Published:Updated:

சோழர் காலத்து ஈழக்காசுகளை கண்டெடுத்த அரசுப் பள்ளி மாணவி; குவியும் பாராட்டுகள்!

ஈழக்காசுகள்
News
ஈழக்காசுகள்

``இப்பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்றத்தை 10 வருடங்களாக நடத்தி வருகிறோம். இதன் மூலம் வரலாற்றில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகளுக்குப் பயிற்சி கொடுத்து பல இடங்களுக்கு ஆய்வு செய்ய அழைத்துச் செல்கிறோம். 3 வருடங்களுக்கு முன்பே ராஜராஜ சோழன் வெளியிட்ட 10 ஈழக்காசுகள் கிடைத்தன."

இலங்கையை வெற்றி கொண்டதை குறிப்பிடும் வகையில் முதலாம் ராஜராஜ சோழன் காலத்தில் வெளியிடப்பட்ட காசுகளை கண்டுபிடித்த அரசுப்பள்ளி மாணவி அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறார்.

முனீஸ்வரி
முனீஸ்வரி

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் டூ மாணவி முனீஸ்வரி பயின்று வருகிறார். பள்ளியில் இயங்கி வரும் தொல்லியல் குழுவில் இணைந்து ஓய்வு நேரங்களில் தொல்லியல் பொருள் தேடுதல், கல்வெட்டு வாசித்துப் பழகுதல் என்று வரலாற்று ஆர்வம் காட்டி வருகிறார் மாணவி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

முனீஸ்வரி சமீபத்தில் ஊருக்கு அருகில் ஆய்வுப்பணி செய்தபோது 3 செப்புக்காசுகளை கண்டுபிடித்துள்ளார். அதை, தன் பள்ளி ஆசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான ராஜகுருவிடம் காண்பித்துள்ளார். அக்காசுகளை ஆய்வு செய்தபோது அவை ராஜராஜ சோழன் காலத்து ஈழ செப்புக்காசுகள் என்பது கண்டிபிடிக்கப்பட்டது.

மாணவியை பாராட்டும் ராமநாதபுரம் எஸ்.பி கார்த்திக்
மாணவியை பாராட்டும் ராமநாதபுரம் எஸ்.பி கார்த்திக்

மாணவி முனீஸ்வரியின் கண்டுபிடிப்பு பற்றிய தகவல் அறிந்து பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள். ராமநாதபுரம் எஸ்.பி கார்த்திக் நேரில் சென்று பாராட்டி பரிசளித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``முதலாம் ராஜராஜ சோழன் இலங்கையை வெற்றி கொண்டதன் அடையாளமாக வெளியிடப்பட்ட ஈழக்காசுகளை மாணவி முனீஸ்வரி கண்டுபிடித்துள்ளது மகிழ்ச்சியை தருகிறது. மாணவர்களுக்கு தொல்பொருள்களை அடையாளம் காணவும், கல்வெட்டுகளை படிக்கவும் பயிற்சி அளித்து வரும் பள்ளி நிர்வாகத்துக்கு வாழ்த்துகள்" என்று கனிமொழி எம்.பி சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ளதை பள்ளி நிர்வாகத்துக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

ராஜகுரு
ராஜகுரு

திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற செயலாளரும் ஆசிரியருமான ராஜகுருவிடம் பேசினோம். ``இப்பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்றத்தை 10 வருடங்களாக நடத்தி வருகிறோம். இதன் மூலம் வரலாற்றில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகளுக்குப் பயிற்சி கொடுத்து பல இடங்களுக்கு ஆய்வு செய்ய அழைத்துச் செல்கிறோம். 3 வருடங்களுக்கு முன்பே ராஜராஜ சோழன் வெளியிட்ட 10 ஈழக்காசுகள் கிடைத்தன. இப்போது மாணவி முனீஸ்வரி 3 ஈழக்காசுகளைக் கண்டெடுத்துள்ளார்.

அக்காலத்தில் மன்னர்கள் தங்கள் போர் வெற்றியை கொண்டாட நாணயங்களை வெளியிட்டுள்ளனர். ராஜராஜ சோழன் இலங்கை மீது போர் தொடுத்து வெற்றி கண்டதை கொண்டாடும் வகையில் ஈழக்காசுகள் வெளியிடப்பட்டுள்ளன. இக்காசுகள் முதலாம் ராஜராஜ சோழன் காலம் முதல் குலோத்துங்க சோழன் காலம் வரை புழக்கத்தில் இருந்துள்ளன. பொன், வெள்ளி, செப்பு உலோகங்களில் இக்காசுகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை ஈழக்கருங்காசு என்றும் சொல்வார்கள்.

ஈழக்காசுகள்
ஈழக்காசுகள்

இலங்கை மக்களின் பயன்பாட்டுக்கு வார்க்கப்பட்ட இக்காசுகள், சோழ அரசின் ஆளுகையின் கீழ் பாண்டிய நாடு இருந்தபோது ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை நகரங்களில் புழக்கத்தில் இருந்துள்ளன" என்றார்.

ஆசிரியர் ராஜகுரு தலைமையில் இப்பள்ளியில் இயங்கும் தொன்மை பாதுகாப்பு மன்றத்திலுள்ள மாணவர்கள் தமிழர்களின் வரலாற்றை ஆய்வு செய்வதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு வகையான அரிய தொல்லியல் பொருள்கள் மற்றும் கல்வெட்டுகளை கண்டறிந்துள்ளனர்.