Published:Updated:

`யான் நோக்கின் நிலம் நோக்கும்' பெண் அல்ல அவள்! - இந்தியாவின் மோனாலிசா #MyVikatan

மிக முக்கியமான இந்த நிகழ்வுக்கு நாட்டிய மங்கையின் சிலையை தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் என்ன என்று அறியும் ஆவல் ஏற்பட்டது.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

வரலாற்று ஆய்வாளர், ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி பாலகிருஷ்ணனின் வாழ்நாள் சாதனையான `Journey of a Civilization - Indus to Vaigai' என்ற நூலின் வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருந்தோம். இந்த நூல், இந்திய வரலாற்றில் இணைக்கப்படாமல் இருந்த புள்ளிகளை இணைக்கும் மிக முக்கியமான ஆவணம். நம் வரலாற்றின் பெருமைமிக்க தொன்மை குறித்தும் பகுத்தறிவுப் பண்பாடு குறித்தும் சமத்துவப் பாரம்பர்யம் குறித்தும் சான்றுகளோடு எடுத்துரைக்கும் புதையல். இந்த நூலை, இப்போதுதான் படிக்கத் தொடங்கி இருக்கிறேன். நூல் குறித்த கருத்துகளை பின்னொரு நாளில் பதிவு செய்கிறேன்

Journey of a Civilization - Indus to Vaigai book
Journey of a Civilization - Indus to Vaigai book

இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கு மொகஞ்சதாரோ அகழ்வாராய்ச்சியின்போது கண்டெடுக்கப்பட்ட `நாட்டிய மங்கை' வெண்கலச் சிலையின் மாதிரியை பாலகிருஷ்ணன் நினைவுப் பரிசாக வழங்கினார். மிக முக்கியமான இந்த நிகழ்வுக்கு நாட்டிய மங்கையின் சிலையை தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் என்ன என்று அறியும் ஆவல் ஏற்பட்டது.

நாட்டிய மங்கையின் இந்தச் சிலை மொகஞ்சதாரோ அகழ்வாராய்ச்சியின்போது, 1926-ம் ஆண்டு எர்னஸ்ட் மெக்காய் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட இடம் தற்போதைய பாகிஸ்தானில் இருக்கிறது. சிந்து சமவெளி நாகரிகம் கி.மு: 3000-ம் ஆண்டிலிருந்து கி.மு: 1500-ம் ஆண்டு வரையிலான காலத்தியது.

அந்தக் காலகட்டத்தில் எகிப்து நாகரிகம், மெசபடோமிய நாகரிகம், சீன நாகரிகம், இன்கா நாகரிகம், பண்டைய கிரேக்க நாகரிகம் போன்ற தொன்மையான நாகரிகங்கள் இருந்தன. ஆனால், அவை அனைத்தையும்விட மிகப் பெரிய நாகரிகம் சிந்து சமவெளி நாகரிகம்.

நாட்டிய மங்கை
நாட்டிய மங்கை

அன்றைய ஆப்கானிஸ்தானத்தின் பெரும்பகுதி, இன்றைய பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் வடமேற்குப் பகுதி எனப் பரவியிருந்தது. சிறந்த கட்டமைப்புக் கொண்ட நகரங்களில் வாழ்ந்த சமூகம் அது. 5000 ஆண்டுகளுக்கு முன்பே கடல் வணிகம் செய்த பெருமைக்குரிய சமூகம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாலகிருஷ்ணனின் நூல் வெளியீட்டு விழாவில் நினைவுப் பரிசாக தரப்பட்ட நாட்டிய மங்கை மாதிரியின் மூலச் சிலை 4,500 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து வெளியில் வடிக்கப்பட்டது. அது வெண்கலத்தில் செய்யப்பட்ட சிலை. அந்தச் சிலை முதலில் தேன் மெழுகு அல்லது மரத்திலிருந்து கிடைக்கக்கூடிய ஏதோ ஒரு மெழுகில் செய்யப்பட்டது. பிறகு அதைச் சுற்றி குறிப்பிட்ட வகை மென்மையான களிமண் பூசப்பட்டு அச்சு உருவாக்கப்பட்டிருக்கும். அந்தக் களிமண் அச்சு ஒருநாள் கழித்து சுடப்படும்போது, உள்ளே இருக்கும் மெழுகு உருகி களிமண் அச்சில் உள்ள ஓட்டையின் வழியாக வெளியே வந்துவிடும். பிறகு அந்த ஓட்டையின் வழியாக உலோகக் கலவை ஊற்றப்படும். அடுத்தநாள் மண்பூச்சு தட்டி எடுக்கப்பட்டு உள்ளே உள்ள உலோகச் சிலை நகாசு செய்யப்படும்.

சிந்து சமவெளி நாகரிகம்
சிந்து சமவெளி நாகரிகம்

சிந்து சமவெளி மக்கள் உலோகங்களை உருக்கி, கலவையாக்கும் தொழில்நுட்பத்தை, அதாவது தாமிரத்தோடு இரும்பு, தகரம் போன்றவற்றை இணைத்து வெண்கலம் செய்யும் தொழில்நுட்பத்தை அறிந்திருந்தார்கள். உலோகச் சிலைகள் செய்யும் இந்தத் தொழில்நுட்பம் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு சிந்துசமவெளியில் உருவாகி, இன்று வரை நடைமுறையில் உள்ளது என்பது நம் அறிவியல் மரபிற்கான சான்று. சிந்து சமவெளி நாகரிகம், ஒரு திராவிட நாகரிகம் என்பது நம் பெருமை.

நாட்டிய மங்கையின் சிலை 10.5 சென்டிமீட்டர் உயரமானது. 15 வயது மதிக்கத்தக்க அந்த இளம்பெண் ஆடை எதுவும் அணியவில்லை. அவளுடைய இடது கையில் 24 வளையல்களும் வலதுகையில் 4 வளையல்களும் இருக்கின்றன. அவள் கழுத்தில் அணிந்திருக்கும் சங்கிலியில் 3 மணிகள் இருக்கின்றன. அவளுடைய தலைமுடி அழகான கொண்டையாக, நேர்த்தியாக முடியப்பட்டிருக்கிறது. அவள் தலை நிமிர்ந்திருக்கிறது. `யான் நோக்கின் நிலம் நோக்கும்' பெண் அல்ல அவள்.

நாட்டிய மங்கை
நாட்டிய மங்கை

தன்னம்பிக்கையுடைய, ஆளுமை நிறைந்த பெண். அழகிய அதேசமயம் வலுவான உடல் அமைப்பு கொண்ட பெண் அவள். அவளுடைய கைகள் நீளமானவை. நீளமான கைகளை உடையவர்கள் அறிவில் சிறந்தவர்களாக தலைவர்களாக விளங்குவார்கள் என்பது நம் நாட்டின் நம்பிக்கை. புத்தருடைய கைகள் நீளமானவை. நம் கர்ம வீரர் காமராஜருடைய கைகளும் கூட நீளமானவை. ஆணையும், பெண்ணையும் சரிநிகர் சமானமாகக் கருதிய ஒரு சமூகத்தின் பெண்.

இதை ஆய்வு செய்த மார்ட்டின் வீலர், இதைப் போன்ற சிலை உலகில் இல்லை என வர்ணித்திருக்கிறார்.

சிந்து சமவெளி நாகரிகம்
சிந்து சமவெளி நாகரிகம்

சிந்துவெளி நாகரிகத்தில் மிகப் பெரிய மன்னர்கள் இருந்ததற்கான அடையாளங்கள் இல்லை. கார்ல் மார்க்ஸ் கூறிய ஆதி கம்யூனிச சமூகமாகவே அது இருந்திருக்க வேண்டும். மத அமைப்புகளோ, மனித உருவத்தில் உள்ள கடவுள்களோ, வழிபாட்டுக் கட்டடங்களோ இருந்ததற்கான அடையாளங்களும் இல்லை. இவையே கீழடி நகர அமைப்பின் கூறுகளாகவும் இருக்கின்றன.

மிகப்பெரிய வெள்ளம், ஏதேனும் இயற்கைப் பேரழிவு, பருவநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட கடுமையான வறட்சி போன்ற ஏதோ ஒரு காரணத்தால் இந்த மாபெரும் நாகரிகம் தன் தொட்டிலைவிட்டு புலம்பெயர்ந்து இந்தியாவெங்கும் பரவியது என்பதை சான்றுகளோடு விளக்கும் நூல் பாலகிருஷ்ணன் எழுதிய `Journey of a Civilization - Indus to Vaigai' என்ற நூல். சிந்து சமவெளி மக்கள் தங்கள் உயரிய பண்பாடுகளைச் சுமந்து, தங்கள் வாழ்விடங்களை விட்டுப் புலம்பெயர்ந்து, இந்தியாவெங்கும் பரவினார்கள். இறுதியில் வைகைக் கரையிலே வந்து நிலை பெற்றார்கள் என்பதே பாலகிருஷ்ணனின் ஆய்வின் முடிவு.

இத்தாலி புளோரன்ஸ் நகரில் உள்ள அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டிருக்கும் டேவிட் சிலை கலைகளின் அடையாளமாகப் போற்றப்படுகிறது. மைக்கேல் ஆஞ்சலோவால் உருவாக்கப்பட்ட அந்தச் சிலை இத்தாலி நாட்டின் அடையாளம். பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் அமைந்துள்ள லொவேர் (Loure museum) அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் லியோனார்டோ டாவின்சி வரைந்த, மோனாலிசா ஓவியம் அந்த நாட்டின் அடையாளம்.

மோனாலிசா ஓவியம்
மோனாலிசா ஓவியம்

நாட்டிய மங்கை நம் நாட்டின் அடையாளம். மரபுச் சின்னம். ஏனென்றால் சாதிகள் இல்லாத, மதங்கள் இல்லாத, மூடநம்பிக்கைகள் இல்லாத சமூகத்தின், சமத்துவத்தோடு வாழ்ந்த முற்போக்கு மரபின் அடையாளம் அவள்.

-மருத்துவர். இரா செந்தில்

(தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி மேனாள் உறுப்பினர்)

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு