Election bannerElection banner
Published:Updated:

”ஆதிச்சநல்லூரில் அகழாய்வுக்கான முதற்கட்ட பணிகள் தொடக்கம்!”- தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி

ஆதிச்சநல்லூர்
ஆதிச்சநல்லூர்

ஆதிச்சநல்லூர், சிவகளைப் பகுதியில் அகழாய்வுக்கான முதற்கட்ட பணிகள்... தரையில் ஊடுறுவும் ரேடார் கருவிமூலம் தொடங்கியுள்ளதால், தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ளது ஆதிச்சநல்லூர். உலகில் நாகரிகம் தோன்றிய முதல் இடம் ஆதிச்சநல்லூர்தான் எனப் பல அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது, சிந்துசமவெளிக்கும் முந்தைய நாகரிகம் என வங்க தேசத்து அறிஞர் பானர்ஜி குறிப்பிட்டுள்ளார். இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகள், ’மெசபடோமியா’ பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகளை ஒத்துள்ளதாகவும் சில ஆய்வுகள் கூறுகின்றன.

முதுமக்கள் தாழி தகவல் மையம்
முதுமக்கள் தாழி தகவல் மையம்

ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகழ்வாராய்ச்சியாளர்களின் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களைத் தங்கள் நாட்டிற்கே கொண்டுசெல்லும் அளவுக்கு திறந்த மடமாகவே இந்தியா இருந்துள்ளது. இந்தியாவிலேயே இங்குதான் முதன்முதலில் அகழாய்வு நடந்தது. அதன்பின், 1902, 1903-ம் ஆண்டுகளில் இந்தியத் தொல்லியல் ஆராய்ச்சிக்காக அகழாய்வுப் பணி நடந்தது. கடந்த 2004ல், மத்திய தொல்லியல்துறையின் அகழாய்வு இங்கு நடைபெற்றது.

15 ஆண்டுகள் கழிந்தும் அதன் மாதிரி அறிக்கையை மட்டுமே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு, கடந்த ஜனவரி மாதம் ஆதிச்சநல்லூர், சிவகளை, தாமிரபரணிக் கரையில் உள்ள இடங்களில் அகழாய்வு செய்ய மத்தியஅரசிடம் அனுமதி பெற்றது. அதன் அடிப்படையில், தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவானந்தம், ஆதிச்சநல்லூர் களப் பொறுப்பாளர் பாஸ்கரன் உட்பட 10 பேர் அடங்கிய குழுவினர் ஈடுபட்டனர்.

எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு

114 ஏக்கர் பரப்பளவுகொண்ட ஆதிச்சநல்லூரில், 500 மீட்டர் நீளம், 500 மீட்டர் ஆகலத்தில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள இடத்தைத் தேர்வுசெய்து, தரையில் ஊடுருவும் ரேடார் கருவிமூலம் சுமார் 7 அடி ஆழத்திற்குப் பார்வையிட்டனர். இதுபோல், சிவகளையிலும் ஆய்வு நடந்து வருகிறது. மேலும், ஓரிரு தினங்களில் இந்தப் பகுதியில் தமிழக அரசு சார்பில் அகழாய்வுப் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதிச்சநல்லூரின் 4-வது கட்ட ஆய்வறிக்கையை முழுமையாக வெளியிட வலியுறுத்தி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தவரும், ‘ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்’ நூலின் ஆசிரியருமான எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவிடம் பேசினோம், “ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட 4-ம் கட்ட ஆய்வில் 169 முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஆய்வுப் பணி
ஆய்வுப் பணி

இந்த அகழாய்வின் முக்கியத்துவம்குறித்து நீதிமன்றத்தில் விளக்கப்பட்ட பிறகுதான் அகழாய்வுப் பகுதியைச் சுற்றி கம்பி வேலி அமைக்க உத்தரவிடப்பட்டது. இதற்கிடையில், இரண்டு முதுமக்கள் தாழிகளைக் கார்பன் சோதனைக்காக அமெரிக்காவிலுள்ள புளோரிடாவிற்கு அனுப்பியதில், ஒன்று கி.மு 905, மற்றொன்று கி.மு 791-ஐச் சேர்ந்தது எனவும் தெரியவந்துள்ளது. மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு, இதன் மாதிரி ஆய்வறிக்கையை மட்டும் சமர்ப்பித்தது மத்திய தொல்லியல்துறை.

அதில், ”ஆதிச்சநல்லூர் நாகரிகம் 2,900 ஆண்களுக்கு முந்தையது. சிசு முதல் வயதானவர்கள் வரை தனித்தனியாக தாழிகளுக்குள் வைக்கப்பட்டு புதைக்கப்பட்டனர். அப்போதே பட்டு, பருத்தி ஆடைகள் தயார் செய்யப்பட்டதை அதில் கிடைத்த துணிகளின் மூலம் அறிய முடிகிறது” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு குறித்த முழுமையான அறிக்கை விரைவாக வெளியிடப்பட வேண்டும். தமிழக அரசால் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு, தற்போது பயன்பாடு இல்லாமல் சமூக விரோதிகளின் மது அருந்தும் கூடாரமாக மாறிவிட்ட புளியங்குளம் முதுமக்கள் தாழி படக்காட்சி மையம் சீரமைக்கப்பட்டு, இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருள்களைக் காட்சிப்படுத்த வேண்டும்.

உடைந்துகிடக்கும் தாழிகள்
உடைந்துகிடக்கும் தாழிகள்

இதேபோல், சிவகளையிலும் தாமிரபரணிக் கரையிலும் உள்ள 37 இடங்களில் அகழாய்வு செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் மூலம் கோரிக்கை வைத்தோம். அதன்படி, தற்போது அகழாய்வுப் பணிகள் தொடங்கவுள்ளது மகிழ்ச்சி அளித்துள்ளது” என்றார். இந்த ஆய்வின்மூலம், கீழடியைப் போல விரைவில் ஆதிச்சநல்லூர், சிவகளை நாகரிகமும் வெளிவரும் என நம்பிக்கையுடன் உள்ளனர் இப்பகுதி மக்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு