Published:Updated:

சீன நூலான ‘சியன்-ஹன்-சு’ முதல் 'இட்சிங் குறிப்புகள்' வரை... தமிழக-சீன தொடர்பைப் பேசும் இலக்கியங்கள்!

Xi Jinping
Xi Jinping ( Photo: AP )

கி.மு இரண்டாம் நூற்றாண்டில், நமக்கும் சீனர்களுக்குமான தொடர்பை சீன நூலான ‘சியன்–ஹன்-சு’ சொல்கிறது. ஏழு அங்குலம் அளவுடைய பெரிய வகை தமிழக முத்துக்களைப் பற்றிய குறிப்பு, அதில் இடம்பெற்றுள்ளது.

பல்லாயிரம் ஆண்டுகளாக, தமிழர்கள் திரைகடலோடி பொருளீட்ட, உலகின் திக்குகளை நோக்கிப் பயணித்தனர் எனும் வரலாற்று உண்மை நாம் அறிந்ததே. சமீப காலத்திய நிகழ்வுகளும் இதை நிரூபித்துவருகின்றன. இதற்கு, கீழடி அகழாய்வின் கண்டுபிடிப்புகள் ஒரு உதாரணம். அதோடு, இந்திய-சீனப் பிரதமர்களின் தற்போதைய மாமல்லை சந்திப்பு உலகப் பார்வையை தமிழகம் நோக்கித் திருப்பியுள்ளது.

கி.மு 600 முதல் கி.பி 2019 வரை... `கீழடி’ நேற்று இன்று நாளை!  #Vikatan360

சங்க காலம் முதலே நம் தமிழகத்திற்கும் சீனாவிற்கும் வணிகத் தொடர்பு இருந்தது. பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்களில் சீனக் கப்பல்கள் தமிழகத் துறைமுகங்களில் நங்கூரமிட்டு நின்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இதற்கு, சீன ஆவணங்கள் நம்மைக் காட்டிலும் மிக அதிகமான தரவுகளைக் கொடுக்கின்றன. அவை கி.மு இரண்டாம் நூற்றாண்டு முதல், கிட்டத்தட்ட ஐரோப்பியர் வருகை வரையிலுமான சுமார் 1,700 ஆண்டுகள் தொடர் தொடர்புகளை விவரிக்கின்றன. இந்த வரலாற்றில், தமிழகத்தின் காஞ்சிபுரம் மிக முக்கியப் பங்கை வகிக்கிறது.

பரிபாடல்
பரிபாடல்

சங்க காலத்திய மூவேந்தர்கள், இரட்டைத் தலைநகர் கொண்டு ஆட்சிசெய்தனர். அவை உள்ளூரில் ஒன்றும் துறைமுகப் பகுதியில் மற்றொன்றும் என விளங்கியது. உதாரணமாக, பாண்டியர்களுக்கு மதுரை மற்றும் கொற்கை. இதைப் பின்பற்றிய பல்லவர்களும் காஞ்சி, மாமல்லை என இரு நகரங்களுக்கும் முக்கியத்துவம் அளித்தனர். கடல் கடந்த வணிகமே அதற்கான முக்கியப் பின்னணி.

தமிழகத்திற்கும் சீனத்திற்குமான தொடர்பு, வாணிபத்தை மட்டுமே சார்ந்ததில்லை. அதற்கும் அப்பால் சமயம், தியானம், மருத்துவம், உணவு, உடை, கலை, சிற்பம் போன்ற பல தளங்களில் பரவியிருந்தது. அவ்வைப் பிராட்டிக்கு நெல்லிக்கனி கொடுத்த அதியமான், சீனத்திலிருந்து கரும்பைக் கொண்டுவந்து நமது மண்ணில் பயிராக்கிய வரலாறு உண்டு. இதை நிரூபிக்கும் வகையில் இன்னமும் தென்தமிழகத்தில் சர்க்கரையைச் ’சீனி’ என்று அழைக்கும் வழக்கம் உள்ளது.

தமிழகத்துடன் சீனர்கள் வணிகம்

கி.மு இரண்டாம் நூற்றாண்டில், நமக்கும் சீனர்களுக்குமான தொடர்பை சீன நூலான ‘சியன்–ஹன்-சு’ சொல்கிறது. ஏழு அங்குலம் அளவுடைய பெரிய வகை தமிழக முத்துக்களைப் பற்றிய குறிப்பு அதில் இடம்பெற்றுள்ளது. 'காஞ்சி மாநகரில் மக்கள்தொகையும் அதிகம். இதோடு, அதிசயப் பொருள்கள் நிறைந்து காணப்படுகின்றன' என்றும் சீன நூலின் ஆசிரியர் வியக்கிறார். அதில் அவர், 'பளபளக்கும் முத்துக்கள், ஆடி (மணிகள்), கிடைப்பதற்கரிய வகைக் கற்கள் மற்றும் வினோதமான புதிய பல பொருள்கள் இங்கே கிடைக்கின்றன. சீனர்கள், இப்பொருள்களைப் பெற்றுக்கொண்டு சீனத்துப் பட்டு மற்றும் தங்கத்தை மாற்றாகத் தருகிறார்கள்’ என்று குறிப்பிடுகிறார்.

தமிழர் சீன வணிகம்
தமிழர் சீன வணிகம்

இதேநூல், சீன மன்னர் வாங் –மாங், காஞ்சி மன்னருக்கு அன்பளிப்பு அனுப்பியதையும், அதற்குப் பதிலாக உயிருள்ள காண்டாமிருகத்தைப் பெற விரும்பியதையும் சொல்கிறது. சங்க காலத்தில், ரோமானியப் பேரரசுக்கு தமிழகத்திலிருந்து பெருமளவில் யானைகள் அனுப்பப்பட்டதும் வரலாற்றுப் பதிவு ஆகும். கி.மு முதலாம் நூற்றாண்டில், தென்னகத்து தூதுக் குழு சீனாவை அடைந்தது என்ற செய்தியும் அந்நூலில் அறிகிறோம். நம் நாட்டின் சீனத்துப் பட்டு இறக்குமதியை மௌரியர் காலத்திய அர்த்தசாஸ்திரம் சொல்கிறது. சீனத்துப் பெரும் கப்பல்களைத் ’தொங்கு நாவாய்’ என்று தமிழ்ப் பாடல்கள் குறிப்பதும், அவை பெரிய பட்டணத்தில் நங்கூரமிட்டு மிதந்ததையும் சீன நூல்களும் பதிவுசெய்துள்ளன. இக்கப்பல்களுக்காக பல்லவ மன்னர்கள் மாமல்லையில் மிக ஆழமான துறைமுகத்தை அமைத்துள்ளனர்.

கி.பி ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வணிகத் தொடர்பாக ஒரு தூதுக் குழு சீனாவிற்குச் சென்றது. மிக உயர்ந்த வகை குதிரைகளை சீன மன்னர் சுயென் – வூ (காலம் 500-515) பரிசுப் பொருளாகப் பெற்றுள்ளார். அதைக் கொண்டுசென்ற தூதுவன், தென்னகத்தின் அரிய பொருள்களைத் தன் நீண்ட பட்டியலில் சொல்கிறார். அதில் சிங்கம், சிறுத்தை, ஒட்டகம், யானை மற்றும் காண்டாமிருகம் போன்ற விலங்குகள் இருந்தன. வெண்முத்து, சிவப்பு மற்றும் மஞ்சள் நிற முத்துக்கள், வைரம், வைடூரியம் போன்ற விலை உயர்ந்த கற்கள் இடம்பெற்றிருந்தன. ஆமை ஓடு, பொன், செம்பு, இரும்பு, ஈயம் பொன்ற உலோகங்களும், மஸ்லீன் ஆடை வகைகள், தங்கம் வெள்ளி இழைகொண்டு நெய்யப்பட்ட ஆடை வகைகளும் அதில் இருந்தன. மருத்துவ மூலிகைகள், தேன், மிளகு, இஞ்சி போன்ற பலவும் இடம்பெறுகின்றன. இவற்றைத் தமிழகத்தில் இருந்து சீனத்திற்கு ஏற்றுமதி செய்ததாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

தமிழர் சீன உறவு
தமிழர் சீன உறவு
நேரு, `அங்கிள்' ராகுல், மோடி, 40 நூறு ரூபாய்..! - மாமல்லபுரம் சீனியர் கைடின் நினைவுகள்

எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தூதுக்குழு மீண்டும் சீனா சென்றதை மா-லான்-வின் என்பவரது நூல் குறிப்பிடுகிறது. இதில் காஞ்சியைத் தலைநகராகக்கொண்டு ஆட்சிசெய்த பல்லவ மன்னன் நரசிம்மவர்மன், அரேபியர்களையும் திபெத்தியர்களையும் (வங்காளம்) வெற்றிகொண்ட அரசியல் செய்தி சொல்லப்படுகிறது. இந்த வெற்றியையும் நரசிம்மனின் படையைப் பாராட்டியும் 'வென்ற படை’ எனும் பொருள்கொண்ட ஒரு பட்டயம் மற்றும் பல பரிசுப் பொருள்களையும் சீன மன்னன் அனுப்பியதாகத் தெரியவருகிறது.

சோழப் பேரரசர் முதலாம் ராசராசன் காலத்திலும் அவரது மகனும் வாரிசுமான ராசேந்திரன் காலத்திலும் (11-ம் நூற்றாண்டு) பல தூதுக் குழுக்கள் சீனாவிற்குச் சென்றன. ராசராசன் அனுப்பிய 52 பேர் கொண்ட அக்குழு, சீன மன்னர்களுக்கு உயர்ந்த பரிசுப் பொருள்களை எடுத்துச்சென்றன. சீன மன்னர்களும் தமிழ் மன்னர்களுக்கு, மதிப்புமிக்க பரிசுப் பொருள்களை வழங்கினர். 13-ம் நூற்றாண்டில், சோழர் ஆட்சி முடிவடைந்து பாண்டியர்கள் தலைதூக்கிய பின், அங்கிருந்தும் தூதுக் குழுக்கள் செல்லத் தொடங்கின. இக்காலத்தில் ஏற்பட்ட அனைத்து அரசியல் மாற்றங்களும் சீன நூல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

பாண்டியர் ஆட்சியில் நடந்த வாரிசு உரிமைப் போர்கள், மதுரை சுல்தான்களுக்கு எதிராக பாண்டிய வாரிசுகள் வேண்டிய அரசியல் உதவி போன்ற பல செய்திகளையும் சீன நூல்களில் நாம் பெற முடிகிறது. சீனாவை ஆண்ட மங்கோலிய மன்னன் குப்ளாய் கான், தென்னக தூதுக் குழுக்களை ஏற்றுக்கொண்ட விதம், நடத்திய முறை போன்ற எல்லா தரவுகளும் விரிவாக எழுதப்பட்டுள்ளன. குப்ளாய் கான் ஆட்சியின்போதும் தமிழர்களுடன் வாணிபம் தொடர்ந்தது. இதன் தொடர்பிற்காக தமிழ் வணிகர்கள் தென் சீனாவில் வசித்துவந்தனர்.

சமயத் தொடர்பு

புத்த மதத்தை அறியும் ஆர்வத்தால், புத்தத்துறவிகள் தரை வழியே இந்தியா வந்தனர். யுவான் சு வாங், பாகியான் (காலம் கி.பி 401-410) மற்றும் இட்சிங், இந்தியர்களையும், புத்த விகார்கள் பற்றியும் நிறைய குறிப்புகளைப் பதிவுசெய்துள்ளனர். இவற்றின் மூலம் சமயத் தொடர்புகள் குறித்து அறிய முடிகிறது. குப்தர்களின் ஆட்சிக் காலத்தில், வட இந்தியாவிற்கு வந்த பயணியான பாகியான், தமிழகத்திற்கும் வர முயன்றார். ஆனால், ஏதோ காரணங்களால் அது முடியவில்லை. எனவே, தான் கேள்விப்பட்டதைப் பதிந்திருக்கிறார்.

