Published:Updated:

ஏரிப் பராமரிப்புக்காக 96 படி நெல்லுக்கு ஒரு படி நெல் வரி... முதலாம் பராந்தகன் காலத்து கல்வெட்டு!

ஏரிப் பராமரிப்புக்காக, நெல் வரியாகக் கொடுக்கப்பட்டதைத் தெரிவிக்கும் கல்வெட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் தொன்மை வாய்ந்த பல புராதனச் சின்னங்கள் வியப்பை ஏற்படுத்தும் வகையில் கிடைத்து வருகின்றன. அந்த வரிசையில், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த நல்லூர் அருகே உள்ள ராமசமுத்திரத்திலும் 1,078 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கல்வெட்டு ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆறு மற்றும் ஏரி பாசனத்தையே பெரிதும் நம்பியிருந்த அந்தக் காலக்கட்டத்தில், நீர் மேலாண்மைக்காக எடுக்கப்பட்ட சுவாரஸ்ய நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் இந்தக் கல்வெட்டில் இடம் பெற்றுள்ளன. அரசுப் பள்ளி ஆசிரியரான ஜெயவேல் மற்றும் பாரதிராஜா ஆகிய இருவரும் இந்தக் கல்வெட்டைக் கண்டறிந்த பின், ஆய்வு செய்து உறுதிப்படுத்துவதற்காக அரியலூரை சேர்ந்த தொல்லியல் ஆராய்ச்சியாளர் தியாகராஜன் என்பவருக்குப் புகைப்படமாக அனுப்பியுள்ளனர். அதன்பின்னரே, அந்தக் கல்வெட்டு குறித்த முழுமையான தகவல்களையும் கண்டறிந்துள்ளனர்.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை

இதுகுறித்து பாரதிராஜா என்பவரிடம் பேசினோம். "என்னுடன் பணிபுரியும் ஆசிரியர் ஜெயவேல். அவர் வீட்டின் அருகே உள்ள கல் பாறை ஒன்றில் கல்வெட்டு பொறிக்கப்பட்டு இருப்பதாகவும், அதை வந்து பார்க்கும்படியும் கூறினார். இருவரும் நேரில் சென்று பார்த்தபோது, அதில் 7 வரிசைகளில் எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து அரியலூரைச் சேர்ந்த தொல்லியல் ஆராய்ச்சியாளர் தியாகராஜன் அய்யா அவர்களுக்கு தகவல் தெரிவித்தோம். பின், போட்டோ எடுத்து அனுப்பி வைத்தோம். அவர்கள் ஆய்வு செய்து பார்த்துவிட்டு தகவல் கூறினார்.

பழங்கால இந்திய மக்களின் நீர் மேலாண்மை நுட்பங்கள்!

பரகேசரி பரகேரிவர்மன் என்ற பட்டம் கொண்ட முதலாம் பராந்தக சோழன் கி.பி.907 முதல் கி.பி.958 வரை ஆட்சி செய்தவன். அவனுடைய 35வது ஆட்சி ஆண்டிலேயே இந்தக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பார்த்தால் இந்தக் கல்வெட்டு, 942 வது ஆண்டைச் சேர்ந்தது என அறியமுடிகிறது

திருவண்ணாமலை: சேதமடைந்த நடுகற்களை மீட்டு QR Code மூலம் வரலாற்றைத் தெரியப்படுத்தும் ஆய்வுக் குழு!

துவக்கத்தில், 'மதுரையைக் கொண்ட கோப்பரகேசரி' எனும் முதலாம் பராந்தகச் சோழனின் மெய்க் கீர்த்தி வருகிறது. அவரது ஆட்சிக்காலத்தில் சாத்தனூர் என அழைக்கப்பட்ட இந்தப் பகுதியை சிற்றரசன் குமரன் என்பவர் ஆட்சி புரிந்துள்ளார். தற்போது இந்த ஊர் ராமசமுத்திரம் என்றே அழைக்கப்படுகிறது. இந்தக் கல்வெட்டு உள்ள இடத்திலிருந்து சுமார் 1 கி.மீட்டருக்கு உள்ளாகவே பெரிய ஏரி ஒன்று உள்ளது. சமுத்திரம் என்ற சொல்லும் பெரிய நீர் பரப்பை குறிப்பதாகும். இந்தச் சொல் விஜயநகரபேரரசு ஆட்சி காலத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மெய் கீர்த்தியைத் தொடர்ந்து 'வரி' பற்றிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

கல்வெட்டு
கல்வெட்டு

'காடி' என்ற சொல்லை தஞ்சைப் பகுதியில் பயன்படுத்துவார்கள். தொண்டை மண்டலமான நம் பகுதிகளில் 'கலம்' என்பார்கள். ஒரு கலம் நெல் விளைந்தால்... ஒரு நாழி நெல் எனும் வீதத்தில் ஏரியின் பராமரிப்புக்காக வரி செலுத்தவேண்டும். அதாவது சுமார் 96 படி நெல் விளைந்தால் ஒரு படி நெல்லை வரியாக ஏரி பராமரிப்புக்கு செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை பின்பற்றுவோரின் பாதத்தை என் தலைமேல் வைத்து வழிபடுவேன் என்றும்; இந்த தர்மத்தைப் பின்பற்றாதவர்கள், கங்கை முதல் குமரிக்கு இடைப்பட்ட மக்கள் அனைவரும் செய்த பாவத்திற்கு போவார்கள் என்றும் அந்த சிற்றரசனால் எழுதப்பட்ட கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றார்.

அதைத்தொடர்ந்து மேலும் பேசிய அவர், "இந்த ஊரில் சோழர் காலத்தில் கோயில் ஒன்று இருந்துள்ளது. அதன் எச்சங்களை மட்டுமே தற்போது காண முடிகிறது. இரண்டு தவ்வை சிலைகள், வலம்புரி விநாயகர் மற்றும் நந்தி சிலைகள் மட்டுமே காணப்படுகின்றன. மற்ற ஏதும் தற்போது இல்லை" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு