Published:Updated:

தொல்மனிதர்களின் வாழ்க்கைக்குச் சான்றாக இருக்கும் மேசைக்கற்களைப் பாதுகாக்குமா தொல்லியல்துறை?

table stone
table stone ( arun k )

கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரத்தில், வரலாற்றுத் தொன்மம் நிறைந்த இதுபோன்ற தனித்துவமான மேசைக்கல் சித்திரங்கள் இதுவரை கண்டறியப்பட்டதில்லை.

தோடர், கோத்தர், இருளர், குரும்பர் பணியர், காட்டு நாயக்கர் உள்ளிட்ட 6 வகை பழங்குடிகள் நீலகிரியில் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு இனத்தவரும் தங்களுக்கே உரிய உணவு, உடை, வழிபாடு, கலாசாரம் போன்றவற்றை பாரம்பர்ய முறைப்படி பின்பற்றிவருகின்றனர். மேற்குறிப்பிட்ட பழங்குடி இனங்களில், சில இனக்குழுக்கள் இன்றளவும் வனத்தைச் சார்ந்தே வாழ்ந்துவருகின்றனர்.

table stone
table stone
` சுடுமண் பானை, எழுத்தாணி, தங்க அணிகலன்!' - மதுரையில் திறக்கப்பட்டது கீழடி கண்காட்சி

நீர்நிலைகளும், காடும், காட்டுயிர்களும், பழங்குடிகளும் நிறைந்த வனவளக் காடுகளில், இன்றளவும் வரலாற்றுக்கு முந்தைய தொன்மங்கள் அதிக அளவு காணப்படுகின்றன.

வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொட்டு, 200 ஆண்டுகளுக்கு முந்தைய காலம் வரை இங்கு வாழ்ந்த மக்கள், தம் கண்முன்னே நிகழ்ந்தவற்றை சிற்பங்களாகவும் சித்திர எழுத்துகளாகவும், பாறை ஓவியங்களாகவும் வரைந்து விட்டுச் சென்றுள்ளனர்.

கரிக்கையூர் காடுகளில் பாறை ஓவியங்கள்
கரிக்கையூர் காடுகளில் பாறை ஓவியங்கள்

கோத்தகிரி கரிக்கையூர் காடுகளில் காணப்படும் பாறை ஓவியங்கள், தென்னிந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள மிகப்பெரிய ஓவியங்களில் ஒன்றாக உள்ளது. பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த மனிதர்கள், இந்தப் பாறைகளில் தொடர்ந்து வரைந்துவந்துள்ளது ஆய்வின்மூலம் தெரியவந்துள்ளது. இதுமட்டுமல்லாது, கோத்தகிரியின் பனகுடி முதல் முதுமலையின் மசினகுடி வரை ஏராளமான வரலாற்றுத் தொன்மங்கள், நீலகிரிக் காடுகளில் புதைந்துகிடக்கின்றன. முறையாகப் பராமரிக்கப்படாததாலும் ஆய்வுகள் செய்யப்படாததாலும், ஏராளமான வரலாற்றுப் பொக்கிஷங்கள் சிதைக்கப்பட்டும் வருகின்றன.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மேலூர் கிராமத்தில் காணப்படும் வரலாற்றுக்கு முந்தைய மற்றும் சமீபத்திய மானுட வரலாறுகளை சித்திரிக்கும் வகையில், கண்டறியப்பட்ட மேசைக்கற்கள் (Table stone) எனப்படும் சித்திரங்கள், முறையான பராமரிப்பு இல்லாததால் சிதிலமடைந்துள்ளது.

முறையான பராமரிப்பு இல்லாததால் சிதலமடைந்த மேசைக்கற்கள்
முறையான பராமரிப்பு இல்லாததால் சிதலமடைந்த மேசைக்கற்கள்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்தப் பகுதியில் பெரு மரங்களும், புல்வெளிகளும் நிறைந்த இயற்கை எழில் கொஞ்சும் இடமொன்றில், ஏராளமான மேசைக்கற்களில் புடைப்புச் சித்திரம் மற்றும் செதுக்கல் சித்திரங்கள் நம்மை பழங்காலத்துக்கு இட்டுச் செல்லும் வகையில் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளன. வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் ஆங்கிலேயர் வருகை வரை கண்முன் காட்சியாய் விரிந்திருக்கும் இந்த மேசைக்கற்கள், மிகவும் அரிதான ஒன்று என ஆய்வாளர்களே வியந்துபோகின்றனர்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க மேசைக்கற்கள் குறித்து நம்மிடம் பேசினார், நடுகல் ஆய்வாளர் குமாரவேலு.

குமாரவேலு
குமாரவேலு

"நீலகிரியை ஒட்டியுள்ள தமிழக - கேரள வனப்பகுதிகளிலும் நீலகிரி வனங்களிலும் அதிக அளவிலான வரலாற்றுத் தொன்மங்கள் காணப்படுகின்றன. மொழிகள் தோன்றியிராத காலத்தில் வாழ்ந்த மனிதர்கள், தங்களின் வாழ்வியல் முறைகளான வேட்டை, உணவு ,தொழில், வீரம், போர், பிறப்பு, இறப்பு என எல்லாவற்றையும் பதிவுசெய்யும் விதமாகப் பாறைகளில் ஓவியங்களாகவும், சிற்பங்களாகவும் விட்டுச் சென்றுள்ளனர்.

இதேபோல், ஊட்டி அருகிலுள்ள மேலூர் கிராமத்தில் அமைந்துள்ள மேசைக்கற்கள், மிகவும் தனித்துவம் வாய்ந்தவை. கடல் மட்டத்திலிருந்து இவ்வளவு உயரத்தில் இந்த வகையான சிற்பங்கள் இதுவரை வேறெங்கும் கண்டறியப்பட்டதில்லை. ஹொய்சாளர்கள் மற்றும் விஜயநகரப் பேரரசு காலத்தைச் சேர்ந்த தடயங்களும் இங்கு உள்ளன.

இதேபோல், வரலாற்றுக்கு முற்பட்ட தடயங்களும் சமீபத்திய ஆங்கிலேயர் வருகையும் இதில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், எதிரிகளிடமிருந்து மக்களைப் பாதுகாத்தவர்கள், விவசாய நிலத்தைப் பாதுகாத்தவர்கள், போரில் வீரமரணமடைந்தவர்களைப் புதைத்த அல்லது எரித்து சாம்பலைப் புதைத்த இடத்தில், வீரர்களுக்கு கற்களை எழுப்பினர். அந்தக் கற்களில், இறந்ததற்கான காரணம் குறித்தும் தெளிவாக சித்திரங்களை உருவாக்கினர். மேலூரில் காணப்படும் தனித்துவம் வாய்ந்த இந்த செதுக்கல் ஒவியங்களில், வளர்ப்புப் பிராணிகள் முதல் புலிகள் வரை உள்ளன.

 செதுக்கல் ஒவியம்
செதுக்கல் ஒவியம்

ஆனால், இதுகுறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தாலும் முறையான பராமரிப்பு இல்லாததாலும் இந்தப் பாறைகளில் சுண்ணாம்பு போன்றவை பூசப்பட்டு சிதிலமடைந்து வருகிறது. எனவே, இவற்றைப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் வருங்கால சந்ததியினருக்கு முன்னோர்கள் குறித்த பல வரலாற்று உண்மைகள் தெரியவரும்" என்றார்.

மேலூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், "இந்த கற்களைக் கடவுளாக மதித்து வணங்கிவருகிறோம். எந்தக் காலத்தில் யாரால் செதுக்கப்பட்டது என்பது எங்களுக்குத் தெரியாது.

செதுக்கல் ஒவியம்
செதுக்கல் ஒவியம்
தொல்லியல் சின்னங்களைப் பாதுகாப்பது எப்படி? - இலந்தக்கரையில் நேரடி விளக்கம்

ஆனால், சாலையோரம் அமைந்திருப்பதால் வெளியிலிருந்து வரக்கூடிய சில நபர்கள் இவற்றைச் சிதைத்துவிடுகின்றனர். இந்தப் பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.

அடுத்த கட்டுரைக்கு