Published:Updated:

தூங்காநகர நினைவுகள் - 3 | புதைந்து கிடக்கும் மனிதகுல வரலாறு!

தூங்காநகர நினைவுகள்
News
தூங்காநகர நினைவுகள்

16 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு கற்கோடாரி என்றால் அது இந்தியாவின் ஆகப்பெரும் சொத்தில்லையா... மதுரை போன்ற ஒரு வரலாற்று நகரத்தில் ஏன் நமக்கு உலகத்தரமான ஓர் அருங்காட்சியகம் கூட இல்லை?

தொல்லியல் என்பது மூதாதையர்கள் விட்டுச் சென்ற தொல் எச்சங்களை ஆய்வு செய்து பண்பாட்டை அறிந்து கொள்ளும் ஒரு வழிமுறை. இந்தத் தடயங்களை ஆய்வு செய்யும்போது நமக்கு நம் மூதாதையர்கள் மற்றும் முன்னோர்களின் வாழ்வியல் குறித்த ஒரு புரிதல் ஏற்படுகிறது. மனிதனின் பரிணாம வளர்ச்சியை இந்த ஆய்வுகள் துல்லியப்படுத்த உதவுகின்றன.

என் பள்ளி பாடப் புத்தகங்களில் மொஹெஞ்சொ-தரோ ஹரப்பா பற்றிய பாடங்கள் இருந்தன. அதற்குப் பிறகு ஒரு சில புத்தகங்களில் அகழாய்வு குழிகளில் தொல்லியலாளர்கள் இருக்கும் புகைப்படங்களை பார்த்து வியந்திருக்கிறேன். என்ன ஓர் அற்புதமான வேலை, வரலாற்றையே கைகளால் வருடிப் பார்க்கும் வாய்ப்புள்ள ஒரு வேலையல்லவா இது?

ரோமில் அகழ்வாய்வு செய்யப்படும் குதிரையின் எச்சங்கள்
ரோமில் அகழ்வாய்வு செய்யப்படும் குதிரையின் எச்சங்கள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'ஹே ராம்' திரைப்படத்தின் முதல் காட்சியில் கமல்ஹாசனும் ஷாருக்கானும் பாகிஸ்தானில் உள்ள மொஹெஞ்சொ-தரோவின் ஓர் அகழாய்வுக் குழிக்குள் இரண்டு மண்டை ஓடுகளில் இருந்து பிரஷ் வைத்து மண்ணை கோதிக்கொண்டிருப்பார்கள். அவர்களின் பிரித்தானிய உயரதிகாரி வந்து உடனடியாக இந்தப் பணிகளை நிறுத்திவிட்டு ஒரு மணி நேரத்திற்குள் இந்த இடத்தில் இருந்து கிளம்புங்கள், இந்தியா பாகிஸ்தான் பிரிவினையை ஒட்டி மதக்கலவரங்கள் மூள்கிறது, உங்களை எல்லாம் பாதுகாக்கும் பொறுப்பு என்னுடையது என்பார். இவர்கள் இருவரும் அங்கிருந்து கிளம்ப மனமின்றியிருப்பார்கள். அப்போது சாக்கேத் ராம் கதாபாத்திரம் சொல்லும், "5000 ஆண்டுகளாக இந்தப் பொருட்கள் பாதுகாப்பாகத்தானே இருந்தன. நாம் மீண்டும் இங்கு அகழ்வாய்வு செய்ய வருவோம்... எல்லாம் பாதுகாப்பாகவே இருக்கும்" என்பார்.

*****

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மதுரை அருகில் இருக்கும் ஆவியூரிலும் 1864-ல் ராஃபர்ட் ப்ரூஸ் ஃபுட் (Robert Bruce Foote) என்கிற நிலவியல் அறிஞர் மனித மூதாதையர்கள் வசித்ததற்கான எச்சங்களான கற்கருவிகளைக் கண்டுபிடித்தார். இதற்கு ஓரு வருடம் முன்னர் 1863-ல் தான் அவர் சென்னை பல்லாவரத்தில் ஒரு கற்கோடாரியை கண்டெடுத்திருந்தார். இந்த இரு கண்டுபிடிப்புகள் இந்திய தொல்லியல் வரலாற்றில் முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்தின. இந்த கற்கோடாரிகள் 16 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

1887ல் அலெக்சாண்டர் ரியா (Alexandar Rea) என்கிற தொல்லியல் துறை அதிகாரி மதுரை அனுப்பானடி பகுதியில் மிக முக்கியமான அகழாய்வுகளை மேற்கொண்டார். இந்த அகழாய்வுகளில் ஏராளமான ஈமஎச்சங்களை அவர் கண்டறிந்தார்.

அனுப்பானடியைப் போலவே அவர் மதுரைக்கு மிக அருகில் இருக்கும் பரவை, துவரிமான் மற்றும் தாதம்பட்டியிலும் ஏராளமான முதுமக்கள் தாழிகள், எலும்புகள், மண்டை ஓடுகள் மற்றும் இரும்பு ஈட்டிமுனைகள் அகழ்ந்தெடுத்தார்.

1887-ல் பார்டெல் (Bartel) என்கிற காவல்துறை அதிகாரி பல முதுமக்கள் தாழிகளை துவரிமானில் கண்டுபிடித்தார். இதனைத் தொடர்ந்து பரவையிலும், துவரிமானிலும் இரும்பு ஈட்டி முனைகள், எலும்புக் கூடுகள், மண்டை ஓடுகள், வழவழப்பான பளிங்கு போன்ற பானைகள், சிவப்பு நிறத்திலான பாசி மணிகள் (carnelian beads) உள்ளிட்ட பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

பழைய கற்காலத்தின் நடுப்பகுதியைச் சேர்ந்த கருவிகள் மரட்டாற்றின் களிமண் படுகையிலும் சிவரக்கோட்டையிலும் கண்டறியப்பட்டுள்ளன. திடியன், தெ.கல்லுப்பட்டி, போடிநாயக்கனூர் அருகில் உள்ள கோடாங்கிப்பட்டி, தத்தனோடை மேடு பகுதிகளில் ஜாஸ்பர், சால்சிடனி, கிரிஸ்டல், அகேட் (Agate), உலோகக் கலவைகளைக் கொண்டு செய்யப்பட்ட சுத்தியல்கள், நுண் கற்கருவிகள் கண்டறியப்பட்டன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

துவரிமானில் கிருதுமால் நதி உருவாகும் இடத்தின் மேற்பரப்பிலேயே ஒருமுனைக் கத்திகள், இருமுனைக் கத்திகள், வெட்டுக் கருவிகள், சுரண்டிகள், பிறைவடிவக் கருவிகள், துளையிடும் கருவிகள் கிடைத்துள்ளன.

வெள்ளாங்குளம், துவரிமான், கோவலன் பொட்டல் பகுதிகளில் புதிய கற்காலக் கருவிகள் பல கிடைத்துள்ளன. அரிட்டாப்பட்டியில் உள்ள பெருமாள் மலை அடிவாரத்திலும், விளாங்குடி, பரவை, அனுப்பானடி, பேரையூர் பகுதிகளில் நூற்றுக்கணக்கான தாழிகள் கண்டறியப்பட்டன.

மதுரைக்குத் தெற்கே வெள்ளாளக்குளத்தில் கல்வட்டங்கள், சுடுமண் தலைகள், உருவங்கள் கிடைத்துள்ளன. கருங்காலக்குடி, நிலக்கோட்டை, பரவை, துவரிமான், தாதம்பட்டி, அனுப்பானடி மற்றும் செங்குளம் ஆகிய பகுதிகளிலும் முதுமக்கள் தாழி, ஈமத்தாழிகள் நிறையவே கிடைத்துள்ளன.

கீழ் மதுரை, மேலமாத்தூர், கீழக்குயில்குடி, மேலப்பனங்காடி, கீழப்பனங்காடி, கீழ் இரணியல்முட்டம் ஆகிய பகுதிகளில் சிறிய மண் குடுவைகள், வட்ட பாத்திரங்கள், பிரிமனைகள், வேலைப்பாடுகளுடன் கூடிய கருப்புப் பானைகள் காணப்பட்டன. மற்றும் கருப்பு, சிவப்பு நிறத்திலான தாழிகள் கிடைத்துள்ளன.

****

1891-ல் ஜாவாவில் தான் நிமிர்ந்து நின்ற மனிதனின் (Homo Erectus) முதல் தொல் எச்சம் உலகில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் சீனாவின் பீக்கிங் மனிதன் (Peking Man) மற்றும் இலங்கையின் பலாங்கொடை மனிதன் (Balangoda Man) அகழாய்வில் கிடைத்தனர். 1970-களில் இந்தியாவில் நிமிர்ந்து நின்ற மனிதனின் (Homo Erectus) ஒரே ஒரு தொல் படிமம்தான் கிடைத்துள்ளது, அதை நர்மதா மனிதன் (Narmada Man) என்று அழைக்கிறோம். இந்த நிமிர்ந்து நின்ற மனிதர்கள் 25 லட்சம் ஆண்டுகள் முதல் 16 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வரை இந்த நிலப்பரப்பில் அலைந்து திரிந்திருக்கிறார்கள்.

பழைய கற்காலத்தில் நம் மூதாதையர்கள் சொரசொரப்பான பெரிய கற்களால் வேட்டையாடினார்கள். அதன் பின்னர் கற்கோடாரிகளை ஆயுதங்களாக பயன்படுத்தினார்கள். பரிணாமத்தில் அடுத்து வந்த ஆதி மனிதன் புதிய தொழில்நுட்பத்தை அடைந்து கூர்நுனி ஆயுதங்களை உருவாக்கினான். அடுத்து அவன் அடைந்த தொழில்நுட்ப மேம்பாட்டில் சிறிய சுரண்டிகள், பட்டைக்கத்திகள், இரும்பு கூர்நுனிகள் கொண்ட ஆயுதங்கள் நோக்கி நகர்ந்தான். இந்த கூர்நுனிகள் உள்ளிட்ட ஆயுதங்கள்தான் அவனை பாதுகாத்தது என்பதால் அதையே வணங்கத் தொடங்கினான்.

மனிதனின் பரிணாம வளர்ச்சி
மனிதனின் பரிணாம வளர்ச்சி

ஒரு வேட்டை சமூகமாக, நாடோடி சமூகமாக இருந்த அவன் ஒரே இடத்தில் குடியேறி ஒரு கிராமமாக வசிக்கத் தொடங்கினான். வேட்டைச் சமூகமாக இருந்த மனிதன் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு பயிர் சாகுபடி நோக்கி நகர்கிறான். பானை, சக்கரம், நெருப்பு ஆகிய இந்த மூன்று கண்டுபிடிப்புகள்தான் மனித குல வரலாற்றின் முதல் தொழில் புரட்சிக்கு வித்திட்டது. மனிதனுக்கு கல்லும் அதன் பின்னர் மண்ணும் வசப்பட்டது அதனால் மட்கலத்தொழிலில் புதிய புதிய சாதனைகளைச் செய்தான். கறுப்பு, சிவப்பு, வடிவங்கள், அளவுகள், வேலைப்பாடுகள், வளவளப்பு, பழபழப்பு என ஒவ்வொரு காலத்திலும் மட்பாண்டங்கள் புதிய உயரங்களை எட்டின.

ஆதிமனித இனத்தின் முன்னோடிகளாக ஆஸ்ட்ரொலோப்பிதச்ஸ் (Australopithecus), ஹோமோ ஹெபிலிஸ் (Homo habilis), ஹோமோ எரக்டஸ் (Homo erectus), ஹோமோ ஹெய்டெல்பெர்கென்ஸிஸ் (Homo heidelbergensis) இருந்தனர். இதன் பின்னர் நியாண்டர்தல்ஸ்-ம் (Neanderthals) அதில் இருந்து படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்றனர். பூமியில் பல மனித இனங்கள் தோன்றி மறைந்து பிறகு வேறு இனங்கள் தோன்றியுள்ளன. பருவ நிலை மாற்றங்களால் (Climate Change) தான் இந்த பூமியில் வாழ்ந்த பல உயிர்கள் ஒட்டுமொத்தமாக அழிந்து மீண்டும் புதிய வடிவில் முகிழ்ந்திருக்கிறது.

இன்றில் இருந்து 75,000 ஆண்டுகளுக்கு முன்னர் தற்கால மனிதன் (Homo Sapiens) உருவானான். மனிதனின் பரிணாம வளர்ச்சியில் ஒவ்வொரு இனமும் இந்த பூமியெங்கும் இடம்பெயர்ந்து தன் எல்லைக்கு உட்பட்டு பயணித்துள்ளது, ஆனால் தற்கால மனிதன் டோபா எரிமலைக்கு (Toba Volcano) முன்போ பின்போ நம் நிலப்பரப்பிற்கு வந்து குடியேறினான். தான்சானியா, எத்தியோப்பியா, கென்யா, தென் ஆப்பிரிக்கா என இங்கே தான் ஆதிமனிதனின் முன்னோடிகளின் பல எச்சங்கள் கிடைத்துள்ளது. இந்தியாவில் நர்மதா மனிதன் மற்றும் ஜுவாலாபுரம் சாம்பல் படிமங்களில் கிடைத்த கருவிகள் மிகவும் முக்கியமானவை.

ஜாவா மனிதன் ஹோமோ எரக்டஸ்
ஜாவா மனிதன் ஹோமோ எரக்டஸ்

1972-ல் திருநெல்வேலியின் சாத்தான்குளத்தின் அருகே காராமணி ஆற்றின் கரையில் களிமண், மணல் கலந்த படிவம் ஒன்றிலிருந்து நிலவியல் அறிஞர் சுகி.ஜெயகரன் அவர்கள் ஒரு காண்டாமிருகத்தின் மண்டையோட்டின் ஒரு பகுதியை அகழ்ந்து எடுத்தார். இந்த ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் இன்றுள்ள காண்டாமிருகத்தை விட சற்றே பெரியது. இதே காலகட்டத்தில் இலங்கையின் ரத்தினாபுரி படிவங்களில் காண்டாமிருகத்தின் எலும்புகள் கண்டறியப்பட்டன.

இதனை ஒரு வருடம் அவர் தன்னுடன் வைத்திருந்தார், பின்னர் அவர் பூனேயில் உள்ள டெக்கான் கல்லூரிக்கு எடுத்துச் சென்று அங்கே உள்ள பேராசிரியர்களை வைத்து இதனை மறுகட்டமைப்பு செய்தார், இது Current Science உள்ளிட்ட இதழ்களில் கட்டுரையாக வெளிவந்தது. 1974 வாக்கில் காண்டாமிருகத்தின் எலும்பை அவர் சென்னை அரசு அருங்காட்சியகத்திற்கு ஒப்படைத்தார், சமீபத்தில் அங்கு சென்று வந்த சுகி.ஜெயகரன் அவர்கள் அது கவனிப்பாரற்று கிடந்ததை பார்த்து மிகுந்த வேதனையடைந்தார்.

இதுதான் அரசின் நிலை என்றால், பொதுவாக பல இடங்களில் கிடைக்கும் பெரிய அளவிலான எலும்புகள் காளவாசலில் எரிக்கப்பட்டு சுண்ணாம்பாக மாற்றப்பட்டு தொழிற்சாலைகளுக்கும் குடிமைச்சமூக பயன்பாட்டிற்கும் அனுப்பப்படுகிறது. ரியல் எஸ்டேட்காரர்கள் பலர் ஃப்ளாட் போடும் வேகத்தில் பல முதுமக்கள் தாழிகளை புல்டோசர்கள் வைத்து தகர்த்து வெளியே தெரியாமல் தரைமட்டம் ஆக்கிய சம்பவங்கள் பல ஊர்களில் நிகழ்ந்துள்ளது. கிருஷ்ணகிரி முதல் கொடைக்கானல் நடு மலைப்பகுதி வரை 3500 ஆண்டுகள் பழமையான கற்திட்டைகளை, கற்பதுக்கைகளைப் பெயர்த்து எடுத்து வீடுகள் கட்ட உபயோகிக்கிறார்கள்.

மதுரையில் கடந்த ஒரு நூற்றாண்டாக சேகரித்த தொல்லியல் பொருட்கள் எல்லாம் ஒரு சேர மக்கள் பார்வைக்கு எங்காவது இருக்கிறதா, 16 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு கற்கோடாரி என்றால் அது இந்தியாவின் ஆகப்பெரும் சொத்தில்லையா, மதுரை போன்ற ஒரு வரலாற்று நகரத்தில் ஏன் நமக்கு உலகத்தரமான ஒரு அருங்காட்சியகம் கூட இல்லை?

ஒரு முறை தொ.பரமசிவன் அவர்களுடன் உரையாடும் போது அவர், “நாம் கற்காலத்தை கடந்து வந்திருக்கிறோம் என்பதற்கு நம் சமையற்கட்டில் உள்ள அம்மி, ஆட்டுரல், திருகையும் சான்று” என்றார். ஆனால் இத்தனை பெரிய சான்றுகளை இந்நேரம் நம்மில் பலர் வீடுகளில் இருந்து அதன் அருமை தெரியாமல் அப்புறப்படுத்தி வெளியே எறிந்திருப்போம். நான் உலகம் முழுவதும் பார்த்து அதிசயித்த கற்படிமங்களை சேகரித்து வைத்துள்ளேன். தமிழகம் முழுவதும் அலைந்து திரிந்து பல கற்கருவிகளை சேகரித்து பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். என் மூதாதையர்கள் பயன்படுத்திய இந்தக் கருவிகளை விட வேறு எது பெரும் சொத்தாக இருக்க முடியும், இதை விட வேறு என்ன பொக்கிஷம் சேகரித்துவிடப் போகிறோம்! தொல்லியல் சான்றுகள் ஏன் முக்கியம் என்பதை இந்த சமூகத்தின் கடைக் கோடி மனிதன் உணரும் வரை உரையாடுவோம்.