Published:Updated:

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த `சைட் மியூசியம்' - மத்திய தொல்லியல்துறை தென்மண்டல இயக்குநர் தகவல்!

ஆதிச்சநல்லூர்
News
ஆதிச்சநல்லூர்

’உலக நாகரிகத்தின் தொட்டில்’ எனப்படும் ஆதிச்சநல்லூரில், ஐரோப்பாவைப் போலவே அகழாய்வு நடக்கும் இடத்தின் மீது கண்ணாடி போர்த்தப்பட்டு, அதன் மீது மக்கள் நின்று உட்பகுதியை பார்வையிடும் வகையில் ’சைட் மியூசியம்’ அமைக்கப்படும் என, மத்திய தொல்லியல்துறை தென்மண்டல இயக்குநர் தெரிவித்துள்ளார்.

முந்தைய 2020-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம், அமைக்கப்படும் என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதையடுத்து புதிதாக, திருச்சியில் தொல்லியல் துறைக்கு மண்டல அலுவலகம் திறக்கப்பட்டது. அதன் முதல் கண்காணிப்பாளராக அருண்ராஜ் பதவியேற்றார்.
அகழாய்வுப் பணிகள் ஆய்வு
அகழாய்வுப் பணிகள் ஆய்வு

அவர் பதவியேற்ற பிறகு ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணிகள் மிகவும் துரிதப்படுத்தப்பட்டன. இவர், கடந்த டிசம்பர் 11-ம் தேதி ஆதிச்சநல்லூருக்கு வந்து, புதிதாக உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க சில இடங்களைத் தேர்வு செய்தார். அதைத் தொடர்ந்து மீண்டும் ஆய்வு செய்ய, கடந்த டிசம்பர் 26-ம் தேதி ஆதிச்சநல்லூருக்கு அவர் தலைமையிலான குழு வந்தது. அக்குழு, ஏற்கெனவே தேர்வு செய்த இடங்களை பார்வையிட்டனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதற்கிடையில், கொரோனா இரண்டாம் அலையால் இந்தப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இருப்பினும், மாநில அரசு சார்பாக ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய இடங்களில் அகழாய்வு நடந்தது. கடந்த பிப்ரவரி 26-ல் தொடங்கிய இந்தப் பணி, வரும் செப்டம்பர் மாதம் வரை நடைபெறவுள்ளது. இதுவரை, ஆதிச்சநல்லூரில் மக்களின் வாழ்விடங்கள், சிவகளை அருகே உள்ள ஸ்ரீமூலக்கரையில் கல்வட்டம், கொற்கையில் சங்கு அறுக்கும் தொழிற்சாலை போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆதிச்சநல்லூர்
ஆதிச்சநல்லூர்
இதனால், தொல்லியல் மூலம் தமிழக வரலாறு 3,000 ஆண்டுகளுக்கு முன்பு கோலோச்சியது தெரிய வந்தது. மேலும், கடந்த ஆண்டு ஆதிச்சநல்லூர் சிவகளையில் மாநில அரசு செய்த ஆய்வின் அறிக்கை வரும்போது தமிழரின் பண்பாடு பல ஆயிரம் ஆண்டு முன்பே உச்சத்தில் இருந்தது தெரியவரும் என ஆர்வலர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கிடையில், மத்திய தொல்லியல் துறை தென்மண்டல இயக்குநர் மகேஸ்வரி தலைமையில் மத்திய தொல்லியல் குழுவினர் தூத்துக்குடி மாவட்டத்தில் தொல்லியல் பணி நடைபெறும் இடத்தினை ஆய்வு செய்தனர். அவர் கொற்கை, சிவகளை பகுதியில் ஆய்வு செய்தார். அதன்பின் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமையும் இடத்தினை பார்வையிட்டார்.

மகேஸ்வரி - மத்திய தொல்லியல் துறை தென்மண்டல இயக்குநர்
மகேஸ்வரி - மத்திய தொல்லியல் துறை தென்மண்டல இயக்குநர்

இதுகுறித்து அவர் கூறும்போது, “ஆதிச்சநல்லூர் இந்திய தொல்லியல் துறையில் மிகவும் முக்கியமான இடம். இவ்விடம் உலக அளவில் மிகப்பெரிய இடுகாட்டைக் கொண்டது. இங்குள்ள மக்கள் வாழ்விடத்தினை தேடும் பணியில் தற்போது மாநில ஆய்வாளர்கள் ஆய்வு நடத்திவருகிறார்கள். அந்த ஆய்வில் முதல் கட்டமாக மக்களின் வாழ்விடத்தினை கண்டுபிடித்துள்ளனர்.

ஆதிச்சநல்லூரில் அமைய உள்ள அருங்காட்சியகம், உலகத் தரம் வாய்ந்ததாக அமையும். இதை ’சைட் மியூசியம்’ என்றும் கூறுவர். ஐரோப்பாவில் அமைந்துள்ள மியூசியம் போலவே அகழாய்வு நடக்கும் இடத்தின் மீது கண்ணாடி போர்த்தப்பட்டு, அதன் மீது மக்கள் நின்று உட்பகுதியை பார்வையிடும் வகையில் வடிவமைக்கப்படும். ஏற்கெனவே ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட அனைத்து பொருள்களையும், இங்கே அமையவுள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த ஆவண செய்யப்படும்.

அருங்காட்சியம் அமைய உள்ள இடம் ஆய்வு
அருங்காட்சியம் அமைய உள்ள இடம் ஆய்வு

அதோடு மட்டுமல்லாமல் ஜெர்மன் நாட்டில் பெர்லின் நகரிலுள்ள ஆதிச்சநல்லூர் பொருள்களை மீட்டெடுத்து அதையையும் ஆதிச்சநல்லூரில் உள்ள அருங்காட்சியகத்தில் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். தற்போது தேர்வு செய்யப்பட்ட இடத்தினை, உயர் அதிகாரிகள் குழு பார்வையிட்டு சீர்செய்தவுடன் அருங்காட்சியகம் பணி மத்திய அரசின் ஒப்புதலுடன் துவங்கும்” என்றார் அவர்.