Published:Updated:

கறுப்பு சிவப்பு வண்ண பாத்திரம்; 2000 வருட பழைமை! - காளையார்கோயில் ஆச்சர்யம்

தாழியில் கிடைத்த பாத்திரம்
தாழியில் கிடைத்த பாத்திரம்

காளையார்கோயில் அருகே உள்ள நல்லேந்தல் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் உடைந்தநிலையிலும் முழுமையான அமைப்பிலும் தென்படுகின்றன.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த கீழடியில் தற்போது 6-ம் கட்ட அகழாய்வுப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய நான்கு இடங்களிலும் இந்த அகழாய்வுப் பணி திட்டமிட்டபடி நடைபெறுகிறது. கொரோனா ஊரடங்கு, கடுமையான மழைப் பொழிவு எனப் பல சிக்கல்களைக் கடந்து அகழாய்வுப் பணிகள் நடைபெறுகின்றன.

கீழடி
கீழடி

6-ம் கட்ட அகழாய்வுப் பணியானது, கொந்தகையில் கதிரேசன் - சுரேஷ் என்பவர்களுக்குச் சொந்தமான தென்னந்தோப்பு அருகே நடைபெற்று வருகிறது. இந்த இடம் பழைமையான ஈமக்காடு என்று சொல்லக்கூடிய பகுதியாகும். இந்த இடத்தில் முதுமக்கள் தாழிகள், மனித மண்டை ஓடு உள்ளிட்டவை கிடைத்துள்ளன.

இந்நிலையில், காளையார்கோயில் அருகே உள்ள நல்லேந்தல் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் உடைந்தநிலையிலும் முழுமையான அமைப்பிலும் தென்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் தீவிரமான மழைப் பொழிவால் 2,000 ஆண்டுகள் பழைமையான முதுமக்கள் தாழிகளுக்குள் கறுப்பு - சிவப்பு பாத்திரங்கள் தென்பட்டுள்ளன.

தாழியில் கிடைத்த பாத்திரம்
தாழியில் கிடைத்த பாத்திரம்

இதுகுறித்து தொல்லியல் ஆர்வலர் ஜெமினி ரமேஷ் கூறுகையில், ``வைகை ஆற்றின் கிளை ஆறுகள் காளையார்கோயில் பகுதியில் ஓடியதற்கான சான்றுகள் உள்ளன. அதனால் கீழடியின் தொடர்ச்சியாகவும் இப்பகுதி இருக்கலாம். அதை உறுதிப்படுத்தும்விதனாக இலந்தக்கரை, நல்லேந்தல் உள்ளிட்ட பல இடங்களில் தொல்லியல் எச்சங்கள் மேல் பரப்பிலேயே சிதறிக் கிடக்கின்றன.

`6-ம் நூற்றாண்டு சிரியா நாணயம்; 17-ம் நூற்றாண்டு தங்க நாணயம்!' - கீழடி ஆச்சர்யம்

காளையார்கோயிலின் தெற்குப் பகுதியான நல்லேந்தல் என்ற இடத்தில் சுமார் 1,800 ஏக்கர் பரப்பளவில் முதுமக்கள் தாழிகள் மேல்பரப்பில் தென்பட்டுள்ளன. தற்போது முதுமக்கள் தாழிகளுக்குள் மனிதன் பயன்படுத்திய கருப்பு- சிவப்பு பாத்திரம் ஒன்று கிடைத்துள்ளது.

தாழி நல்லேந்தல்
தாழி நல்லேந்தல்

2000 வருடங்களுக்கு முற்பட்டதாக இந்தப் பாத்திரம் இருக்கக்கூடும். இதுபோன்று பல்வேறு அமைப்பு கொண்ட தொல்லியல் எச்சங்கள் இப்பகுதியில் கிடைக்கலாம். எனவே, அரசு காளையார்கோயில் சுற்றியுள்ள பகுதியை தேர்வு செய்து விரைவில் அகழாய்வுப் பணி செய்ய வேண்டும்" எனக் கோரிக்கை வைத்தார்.

அடுத்த கட்டுரைக்கு