Published:Updated:

கிருஷ்ணகிரி: மலைக் கிராமத்தில் மலைக்க வைக்கும் சடங்கு முறைப் பாறை ஓவியங்கள்!

ஓவியங்கள் வரையப்பட்ட பாறை
ஓவியங்கள் வரையப்பட்ட பாறை

இப்பாறை ஓவியங்களில் இரு புலிகள், இரு காட்டுப்பன்றி, இரு மீன் உருவங்கள், குதிரையின் மீது அமர்ந்த நிலையிலும், கிழே நின்ற நிலையிலும் மனிதஉருவங்கள், குறியீடுகள் போன்றவை இப்பாறைகளில் காணப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் சுமார் 2,500 ஆண்டுகள் பழைமையான பெருங்கற்காலத்தைச் சார்ந்தவைகள் என்றும், இந்த ஓவியங்கள் சடங்கு முறை ஓவியங்கள் என்றும், இவை வெறும் வெள்ளைச் சுண்ணாம்பு கற்களால் வரையப்பட்டது என்றும் தொல்லியல்துறை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

பரந்தாமன் - வரலாற்றுத் துறை இணை ஆய்வாளர்
பரந்தாமன் - வரலாற்றுத் துறை இணை ஆய்வாளர்

இதுபற்றி காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை இணை ஆய்வாளர் பரந்தாமன், ``இந்திய தொல்லியல்துறையின் கள ஆய்வாளர் ரமேஷ், உதவி தொல்லியல் ஆய்வாளர் அன்பு மற்றும் நான் ஆகியோர் சேர்ந்து ஓய்வு கிடைக்கும்போது ஆய்வு மேற்கொள்ளுவது வழக்கம். கிருஷ்ணகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் புதுப்புது வரலாற்று பொருள்கள் கிடைக்கும். தமிழகத்தில் முதன்முதலில் 1981-ல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன.

தேன்கனிக்கோட்டை பெட்டமுகிலாலம் என்ற மலைக் கிராமத்தில் தற்போது பாறைக் குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த ஓவியங்கள் பெட்டமுகிலாலம் மலைக் கிராமத்திலிருந்து கிழக்கே 2 கி.மீட்டர் தொலைவில் வனப்பகுதியில் பாறைக் குகைத் தளத்தின் விதானத்திலும், பக்கவாட்டிலும் வெண்மை நிறத்தில் வரையப்பட்டுள்ளது.

கள ஆய்வாளர் ரமேஷ் & உதவி தொல்லியல் ஆய்வாளர் அன்பு
கள ஆய்வாளர் ரமேஷ் & உதவி தொல்லியல் ஆய்வாளர் அன்பு

இந்தப் பாறை ஓவியங்களில் இரு புலிகள், இரு காட்டுப்பன்றி, இரு மீன் உருவங்கள், குதிரையின் மீது அமர்ந்த நிலையில் ஒரு மனித உருவம், கீழே நின்ற நிலையில் ஒரு மனித உருவம், குறியீடுகள் போன்றவை காணப்படுகின்றன. இதில் புலிகளின் உருவம் 2.5 அடி உயரமும், 3 அடி நீளத்திலும் இருப்பது வியப்பளிக்கிறது.

இப்பாறை ஓவியங்கள் சடங்குக்காக வரைந்திருக்கலாம். ஏனென்றால் புலிகளின் உருவம் பெரிய அளவில் வரையப்பட்டுள்ளதால் வேட்டைக்குச் செல்லும்போது புலிகளிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ளவும், வேட்டையில் அதிக அளவில் பொருள்கள் கிடைக்க வேண்டியும் இந்தப் பாறை ஓவியங்கள் வரைந்திருக்கலாம்.

பாறை ஓவியம்
பாறை ஓவியம்

ஏற்கெனவே பெட்டமுகிலாலம் மலைக் கிராமத்தில் தொல்லியல் அறிஞர்களான நரசிம்மையா மற்றும் ராஜன் போன்றவர்கள் பெருங்கற்கால ஈமச் சின்னங்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்தப் பாறை ஓவியங்களும் பெருங்கற்காலத்தைச் சார்ந்த சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கும். இந்த ஓவியங்கள் வெள்ளைச் சுண்ணாம்பு கற்களால் வரையப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் அதிகளவு ஆய்வுகள் மேற்கொண்டால் பல்வேறு தொல்லியல் எச்சங்களைக் கண்டுபிடிக்க முடியும்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு