Published:Updated:

புதுக்கோட்டை: தொன்மை பேசும் பொற்பனைக்கோட்டை - ஜிபிஆர் கருவி மூலம் அகழாய்வு இடங்கள் தேர்வு!

ஜிபிஆர் கருவி மூலம் அகழாய்வு இடங்கள் தேர்வு
ஜிபிஆர் கருவி மூலம் அகழாய்வு இடங்கள் தேர்வு

"ஜிபிஆர் சோதனையில் ஒரு சில இடங்கள் கட்டுமானங்கள் போன்ற கட்டமைப்புகள் இருப்பதை அறியமுடிகிறது. அகழாய்வில் தொன்மையான வரலாற்று சிறப்பு வாய்ந்த பொருLகள் கிடைக்க அதிக வாய்ப்பிருக்கிறது." - ஆய்வுக்குழுவினர்

புதுக்கோட்டையிலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் இருக்கிறது பொற்பனைக்கோட்டை. தொன்மை மிக்க இடமாகக் கருதப்படும் பொற்பனைக்கோட்டையில் கோட்டை கொத்தளங்கள், அகழிகள், கறுப்பு, சிவப்பு பானை ஓடுகள், பாறையில் செதுக்கப்பட்ட குழி, இரும்பு உருக்கு ஆலைகள் செயல்பட்டதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. இங்கு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தினர், இங்கு பழைமையான கட்டுமானங்கள் இருப்பதைக் கண்டறிந்து, அரசு அகழாய்வு செய்ய வேண்டும் எனக் கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இதனையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை அகழாய்வு செய்ய அனுமதித்து அதற்கான ஆணையையும் வழங்கியது. தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் இவ்விடத்தை அகழாய்வு செய்ய அரசிடம் கோரிக்கை வைத்தது.

ஜிபிஆர் கருவி மூலம் அகழாய்வு இடங்கள் தேர்வு
ஜிபிஆர் கருவி மூலம் அகழாய்வு இடங்கள் தேர்வு

அகழாய்வு செய்ய இந்தியத் தொல்லியல் துறை அனுமதியும் கிடைத்தது. அதனடிப்படையில், தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழக தொல்லியல் துறை பேராசிரியர் இனியன் தலைமையில் தொழில் நுட்பக் குழுவினர் பொற்பனைக்கோட்டையை ஆய்வு செய்ய வந்தனர். அகழாய்வு செய்வதற்கான இடங்களை ஜிபிஆர் கருவி (ground-penetrating radar) மூலம் ஆய்வு செய்து தகவல்களைச் சேகரித்தனர்.

இதுபற்றி ஆய்வுக்குழுவினரிடம் கேட்டபோது, "ஜிபிஆர் கருவி மூலம் மின் காந்த அலையை மண்ணுக்குள் செலுத்திச் செய்யப்படும் சோதனை இது. எந்த இடத்தில் நாம் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்கலாம். ஜிபிஆர் சோதனையில் ஒரு சில இடங்கள் கட்டுமானங்கள் போன்ற கட்டமைப்புகள் இருப்பதை அறியமுடிகிறது. அகழாய்வில் தொன்மையான வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பொருள்கள் கிடைக்க அதிக வாய்ப்பிருக்கிறது. விரைவிலேயே இங்கு அகழாய்வுப் பணிகள் துவங்க வாய்ப்பிருக்கிறது" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு