Published:Updated:

"கொற்கையில் கடல்சார் அகழாய்வு மேற்கொள்ளப்படும்!"- அமைச்சர் தங்கம் தென்னரசு

சங்க காலத்தில் இருந்து பாண்டியனின் தலைநகராக விளங்கிய கொற்கையில், கடந்த 19-ம் நூற்றாண்டில் இருந்து பல கட்டமாக ஆய்வுகள் நடந்து வந்தாலும், தற்போது நடந்துள்ள அகழாய்வு பல முக்கியப் பொருள்களை வெளியில் கொண்டுவந்துள்ளது.

தமிழகத் தொல்லியல்துறையின் சார்பில் கொற்கையில், கடந்த 1968 மற்றும் 1969-ம் ஆண்டுகளில் அகழாய்வு இயக்குநர் நாகசாமி தலைமையில் ஏற்கெனவே அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுள்ளன. அதுதான், ’தமிழகத் தொல்லியல்துறை’ உருவான பின்னர் செய்யப்பட்ட முதல் அகழாய்வுப் பணியாகும். அந்த அகழாய்வில், 12 குழிகளில் 400-க்கும் மேற்பட்ட பல்வேறு பொருள்கள் கிடைத்துள்ளன. அந்த ஆய்வில் ‘கொற்கை நகரம்’ சுமார் 2,800 ஆண்டுகள் பழைமையானது என்பது உறுதியானது.

அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களைப் பார்வையிட்ட தங்கம் தென்னரசு
அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களைப் பார்வையிட்ட தங்கம் தென்னரசு

இங்கு துறைமுகம் இருந்தாகவும், இங்கிருந்து கடல்வழி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடந்ததாகவும், பாண்டிய மன்னர்களின் தலைநகராகக் கொற்கை விளங்கியது எனவும் அறிவிக்கப்பட்டது. 52 ஆண்டுகள் கழித்து, கடந்த பிப்ரவரி 26-ம் தேதி தொடங்கி கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வரை, அகழாய்வு இயக்குநர் முனைவர் தங்கதுரை தலைமையில் அகழ்வுப் பணி நடந்தது.

இந்த அகழாய்வுப் பணிக்காக, கொற்கையில் 17 ஆய்வுக்குழிகள் தோண்டப்பட்டன. சுமார் 2,800 ஆண்டுகள் பழைமையான கட்டடம், அறுக்கப்பட்ட நிலையில் சங்குகள், அறுக்கப்பட்ட சங்குகளைப் பட்டை தீட்டப் பயன்படுத்தப்பட்ட பல வடிவ சங்குகள், சங்கினால் செய்யப்பட்ட வளையல் துண்டுகள், இரும்பு உருக்குத் துண்டுகள், கறுப்பு சிவப்புப் பானை ஓடுகள், கீறல்கள் ஆகியவை கிடைத்துள்ளன.

அமைச்சர் தங்கம் தென்னரசு
அமைச்சர் தங்கம் தென்னரசு

அத்துடன், வெளிநாடுகளுடன் வாணிபத்தொடர்பு இருந்ததை உறுதிப்படுத்தும் சான்றுகள், தமிழ் பிராமி எழுத்துகள், குறியீடுகள், சங்குகள், சங்கு வளையல்கள், வண்ணப் பாசிமணிகள், பானைகள், சுடுமண் உருவபொம்மைகள், நாணயங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால், ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை அகழாய்வைப் போலவே கொற்கை அகழாய்வும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

கொற்கை அகழாய்வு: 9 அடுக்கு செங்கல் கட்டுமானத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்ட 2 அடுக்கு கொள்கலன்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், இந்த அகழாய்வுப் பணிகள் நடந்த இடத்தையும், அகழ்வில் கண்டெடுக்கப்பெற்ற பொருள்களையும் பார்வையிட, தமிழகத் தொழில்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டார். அவருடன் தொல்லியல் துறைத் துணை இயக்குநர், அகழாய்வு இயக்குநர் தங்கதுரை, தொல்லியல் அலுவலர்கள் ஆசைத்தம்பி, காளீஸ்வரன் ஆகியோர் விளக்கமளித்தனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழர் வரலாறு, பண்பாட்டிலும் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறக்கூடிய இடமாகக் கொற்கை அமைந்துள்ளது.

அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களைப் பார்வையிட்ட தங்கம் தென்னரசு
அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களைப் பார்வையிட்ட தங்கம் தென்னரசு

சங்க காலத்தில் இருந்து பாண்டியனின் தலைநகராக விளங்கிய கொற்கையில், கடந்த 19-ம் நூற்றாண்டில் இருந்து பல கட்டமாக ஆய்வுகள் நடந்து வந்தாலும், தற்போது நடந்துள்ள அகழாய்வு பல முக்கியப் பொருள்களை வெளியில் கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் கொற்கைக்கும் பல வெளிநாடுகளுக்கும் வாணிபத்தொடர்பு இருந்தது உறுதியாகிறது.

கொற்கையில் கடல்சார் ஆய்வு மேற்கொள்ள பல துறைகளுடன் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம். இந்த அகழாய்வுப் பணிகளுக்குச் சிறந்த தொழில்நுட்ப வசதி தேவையாக இருக்கிறது. இதற்காக உரிய ஆலோசனைகளும் ஆய்வுகளும் தொடர்ந்து செய்துவருகிறோம். அதற்காக உரிய வல்லுநர்களுடன் நமது குழு தொடர்ந்து கலந்தாலோசித்து வருகிறது. அதன்பின்னர் சரியான நேரத்தில் இங்கு கடல்சார் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். தென் மாநிலங்களின் நாகரிகத் தொட்டில் பொருநை நதிக்கரைதான்.

அகழாய்வு நடந்த இடத்தைப் பார்வையிட்ட தங்கம் தென்னரசு
அகழாய்வு நடந்த இடத்தைப் பார்வையிட்ட தங்கம் தென்னரசு

அதனால்தான் பொருநை பாய்ந்தோடும் நெல்லையில், ’பொருநை அருங்காட்சியகம்’ அமைக்க முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, 5 இடங்கள் பார்வையிடப்பட்டுள்ளன. இதில் ஏதாவது ஓர் இடம் இறுதி செய்யப்பட்டு அருங்காட்சியகம் அமைக்கப்படும். இந்த அருங்காட்சியகம் மிகப் பிரமாண்டமாக அமையும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு