Published:Updated:

குறி சொன்ன கோடங்கிக்குக் கோயில் கட்டிய சேதுபதி மன்னர்! வரலாற்றைப் பாதுகாக்குமா அரசு?!

சிதிலமடைந்து கிடக்கும் கோவிந்தன் கோயில்
சிதிலமடைந்து கிடக்கும் கோவிந்தன் கோயில் ( விகடன் )

இவ்வரலாற்றுக்குச் சான்றாக உள்ள கோயில், கோவிந்தன் - கோடங்கி ஆகியோர் சிற்பங்களும் 300 ஆண்டுகள் பழைமையானதாக இருக்கலாம். இதேபோன்ற கோவிந்தன் கோயில் திருப்புல்லாணி அருகில் பள்ளபச்சேரியில் உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் கருங்கலக்குறிச்சி அருகில் தற்போது பேச்சில்லா கிராமமாக உள்ள எருமைப்பட்டியைச் சேர்ந்த ஒரு கோடங்கி சொன்ன குறியால் மனம் மகிழ்ந்த சேதுபதி மன்னர், அவருக்குக் கோயில் எழுப்பி சிலை அமைத்து சிறப்பு செய்துள்ளார். இடிந்து கிடக்கும் கோயிலில் இருக்கும் அழியாத மரச்சிற்பத்தையும், கைகூப்பி நிற்கும் கோடங்கி மாயழகனின் கற்சிற்பத்தையும் பாதுகாத்து சேதுபதி மன்னரின் வரலாற்றை வருங்கால சந்ததியினர் அறிந்துகொள்ள அரசு நடவடிக்கை எடுக்க தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிதிலமடைந்து கிடக்கும் கோவிந்தன் கோயில்
சிதிலமடைந்து கிடக்கும் கோவிந்தன் கோயில்
விகடன்

அழிந்துபோன எருமைப்பட்டியின் அழியாத வரலாறு குறித்து பேசிய கருங்கலக்குறிச்சியைச் சேர்ந்த முதுகலை தமிழாசிரியர் சண்முகநாதன், "மதுரை அழகர் கோவிலிலிருந்து ஒரு தம்பட்டம் மாட்டை (கோயில் மாடு) ஓட்டிக்கொண்டு ஊர் ஊராகப் பயணம் செய்து வந்த ஒரு முதியவர், ஒவ்வொரு வீட்டின் முன்பும் அழகர்மலை கோவிந்தனின் பெருமையைச் சொல்லி அருள்வாக்கும் கூறி வந்தார். பல ஊர்கள் பயணம் செய்த அவர் ஒருநாள் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகிலுள்ள எருமைப்பட்டிக்கு வந்து அருள்வாக்கு கூறினார்.

ஒரு பிரம்பை தரையில் ஊன்றி அதில் மாட்டின் கயிற்றை கட்டியிருந்தார். இரவு அவ்வூரில் தங்கியிருந்தவர் மறுநாள் காலையில் வேறு ஊருக்குப் புறப்படுவதற்காக தரையில் ஊன்றிய பிரம்பை பிடுங்க முயன்றுள்ளார். ஆனால் பிரம்பைப் பிடுங்க முடியவில்லை. இறைவனை வேண்டி அருள் வந்து ஆடிய அவர், 'இவ்வூர் மக்களைக் காக்க கோவிந்தன் வந்துருக்கேன்' என கூறிவிட்டு திடீரென மாயமாகியுள்ளார். இதை நேரில் பார்த்த அவ்வூர் மாயழகன், கோவிந்தனின் அருளால் குறி சொல்லும் கோடங்கியானார்.

கோடங்கி சிலை
கோடங்கி சிலை
விகடன்

அக்காலத்தில் ராமநாதபுரம் சேதுபதி மன்னரின் மனைவி உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்திருக்கிறார். ராணியின் உடல்நிலை குறித்து சேதுநாட்டின் கோடங்கிகள் பலரை அழைத்து பரிகாரம் கேட்டபோது, யாருக்கும் சரியாக கணிக்கத் தெரியவில்லை. அரண்மனை மருத்துவனின் கோரிக்கைபடி கோடங்கி மாயழகனை மன்னர் தனது அரண்மனைக்கு அழைத்திருக்கிறார். அங்கு தரையில் அமர்ந்து இரண்டு, மூன்று முறை சோலிகள் உருட்டி குறிபார்த்ததின் மூலம் ராணிக்கு வந்த நோயைச் சொல்லி, அதற்கான மருந்தும் சொல்லி, குறியும் சொல்லி முடித்து திருநீறை அள்ளிக் கொடுத்து ராணிக்குப் பூசச் சொன்னாராம் கோடாங்கி.

திருநீறைப் பூசிய சில நொடிகளில் ராணி எழுந்து நடந்திருக்கிறார். இதனால் மனம் மகிழ்ந்த சேதுபதி ராஜா, கோடங்கி மாயழகனிடம் "உங்களுக்கு என்ன வேணும் கேளுங்க சாமி" என்று சொல்லியிருக்கிறார். "நீங்க நல்லா இருந்தா போதும் ராஜா. எனக்கு எதுவும் வேண்டாம்" என ஆசி கூறி அங்கிருந்து கிளம்பினாராம் கோடங்கி. சில நாள்களுக்குப் பின் எருமைப்பட்டிக்கு வந்த சேதுபதி ராஜா, அங்கு ஒரு சிறிய கோயிலை எழுப்பி, மரத்தாலான கோவிந்தன் சிலையை அமைத்து வழிபட்டுள்ளார். கோடங்கி மாயழகன் காலத்துக்குப் பின் அவருக்கு கருங்கல்லால் சிலை வைத்து தன் நன்றிக்கடனை செலுத்தியுள்ளார் சேதுபதி ராஜா" என்றார்.

கோவிந்தன் மர சிற்பம்
கோவிந்தன் மர சிற்பம்
விகடன்

கோடங்கி நினைவாக கட்டப்பட்டு சிதிலமடைந்து கிடக்கும் கோயிலை ஆய்வு செய்த ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு இது குறித்து கூறுகையில், "தேக்கு மரத்தாலான கோவிந்தன் சிற்பம் 2 அடி உயரமும், ¾ அடி அகலமும் உள்ளது. காலைத் தூக்கிய நிலையில் உள்ள குதிரையின் மேல் அமர்ந்திருக்கும் கோவிந்தன் சிற்பம் இருபுறமும் நம்மைப் பார்ப்பது போல செதுக்கப்பட்டுள்ளது. கோடங்கி மாயழகனின் கற்சிற்பம் கொண்டையிட்ட தலையுடனும் கும்பிட்ட கைகளுடனும் காணப்படுகிறது.

கருங்கலக்குறிச்சி என்ற ஊருக்கு அருகில் இருந்த எருமைப்பட்டி தற்போது பேச்சில்லா கிராமமாக உள்ளது. இவ்வரலாற்றுக்குச் சான்றாக உள்ள கோயில், கோவிந்தன் - கோடங்கி ஆகியோர் சிற்பங்களும் 300 ஆண்டுகள் பழைமையானதாக இருக்கலாம். இதேபோன்ற கோவிந்தன் கோயில் திருப்புல்லாணி அருகில் பள்ளபச்சேரியில் உள்ளது. வரலாற்று சின்னங்களாக திகழும் இடிந்துவிட்ட கோயில், அழியாத மரச்சிற்பம், கைகூப்பி நிற்கும் கோடங்கி மாயழகனின் கற்சிற்பம் ஆகியவற்றை வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் பாதுகாத்திட அரசு முன்வர வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு