Published:Updated:

தமிழகம் வரும் 65,000 மைசூரு தமிழ் கல்வெட்டுகள்; இவை ஏன் முக்கியமானவை? விளக்கும் என்.ஆர்.இளங்கோ

சிறப்பு வாய்ந்த தமிழ்க் கல்வெட்டுகள் சரியான முறையில் படி எடுக்கப்படாமல் மத்திய தொல்லியல் துறையில் பராமரிப்பில்லாமல் அழியும் நிலையில் இருக்கின்றன. இந்நிலையில்தான் அவற்றைத் தமிழகம் கொண்டு வர உத்தரவிட்டுள்ளது உயர் நீதிமன்றம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மைசூருவில் பராமரிப்பில்லாமல் குவித்து வைக்கப்பட்டுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்க் கல்வெட்டுகள் விரைவில் தமிழகம் வரப்போகின்றன என்கிற செய்தி தமிழ் உணர்வாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், தமிழக தொல்லியல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த மணிமாறன், உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்த வழக்கில், ``மைசூருவில் உள்ள மத்திய கல்வெட்டியல் துறையில் உள்ள கல்வெட்டுகளில் 65,000 கல்வெட்டுகள் தமிழுடன் தொடர்புடையவை. இந்தக் கல்வெட்டுகள் இதுவரை புதுப்பித்து வெளியிடப்படவில்லை. எனவே மைசூருவில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை தமிழகத்துக்கு கொண்டுவந்து தமிழக தொல்லியல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும், அவற்றை நவீன தொழில்நுட்ப முறையில் பாதுகாக்க தமிழக அரசு நிதி ஒதுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

Madras High Court Bench at Madurai
Madras High Court Bench at Madurai
Photo: Vikatan / Manikandan.N.G

இந்த வழக்கை கடந்த 19-ம் தேதி விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், துரைசாமி அமர்வு, ``சென்னையில் இயங்கி வரும் மத்திய தொல்லியல்துறையின் கல்வெட்டியல் கிளையை தமிழ் கல்வெட்டியல் கிளை என்று பெயர் மாற்ற வேண்டும்; மத்திய தொல்லியல்துறையிடம் தமிழ் தொடர்பாக உள்ள அனைத்து ஆவணங்கள், கல்வெட்டுகளை 6 மாதத்துக்குள் சென்னை கல்வெட்டியல் கிளைக்கு மாற்ற வேண்டும்; தொல்லியல்துறையில் உள்ள அனைத்துப் பிரிவுகளுக்கும் நிபுணர்களைப் பணியமர்த்த வேண்டும்" என்று உத்தரவிட்டிருந்தனர்.

ஓர் இனத்தின் தொன்மையை, அறிவு வளர்ச்சியை, நாகரிகத்தை, வரலாற்றை அறிந்துகொள்ள ஆதாரமாக இருப்பவை ஓலைச்சுவடிகள், நடுகற்கள், கோட்டைகள், கோயில்கள், மண்ணில் புதையுண்டு கிடக்கும் அரிய தொல்பொருள்கள்தான்.

அதிலும் குறிப்பாக, கல்வெட்டுகள்!

கல்வெட்டு மூலம் ஒரு வட்டாரத்தை, அந்த நிலத்தை ஆண்ட மன்னனின் பெருமையை, வீரத்தை, அவன் வரலாற்றை அப்போது வாழ்ந்த மக்களின் பண்பாட்டைத் தெரிந்துகொள்ளலாம்.

அந்தளவு சிறப்பு வாய்ந்த தமிழ்க் கல்வெட்டுகள் சரியான முறையில் படி எடுக்கப்படாமல் மத்திய தொல்லியல் துறையில் பராமரிப்பில்லாமல் அழியும் நிலையில் இருக்கின்றன. இந்நிலையில்தான் அவற்றைத் தமிழகம் கொண்டு வர உத்தரவிட்டுள்ளது உயர் நீதிமன்றம்.

தமிழ்க் கல்வெட்டு (மாதிரி படம்)
தமிழ்க் கல்வெட்டு (மாதிரி படம்)

இந்த வழக்கில் ஆதாரபூர்வமாக வாதத்தை எடுத்து வைத்தவர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ. தி.மு.க-வில் தலைமை சட்ட ஆலோசகராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் உள்ள என்.ஆர்.இளங்கோ சமீபத்தில் மதுரை வந்திருந்தார்.

அவ்வழக்கு பற்றி அவரிடம் கேட்டதற்கு, ``அரசியலமைப்புச் சட்டம் இயற்றும்போதே தொன்மையான விஷயங்களைப் பாதுகாக்கும் அம்சத்தை அதில் சேர்க்க வேண்டும் என்றனர். அரசியலைமைப்புச் சட்டத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் எப்படி அடிப்படை உரிமைகள் உள்ளனவோ, அதுபோல அடிப்படைக் கடமைகளும் உள்ளன. அதில், ஒவ்வொருவரும் கலாசாரத்தையும் பண்பாட்டையும் பாதுகாக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

என்.ஆர்.இளங்கோ
என்.ஆர்.இளங்கோ
நீர்ப்பாசனத்துக்கு உதவிய பொற்கொல்லர்கள்; 1000 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு; வரலாற்று சுவாரஸ்யம்!

தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்க ஆர்கியலாஜிகல் ஆக்ட் 1956-ல் உருவாக்கப்படது. அதன் மூலம், 100 வருடங்களைக் கடந்த அனைத்தும் தொல்லியல் சின்னங்களாகவும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகவும் அறிவிக்க மத்திய அரசாங்கத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்காக மத்திய தொல்லியல்துறை அமைக்கப்பட்டது.

மத்திய அரசின் சட்டத்தில் என்னவெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறதோ அதே அம்சங்களைக் கொண்டு தமிழக அரசு, ஆர்க்கியலாஜி சட்டத்தை 1960-ல் கொண்டு வந்தது. அந்த அடிப்படையில் தமிழ்நாடு தொல்லியல்துறை அமைக்கப்பட்டது. ஓர் இடத்தைத் தொல்லியல் சின்னமாக அறிவிக்க மத்திய தொல்லியல் துறைக்கு அதிகாரம் உள்ளதுபோல் தமிழக தொல்லியல்துறைக்கும் உள்ளது. அந்த அடிப்படையில்தான் கீழடி ஆய்வை மத்திய அரசு கைவிட்ட உடன், தமிழக அரசு எடுத்துக்கொண்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொல்லியல் சின்னங்களை ஏன் பாதுகாக்க வேண்டுமென்றால், நம்முடைய வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு ஆதாரத்துடன் கொண்டு செல்ல சரியான வழி இது ஒன்றுதான். இதைவிட வேறு வழியில்லை.

தொல்லியல் சின்னங்களாகக் கோயில் உட்பட பல உண்டு. நடுகல், நவகண்டம், சிலை, சிற்பம் போன்றவை பல வரலாறுகளைச் சொல்கின்றன. மன்னனுக்காக உயிரைக்கொடுத்த வீரனின் வரலாற்றை ஒரு சிலை சொல்கிறது. அதன் மூலம் அந்த மன்னனை அறிய முடிகிறது. அதைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமை.

செஞ்சி அருகில் மேல்சித்தாமூரில் சமணக் கோயில் உள்ளது. அங்குள்ள ஒரு கல்வெட்டில், ராஜராஜ சோழனுடைய தேவியார், அந்த இடத்துக்கு வந்து, இதற்கு முன்னர் செய்யப்பட்ட அறங்களை மீண்டும் தழைத்தோங்க செய்ய, பங்களிப்பு செய்ததாக உத்தரவிட்டது அந்தக் கல்வெட்டில் உள்ளது. சைவ மதத்துக்கு மாறிவிட்டாலும் சமண மதத்துக்கு உதவி செய்து அதன் அறத்தைப் பற்றிப் பதிவு செய்கிறார். இது முக்கியமான வரலாறு. இதுபோல் பல ஆச்சர்யமான உண்மைகள் கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கல்வெட்டு (மாதிரி படம்)
கல்வெட்டு (மாதிரி படம்)
தமிழகத்தில் தொல்லியல் ஆய்வுகள்: `சிலருக்கு வயிறு எரிவதைப் பற்றிக் கவலை இல்லை’ - தங்கம் தென்னரசு

நான் சக வழக்கறிஞர்களுடன் குழுவாக, பல இடங்களுக்குச் சென்று புராதனச் சின்னங்கள், கல்வெட்டுகளை ஆய்வு செய்திருக்கிறேன். ஓர் ஊரில் சோழர் கால கல்வெட்டு ஒன்றைக் கால்வாயில் தடுப்பு சுவராகப் போட்டு வைத்துள்ளார்கள். கழுகுமலையில கல்வெட்டுகளை மலையேறும் படிக்கட்டுகளாக்கிவிட்டார்கள். இதெல்லாம் எவ்வளவு பெரிய கொடுமை? இப்படியே போனால் காலப்போக்கில் நம் வரலாறு காணாமல் போய்விடும். இது இனியும் நடக்கக்கூடாது.

நினைவுச் சின்னங்களை எப்போதும் பாதுகாத்துதான் ஆக வேண்டும். ஆனால், கல்வெட்டுகளைப் பாதுகாக்க முடியாவிட்டாலும் அதிலுள்ளவற்றைப் படியெடுத்து பாதுகாக்கலாம்.

``தமிழ் கல்வெட்டுகள் அழிந்துவிடக்கூடாது என்ற நோக்கில்தான் இந்த வழக்கை தாக்கல் செய்தோம். அதில், 100 வருடங்களை கடந்து விட்டவைகளை நினைவுச் சின்னங்களாக அறிவிக்க வேண்டும். அப்படி அறிவித்தவைகளை பாதுகாக்க வேண்டும். மைசூர் கல்வெட்டியல்துறையிலுள்ள மசிப்படிகளின் நகல்களையாவது தரவேண்டும்" என்றோம்.

நீதிபதிகள் எங்கள் வழக்கின் நியாயத்தைப் புரிந்துகொண்டு, அனைத்து ஒரிஜினல் மசிப்படிகளையும் தமிழகம் கொண்டுவர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்கள். தமிழக வரலாற்றை மீட்டெடுக்கும் வழக்கில் நல்ல உத்தரவிட்ட உயர் நீதிமன்றத்துக்கு நன்றி சொல்கிறோம்.

தமிழ் கல்வெட்டுகளை தமிழகம் கொண்டுவருவது சிக்கல் ஒன்றுமில்லை. ஆனால், மத்திய தொல்லியல்துறை எந்த காரணமும் சொல்லாமல், அப்பீல் செய்யாமல் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டும்.

என்.ஆர்.இளங்கோ
என்.ஆர்.இளங்கோ
கீழடி அகழாய்வு இப்போது எந்த நிலையில் இருக்கிறது? | Doubt of Common Man

தமிழ் கல்வெட்டுகள் தமிழகத்துக்கு வந்தால் அவைகளை படியெடுத்து பாதுகாக்க தமிழக அரசு ஆர்வமாக உள்ளது. தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் 459-வது வாக்குறுதியில் மைசூரில் உள்ள கல்வெட்டுகளை தமிழகம் கொண்டு வருவோம் என்று கூறியிருந்தார்கள். அந்த வகையில் எங்கள் வழக்கு அரசுக்கு உதவியுள்ளது. முதலமைச்சரும், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சரும் தமிழின் தொல்லியல் பெருமையை ஆவணப்படுத்துவதில் உலகறியச் செய்வதில் அதிக ஆர்வமாக உள்ளனர்.

குறுகிய கால வரலாறுள்ள நாடுகளில்கூட தொன்மையை பாதுகாக்கிறார்கள். அதை சிறப்பாக காட்சிப் படுத்துகிறார்கள். நம்மிடம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொன்மையான சின்னங்கள், ஆதாரங்கள் இருந்தும் அதை காலத்துக்கு ஏற்றாற்போல் காட்சிப்படுத்த முயற்சி செய்யவில்லை. இனி அப்படி இருக்காது.

தற்போது கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியம் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. பல இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. தமிழரின் தொன்மை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது.'' என்றவரிடம்,

``வழக்கறிஞர், மாநிலங்களவை உறுப்பினர், அரசியல்வாதி என்பதை கடந்து தொல்லியல்துறையில் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறீர்களே, எப்படி?" என்றேன்.

``பெரிதாக ஒன்றுமில்லை, சிறுவயதிலிருந்தே எனக்கு வரலாறு, தொல்லியல் மீது ஆர்வம். தொன்மை வாய்ந்த இடங்களுக்கு நண்பர்களுடன் சென்று ஆய்வு செய்வது பிடிக்கும். அதன் மூலம் பல அரிய தகவல்களை அறிந்து கொண்டேன், அவ்வளவுதான்." என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு