின் முன்பாக மதுரை காமராசர் பல்கலைக்கழக மரபணுவியல் துறைத் தலைவர் குமரேசன் தலைமையில் இப்பணி துவங்கியது.

மனித எலும்புகளின் காலத்தை ஆய்வு செய்ய மதுரை காமராசர் பல்கலைக்கழக மரபணுத்துறை மூலம் ஆய்வுகள் நடத்தப்படும் எனத் தொல்லியலாளர்கள் தெரிவித்தனர்.

7-ம் கட்ட கீழடி அகழாய்வில் இதுவரை 7 முதுமக்கள் தாழிகளுடன் சுடுமண்ணால் செய்யப்பட்ட தாயக்கட்டைகள், உழவுக்கருவி, வண்ண பானை ஓடுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தொடரும் ஆய்வில் இன்னும் பல அதிசயங்கள் இங்கு கிடைக்கலாம் என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு