Published:Updated:

திருவண்ணாமலை: சேதமடைந்த நடுகற்களை மீட்டு QR Code மூலம் வரலாற்றைத் தெரியப்படுத்தும் ஆய்வுக் குழு!

புனரமைப்பு செய்யப்பட்ட நடுகல்
புனரமைப்பு செய்யப்பட்ட நடுகல்

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த குழுவினர், மிகவும் தொன்மை வாய்ந்த சேதமடைந்த நடுகற்களை கண்டறிந்து புனரமைப்பதோடு, QR CODE மூலம் அதன் வரலாற்றை தெரியப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழர்களின் வரலாறு பல்வேறு ஆச்சர்யத் தகவல்களை உள்ளடக்கியதாகும். தமிழின் சுவை எவ்வளவு இனிமையானதோ அதைப் போலவே ஒவ்வொரு முறையும் கண்டறியப்படும் தமிழர்களின் வரலாற்றுச் சிறப்புகளும் வியப்பை ஏற்படுத்தக் கூடியவையே. தமிழகத்தில் பரவலாக கண்டறியப்படும் தொன்மைவாய்ந்த வரலாற்றுக் குறிப்புகளும், சின்னங்களும் உலகிற்குப் பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தி வருகின்றன. அதில் தொன்மைவாய்ந்த வரலாற்று நடுகற்கள் வழிபாடும் முக்கியமானவையே. தமிழர்களின் வரலாற்றில், உருவச்சிலை வழிபாடுகளுக்கு முன்பாக நடுகல் வழிபாடு இருந்ததாக ஆய்வாளர்கள் கூறுவதுண்டு.

வீரணம் கிராமம், தந்தை - மகன் ஒரே போரில் இறந்ததால் அக்காலத்தில் வைக்கப்பட்ட நடுகல்.
வீரணம் கிராமம், தந்தை - மகன் ஒரே போரில் இறந்ததால் அக்காலத்தில் வைக்கப்பட்ட நடுகல்.

வரலாற்றைப் பறைசாற்றும் நடுகற்களின் வழிபாடுகள் தற்போது பெரும்பாலும் மறைந்துவிட்டன. மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் பல்வேறு பகுதிகளில் சிதையும் நிலையிலும், சிதைந்தும் உள்ளன. நடுகற்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமான ஒன்றே. இதை உணர்ந்த திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் குழுவினர், சேதமடைந்த நடுகற்களை மீட்டுப் புனரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை: `புலி வேட்டை வீரர்கள்; 8 அடி உயரம்!’ - ஆச்சர்யம் தரும் புலிக்குத்தி நடுகல்

இதுகுறித்து அந்த வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் பாலமுருகனிடம் பேசினோம்.

"வட்டெழுத்து பொறிக்கப்பட்ட வரலாற்று நடுகற்கள் திருவண்ணாமலை, செங்கம் பகுதியில் அதிகம் கிடைக்கின்றன. கி.பி.6-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணு காலத்திலிருந்து 11வது நூற்றாண்டு வரை நடுகற்கள் கிடைத்துள்ளன. சில இடங்களில் இதுபோன்ற நடுகற்கள் வழிபாட்டில் இல்லாமல் இருக்கின்றன. சில இடங்களில் உடைந்து நிலையிலேயே கிடைக்கின்றன. வரலாற்றைத் தாங்கி நிற்கும் இவை காக்கப்பட வேண்டும் என முடிவு செய்தோம்.

சிறிய செலவில் முடியும் விஷயத்திற்கு, அரசிடம் உதவி கேட்டுக் காலம் தாழ்த்துவதைத் தவிர்க்கக் களத்தில் இறங்கலாம் என முடிவு செய்தோம். புனரமைப்பு செய்ய வேண்டிய நடுகற்கள் இருக்கும் ஊரை சேர்ந்த சிலரின் உதவியோடு இந்தப் பணியை கையில் எடுத்தோம். எடத்தனூர், ராதாபுரம், தண்டராம்பட்டு, கீழ் ராவந்தவாடி, தேசூர், வீரணம், செ.கூடலூர் என 7 ஊர்களில் உடைந்த நிலையில் இருந்த நடுகற்களை மீட்டு புனரமைத்துள்ளோம். இம்மாதத் துவக்கத்தில்தான் வீராணம் பகுதியிலும், சே.கூடலூர் பகுதியிலும் உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட நடுகற்களை சிமெண்ட் கொண்டு இணைத்து புனரமைத்தோம்.

புனரமைப்பு பணி
புனரமைப்பு பணி

அந்த நடுகற்களை பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் மக்கள் பலராலும் அதில் உள்ள எழுத்துக்களைப் படிக்க முடியாது. எனவே, கியூ ஆர் கோட் (QR code) ஐ பயன்படுத்தத் தொடங்கியுள்ளோம். நடுகற்களை புனரமைத்ததும் அதன் அருகே தற்போது பதாகை ஒன்று வைத்து வருகிறோம். அந்தப் பதாகையின் இறுதியில் கியூ ஆர் கோட் ஒன்று இருக்கும். அதை 'யாதும் ஊரே' வலைப்பக்கத்துடன் இணைத்துள்ளோம். நடுகல்லில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் அந்த ஊரின் அமைவிடம், வரலாறு ஆகியவற்றை வலைப்பக்கத்தில் பதிவேற்றம் செய்து விடுவோம். அங்கு வரும் நபர்கள் அந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் போதும் முழுமையான தகவல்களை சுலபமாக அறிந்து கொள்ளலாம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு