Published:Updated:

"தற்காலத் தேர்தலும் குடவோலை முறையும் ஒன்றா?"- மோடி சுட்டிய உத்திரமேரூர் கல்வெட்டுகள் சொல்வது என்ன?

"உத்திரமேரூர் கல்வெட்டுகள் வரலாற்றில் மிக முக்கியமானவை. அந்தக் காலத்தில் இருந்த தேர்தல் முறைக்குச் சான்றுபகர்பவை. ஊராட்சி நிர்வாகம் எப்படித் திறமையோடும் நியாயத்தோடும் நிர்வகிக்கப்பட்டது என்பதற்கு ஆதாரமானவை."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புதிய பாராளுமன்றத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டிப்பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் ஜனநாயகத்தின் பெருமைகளை எடுத்துரைத்தார். இதற்கு உதாரணமாக ஆயிரம் ஆண்டுகள் பழைமையான உத்திரமேரூர் கல்வெட்டு ஆதாரங்களைக் குறிப்பிட்டார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தக் கல்வெட்டுகளில் அந்தக் காலத் தேர்தல் நடைமுறைகள் எப்படியிருந்தன என்பது குறித்து விளக்குகின்றன என்று எடுத்துரைத்தார்.
உத்திரமேரூர்
உத்திரமேரூர்

சென்னை, செங்கல்பட்டை அடுத்து இருக்கும் உத்திரமேரூருக்குக் 'கல்வெட்டு ஊர்' என்றே பெயர் உண்டு. அந்த அளவுக்கு பண்டைய வரலாறு சார்ந்த கல்வெட்டுகளும் இரண்டாயிரம் ஆண்டுகால வரலாற்று எச்சங்களும் அநேகம் அங்கு உள்ளன. அங்கு ஊருக்கு நடுவே அமைந்திருக்கும் வைகுண்டப்பெருமாள் கோயிலை ஒட்டி அமைந்திருக்கும் சபையில் காணப்படும் கல்வெட்டுகளில் அந்தக்காலத் தேர்தல் நடைமுறைகள் எவ்வாறு இருந்தன என்பது குறித்த செய்திகள் காணப்படுகின்றன. அந்தக் காலத்தில் ஊராட்சியை நடத்த குடவோலை முறையில் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதுபோன்ற தேர்தல் அமைப்பு உலகில் வேறு எந்த நாட்டிலும் அந்தக் காலகட்டத்தில் காணப்படவில்லை. இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியத்திடம் பேசினோம்.

"உத்திரமேரூர் கல்வெட்டுகள் வரலாற்றில் மிக முக்கியமானவை. அந்தக் காலத்தில் இருந்த தேர்தல் முறைக்குச் சான்றுபகர்பவை. ஊராட்சி நிர்வாகம் எப்படித் திறமையோடும் நியாயத்தோடும் நிர்வகிக்கப்பட்டது என்பதற்கு ஆதாரமானவை. இதேபோன்று தமிழகத்தில் பல பகுதிகளிலும் குடவோலை முறை இருந்தது குறித்த கல்வெட்டு ஆதாரங்கள் கிடைக்கின்றன. குறிப்பாக, அய்யம்பேட்டை, சேய்ஞ்ஞலூர், ராப்படீச்சரம், காமரசவல்லி. செம்பியன்மாதேவி, தலைஞாயிறு, திருநின்றவூர், கள்ளப்பெரம்பூர் ஆகிய ஊர்களில் சோழர்காலத் தேர்தல் முறை குறித்த செய்திகள் காணக்கிடைக்கின்றன.

உத்திரமேரூர்
உத்திரமேரூர்

குடும்புகள் என்னும் வார்டுகள் பிரிக்கும் முறை

இந்தக் காலத்தில் ஊரை நாம் வார்டுகளாகப் பிரித்து ஆட்சி செய்வதுபோல அந்தக் காலத்தில் குடும்புகளாகப் பிரித்து ஆட்சி செய்தனர். உத்திரமேரூரில் 30 குடும்புகள் இருந்ததாகக் குறிப்பிடப்படுகின்றன. ஊரின் பரப்பளவைப் பொறுத்து குடும்புகளின் எண்ணிக்கையும் மாறும். குறிப்பாக செந்தலை கிராமத்தில் 60 குடும்புகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

ஓர் ஊரின் பராமரிப்புக்கு என்ன என்ன துறைகள் தேவையோ அதை வாரியங்களாகப் பிரிப்பார்கள். உத்திரமேரூரில் நிர்வாக வசதிக்காக சம்வத்ஸர வாரியம், தோட்டவாரியம், ஏரிவாரியம், பொன் வாரியம், பஞ்சவாரியம் என்று பிரித்திருந்தார்கள். இந்த வாரியங்களை நிர்வகிக்க உறுப்பினர்களைத் தேர்வு செய்ய வேண்டும். அதற்குதான் குடவோலை முறை கடைப்பிடிக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்காலத் தேர்தலும் குடவோலை முறையும் ஒன்றா?

குடவோலை முறைக்கும் தற்கால ஓட்டுப்போடும் முறைக்கும் வேறுபாடு உண்டு. அதாவது தற்காலத்தில் ஓட்டுகள் எண்ணப்பட்டு அதிக வாக்குப் பெறுபவர் வெற்றிபெறுவதாக அறிவிக்கிறோம். ஆனால் குடவோலை முறையில் அப்படியல்ல.

முதலில் சபையைச் சேர்ந்தவர்கள் இந்தத் தேர்தலில் நிற்கத் தகுதியானவர்களின் பெயர்களை ஒவ்வொரு வாரியத்துக்கும் தனித்தனியாக அறிவிப்பார்கள். குடும்புகள் தாங்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் பெயர்களை நறுக்கு ஓலைகளில் எழுதிக் குடத்தில் இடுவார்கள். அனைவரும் ஓலையிட்டதும் அதன் வாய்ப்பகுதியைத் துணிகொண்டு கட்டிவைப்பார்கள்.

குடவாயில் பாலசுப்ரமணியன்
குடவாயில் பாலசுப்ரமணியன்

பின்பு அதைத் திறந்து உலகமறியா பாலகன் (5 வயதுக்குட்பட்ட) ஒருவனைக் கொண்டு ஓலைகளை எடுக்கச் சொல்வார்கள். அதாவது ஒருவாரியத்தை நிர்வகிக்க எத்தனை நபர்கள் தேவையோ அத்தனை ஓலைகளை எடுத்துத் தரச் சொல்வார்கள். அப்படி அந்தச் சிறுவன் எடுத்துத் தருபவர்களே அந்த ஆண்டு நிர்வாகிகளாவர்.

சிறுவன் எடுத்துத் தரும் ஓலையை வாங்கும் ஊர்த் தலைவர் முதலில் இருகரங்களின் ஐந்து விரல்களையும் நன்கு விரித்துக் காட்டுவார். அதாவது ஓலையைப் பெறுவதற்கு முன் அவர் கையில் வேறு ஓலைகள் இல்லை என்பதை சபையில் தெரிவிக்கவே அவ்வாறு செய்வார். அதன்பின் அந்தச் சிறுவன் தரும் ஓலையின் பெயர்களை அறிவிப்பார். இப்படி ஒவ்வொரு வாரியத்துக்கும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கோயிலை ஒட்டியே இதுபோன்ற சபைகள் அமைந்திருக்கும். இதன் பொருள், இறைவனே அந்த சிறுவனின் வடிவில் வந்து நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கிறார் என்பதுதான் ஐதிகம்.

யார் தேர்தலில் போட்டியிடலாம்?

தேர்தலில் போட்டியிடப் பல்வேறு நிபந்தனைகளை அந்தக் காலத்தில் விதித்துள்ளனர். போட்டியிடத் தகுதியினையும் தகுதியின்மையையும் தனித்தனியே கூறுகிறார்கள். உத்திரமேரூர் கல்வெட்டில் இவை விரிவாகக் கூறப்பட்டுள்ளன, 1/4 வேலிக்கு மேல் இறை கட்டும் நிலம் வைத்திருக்கவேண்டும். வயது 30க்கு மேல் 60க்குள் இருக்கவேண்டும். நல்ல வழியிலான செல்வமும், தூய்மையான ஆன்மாவையும் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாகக் கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த வாரியத்திலும் உறுப்பினராக இருந்திருக்கக்கூடாது. அவ்வாறு வாரிய உறுப்பினராக இருந்தோரும், அவர்களது நெருங்கிய உறவினர்களும் உறுப்பினராக இயலாது என்பன போன்ற கடுமையான தகுதிகளைக் குறிப்பிடுகிறது.

அதேபோன்று தகுதியில்லாதவர்களையும் தனியாகக் குறிப்பிடுகிறார்கள்.

ஊர்க்கணக்குக் காட்டாதவர்கள், ஏதேனும் ஒரு வகையில் கையூட்டு பெற்றவர்கள், குற்றம் செய்து அதற்குப் பிராயச்சித்தம் செய்தவர்கள், எல்லைக் கற்களை மாற்றம் செய்து மோசடி செய்தவர்கள், ஏரியை அழித்தவர்கள், குளங்களை அழித்தவர்கள், திருக்கோயில் மாதரைப் புணர்ந்தவர்கள் உள்பட 35 வகையான குற்றங்களைச் செய்தவர்கள் தகுதியில்லாதவர்கள் என்று குறிப்பிடுகிறது. குறிப்பாக பஞ்சமாபாதங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் தேர்தலில் போட்டியிட நிரந்தரத் தடை விதித்திருக்கிறார்கள்.

உத்திரமேரூர்
உத்திரமேரூர்

இன்றைக்கு நடைமுறைப்படுத்த முடியாத பல நல்வழிச் சட்டங்களை அன்று மிகவும் நேர்த்தியாகச் செயல்படுத்தியிருக்கிறார்கள் என்பது வியப்பை அளிப்பது.

உத்திரமேரூர் அந்தணர்களுக்கு வழங்கப்பட்ட ஊர். அங்கே அவர்களே மிகுதியாக இருந்தனர். அதேபோன்று எந்த எந்தப் பகுதிகளில் எந்த சமூகம் மிகுதியாக இருந்தார்களோ அவர்களே நிர்வாகிகளாக இருந்தனர். உதாரணத்துக்கு அந்தணர் சபை, சித்தரமேழி பெரிய நாட்டார் சபை, நகரத்தார் சபை ஆகியனவற்றைக் குறிப்பிடலாம்.

உத்திரமேரூர் கல்வெட்டுகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ஜனநாயக நடைமுறையைத் தமிழர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கைக்கொண்டிருந்தனர் என்பதை உலகத்துக்கு எடுத்துரைப்பவை. எனவே இந்தக் கல்வெட்டுகளை, உலகப் பாரம்பர்யச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.

இன்றும் உத்திரமேரூர் செல்பவர்கள் அதன் சிறப்புகள் அறியாமலேயே அந்த மண்டபத்தைப் பார்த்துச் செல்கிறார்கள். அதை மாற்ற வேண்டும். உலகெங்கும் தமிழர் வரலாற்றின் பெருமைகள் கொண்டு செல்லப்பட உத்திரமேரூர் சபையை உலகப் பாரம்பர்யச் சின்னமாக அறிவிப்பது உதவும்" என்றார் குடவாயில் பாலசுப்பிரமணியம்.

தமிழர்களின் வரலாற்றின் மீது பிரதமருக்கு இருக்கும் ஆர்வம் தமிழர்கள் அனைவருக்கும் பெருமகிழ்ச்சியைத் தருகிறது. அதேவேளையில் அவற்றுக்கான அங்கீகாரங்களையும் பாதுகாப்பையும் மத்திய, மாநில அரசுகள் வழங்கவேண்டும் என்பதே வரலாற்று ஆய்வாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு