Published:Updated:

`கி.பி 16 -ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட அருணாசல புராணம்!’- பழநியில் கண்டெடுக்கப்பட்ட பிரதி சுவடிகள்

எங்கள் தாத்தா காலத்துப் பெட்டி ஒன்று வீட்டுப் பரண் மீது கிடந்தது. அதை எடுத்து ஆய்வு செய்யும்போது, சில ஓலைச்சுவடிகள் கிடைத்தன.

ஓலைச்சுவடிகள்
ஓலைச்சுவடிகள்

அருணாசல புராணம், கி.பி 16-ம் நூற்றாண்டில் சைவ எல்லப்பநாவலர் என்பவரால் இயற்றப்பட்டது. தற்போது அந்தப் புராணத்தின் மூலமும் உரையும் கொண்ட ஓலைச்சுவடி பிரதிகள் கிடைத்துள்ளன.

திண்டுக்கல் மாவட்டம் பழநியை அடுத்துள்ள க.வேலூரில் இந்த ஓலைச்சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி, இந்த ஓலைச்சுவடிகளை மீட்டெடுத்து ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்துப் பேசிய நாராயண மூர்த்தி, ``எங்கள் தாத்தா காலத்துப் பெட்டி ஒன்று வீட்டுப் பரண் மீது இருந்தது. அதை எடுத்து ஆய்வு செய்யும்போது, சில ஓலைச் சுவடிகள் கிடைத்தன. அதை நானும் கணியன் ஞானசேகரன் என்பவரும் ஆராய்ந்து பார்த்தோம்.

நாராயணமூர்த்தி
நாராயணமூர்த்தி

அவை கி.பி 16-ம் நூற்றாண்டில் சைவ எல்லப்பநாவலரால் இயற்றப்பட்ட அருணாசல புராணத்தின் ஓலைச் சுவடி பிரதிகள் என்பது தெரியவந்தன. ஓலைச் சுவடியின் முதல் ஓலையில், 'பாலதண்டாயுதபாணி லட்சிப்பார்' என்ற ஒற்றை வரி காணப்படுகிறது. அடுத்த ஓலையில் ஆனந்த வருடம் புரட்டாசி மாதம், 4 திங்கள், 5 செவ்வாய்க் கிழமைகளில் சாயந்திரம் கிளாரெட் துரையும் பெங்களூர் துரையும் வரது நாயக்கரின் வழக்குப் பிரச்னையைத் தீர்த்து வைத்து ஒரு உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டு ராசியானதாக எழுதப்பட்டுள்ளது.

இவர்கள் யார் என்ற செய்தியும் என்ன வழக்கு என்ற விவரமும் ஓலையில் குறிப்பிடப்படவில்லை. இந்த உடன்படிக்கையின் நினைவாகக் கலையம்புத்தூரைச் சேர்ந்த மாரிமுத்து பண்டாரத்தின் மகன் சிதம்பரம் பண்டாரம் என்பவர் அருணாசல புராணத்தைத் தனக்கு வேண்டுமென எழுதியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த ஓலையில் அருணாசல புராணத்தின் பாயிரச் சிறப்பு 21 பாடல்களில் எழுதப்பட்டுள்ளது. பிறகு, `3 கிரந்தங்களில் (வடமொழி) சொல்லப்பட்டதைத் தமிழில் எழுதினேன்' என்று சிதம்பரப் பண்டாரம் குறிப்பிடுகிறார். மூல அருணாசல புராணத்தை எழுதிய சைவ எல்லப்பநாவலர் இரண்டு கிரந்தங்களில், வடமொழி சிவபுராணத்தில் ருத்திர சங்கிதை மற்றும் லிங்க புராணத்திலும் இந்தக் கருத்துகளை எடுத்து இயற்றியதாகச் சொல்லியுள்ள நிலையில், அதைப் படியெடுத்த சிதம்பரப் பண்டாரம் 3 கிரந்தங்களில் எழுதப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகிறார். மூல புராணம் 649 பாடல்கள் 14 சருக்கங்களாக இருந்த நிலையில் படியெடுத்த சிதம்பரப் பண்டாரம், புதிதாகப் பாடல்கள் எழுதி விரிவுபடுத்தினாரா என்பது தெரியவில்லை. ஓலைச் சுவடிகள் மோசமான நிலையில் மிகவும் சிதைந்து காணப்படுகின்றன.

ஓலைச்சுவடி
ஓலைச்சுவடி

உடன்படிக்கை ஏற்பட்ட 6 நாள்களுக்குப் பிறகு, புரட்டாசி மாதம் 11-ம் தேதி புராணத்தை எழுதத் தொடங்கிய சிதம்பரம், ஒரு சருக்கத்தைத் தாமரைக் குளத்தைச் சேர்ந்த சிதம்பர வன்னியரின் வீட்டு வாசலில் எழுதி முடித்ததாகக் குறிப்பிடுகிறார். நள ஆண்டு ஐப்பசி மாதம் 18-ம் தேதி (1797) இந்தச் சருக்கம் எழுதி முடிக்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறார். எனவே 3 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அருணாசல புராணம் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. மூல அருணாசல புராணத்துக்கும் இந்த ஓலைச்சுவடி பிரதிக்கும் இடையே மிகுந்த பாட பேதங்கள் காணப்படுகின்றன.

கம்பர், ராமாயணம் இயற்றும்போது சடையப்ப வள்ளல் அவரை ஆதரித்து உதவி செய்ததுபோல, அந்தக் காலத்தில் நூல் எழுதுபவருக்கும் அதிக படியெடுப்பவருக்கும் தமிழக மக்கள் வசதியும் உதவியும் செய்து கொடுத்திருக்கிறார்கள் என்பதை இந்த ஓலைச் சுவடிகள் மூலம் அறிய முடிகிறது'' என்றார் நெகிழ்ச்சியான குரலில்.