யுவான் சுவாங், மாமல்லபுரம் சிற்பம்
யுவான் சுவாங், மாமல்லபுரம் சிற்பம்
பா.ஜெயவேல்

யுவான்-சு-வாங் தன் பயணத்தின் வழியில் காஞ்சிக்கும் வந்தார். அங்கிருந்த 100 புத்த விகார்கள், 80 சமணர் வழிபாட்டுத் தலங்கள் குறித்து, தன் பயணக்குறிப்புகளில் பதிவிடுகிறார். தர்மபாலர் காஞ்சியில் பிறந்து, இங்கிருந்த கடிகையில் (கல்வி நிலையத்தில்) பயின்று, இன்றைய பிஹாரில் உள்ள நாளந்தா பல்கலையின் முதல் துணைவேந்தராகப் பணியாற்றினார். இங்கு, அசோகர் கட்டிய புத்த ஸ்தூபி இருந்ததையும் சொல்கிறார். இட்சிங் நமது மக்களின் பொது பழக்கவழக்கங்கள் பற்றிப் பேசுகிறார். தமிழகத்தில் இருந்தும் புத்தத்துறவிகள் சீனாவுக்கு சென்றுள்ளனர். கி.பி 520 ல் புத்தத்துறவியான போதி தர்மர், தென் சீனாவின் ஆண்டன் பகுதியைச் சென்றடைந்துள்ளார். சீனர்களுக்கு சமயக் கருத்துக்களோடு, தியானம், மருத்துவம் தொடர்பான அறிவைக் கொடுத்துள்ளார். சீனப் பயணிகள் தங்கும்பொருட்டு காஞ்சியில் புத்த விகாரைப் பல்லவ மன்னர்கள் அமைத்துக்கொடுத்துள்ளனர். பின்னர், நாகப்பட்டினத்திலும் புத்தவிகார் சீனர்களுக்காக கட்டப்பட்டுள்ளது. தமிழர்களும் தென் சீனாவில் குடியேறி வாழ்ந்துவந்துள்ளனர். இவர்கள், குப்ளாய் கான் ஆட்சிக் காலத்தில் தங்கள் வழிபாட்டிற்காக ஒரு சிவன் கோயிலை இப்பகுதியின் குவன் – சு பகுதியில் கட்டியுள்ளனர். ராசராச சோழன் தஞ்சையில் கட்டிய பெரிய கோயிலுக்கு எப்படி 'இராசராசேச்சுவரம்' எனத் தன் பெயரைச் சூட்டினானோ, அதே வழக்கத்தைப் பின்பற்றி, தமிழர்கள் குவன்-சு கோயிலுக்கு திருக்கானீச்சுரம் (திரு+கான்+ஈசுவரம்) என்று பெயரிட்டுள்ளனர்.

காஞ்சி, விண்ணமங்கலத்திலுள்ள வைகுந்தநாதப் பெருமாள் கோயிலில் உள்ள சிற்பங்களில் ஒன்று, சீனரின் வடிவத்தை ஒத்துள்ளது. தமிழகப் பகுதிகளில் நடந்த அகழ்வாய்வுகளில், சீனப் பானை ஓடுகளும் காசுகளும் கிடைத்துள்ளன. சீனாவில் குவான் – சு வில் (2013 )நடந்த அகழ்வாய்வுகளில் சிவலிங்கம், பல சிற்பங்களுடன் அமைந்த தூண் பகுதிகள் கிடைத்துள்ளன. நடராசர், கண்ணன் காளிங்கன் எனும் பாம்பின் தலை மீதேறி நடனமாடும் காளிங்க நர்த்தனம், கண்ணனும் கோபியரும் போன்ற பல சிற்பங்கள் கிடைத்துள்ளன. இத்தோடு, சமீபத்தில் (ஜூலை, 2019) தமிழ் எழுத்துக்களைக்கொண்ட கல்வெட்டும் கிடைத்துள்ளது.

ஜின்பிங்
ஜின்பிங்

சீனா-தமிழகத்தின் தொல்தொடர்பு வெளிவர வேண்டும். சீனாவுடன் நம் நாட்டின் தொடர்பை முழுவதுமாக அடையாளப்படுத்த, நம் இந்திய தொல்பொருள் ஆய்வகத்தின் உதவி அந்நாட்டிற்குத் தேவைப்படுகிறது. இந்த உதவியை சீனா வரவேற்றாலும், இப்பணி தற்போது முடங்கியுள்ளது. இரு நாட்டுத் தலைவர்களின் மல்லை சந்திப்பு, தமிழகத்தின் சீனாவுடனான நீண்டகாலத் தொடர்பை அங்கீகரித்துள்ளது. இதன் தொடர் நிகழ்வாக நம் இந்தியத் தொல்பொருள் ஆய்வகத்தினர் சீனாவுக்குச் செல்ல வேண்டும். சீன-தமிழக தொல்தொடர்பு முழுமையாக வெளிக்கொண்டுவரப்பட வேண்டும். இதன்மூலம், ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று வாழ்ந்துகாட்டிய தமிழர் புகழ் நிறுவப்பட வேண்டும். கடல்தாண்டிச் செல்லுதல் தீட்டு என்பது வட இந்தியரின் ஐதிகம். ஆனால், கடல்கடந்தும் திரவியம் தேடும் கொள்கையைக் கொண்டவர் தமிழர்கள். எனவே, தமிழரின் உலகம் மிகவும் பரந்தது. இந்தியாவின் எல்லையைக் கடந்து, எடுத்துச்செல்லப்பட்ட சமயங்களான புத்தம், சைவம் மற்றும் வைணவம் போன்று எதுவாயினும், அதன் பெருமையில் பெரும் பங்கு தமிழனுக்கே!

- முனைவர்.எஸ்.சாந்தினிபீ

(கட்டுரையாளர் உ.பி-யின் அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை இணைப்பேராசிரியர்)

அடுத்த கட்டுரைக்கு