கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

இனிமேல் இதுதான் இயல்பு வாழ்க்கை!

ஜெயந்த் சின்ஹா
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயந்த் சின்ஹா

புதிய இயல்பு நிலை என்றால் என்ன என்ற கேள்விக்கு மீண்டும் வருவோம்.

‘கொரோனாவின் தாக்கம் எப்போது அடங்கும். பழைய வாழ்க்கைக்கு எப்போது திரும்புவோம்?’ என்ற கேள்விக்கான பதில் யாரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் ஆளாளுக்கு ஒரு பதிலைச் சொல்கிறார்கள். ‘சென்னை இன்டர்நேஷனல் சென்டர்’ ஏற்பாடு செய்திருந்த ஆன்லைன் கலந்துரையாடலில், இந்தக் கேள்விக்கான விடையை, பொருளாதார நிபுணரும் பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயந்த் சின்ஹா தன் கோணத்தில் கூறினார். ஐஐடி, ஹார்வர்டு ஆகியவற்றில் படித்த இவர் மேக்கின்ஸியில் ஆலோசகராகப் பணியாற்றியவர்.

வாஜ்பாய் அமைச்சரவையில் நிதி மந்திரியாக இருந்த யஷ்வந்த் சின்ஹாவின் மகன் என்ற அடையாளத்தைத் தாண்டி ஜெயந்த் சின்ஹாவுக்கு இப்படிப் பல அடையாளங்கள் உண்டு.

‘இயல்பு வாழ்கைக்கு எப்போது திரும்புவோம்?’ என்ற கேள்வியில் இருக்கும் ‘இயல்பு வாழ்க்கை’ என்ற வார்த்தைகளுக்கான பழைய அர்த்தம் காலாவதியாகிவிட்டது. நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருப்பதுதான் இயல்பு வாழ்க்கை. வாழப்போவதுதான் இயல்பு வாழ்க்கை’ என்று அறிஞர்கள் பலரும் சொல்வதைப் போல, ஜெயந்த் சின்ஹாவும் இயல்பு வாழ்க்கை பற்றிப் பேசினார்.

“2008-ம் ஆண்டு நாம் பார்த்த பொருளாதார மந்தநிலை என்பது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைத்தான் அதிகம் பாதித்தது. நிதி நிறுவனங்கள்தான் நிலைகுலைந்தன. ஆனால் கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் - ஏற்பட்டுக்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடி என்பது உலகின் எல்லா நாடுகளையும் எல்லாத்துறைகளையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டிருக்கிறது. முந்தைய பொருளாதார மந்தநிலையின் தாக்கம், பல ஆண்டுகளுக்கு இருந்தது. அதைவிட இப்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி உக்கிரமானது. இதை ஒப்பிட வேண்டுமானால் 1918-ம் ஆண்டு தொடங்கி சில காலம் உலகை வாட்டி வதைத்த கொள்ளை நோயான, ஸ்பானிஷ் ஃப்ளூவோடுதான் ஒப்பிட வேண்டும். பொதுவாக ஏறுமுகமாகவே இருக்கும் நம் நாட்டின் மக்கள் தொகை இந்தக் கொள்ளைநோய் தாக்கிய காலத்தில், 6 சதவிகிதம் குறைந்தது. இது நம்நாட்டை மட்டுமல்ல உலகின் பொருளாதாரத்தையே புரட்டிப்போட்டது. அப்போது இருந்ததைவிட இப்போது மருத்துவ வசதிகள் மேம்பட்டிருக்கின்றன. ஆனால், இன்னமும் கொரோனாவுக்கான மருந்தும் தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை. இவை இரண்டும் கண்டுபிடிக்கப்பட்டுப் புழக்கத்துக்கு வந்தால்தான் சகஜ நிலை திரும்பும். இது நடக்க இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும். ஏற்கெனவே சொன்னதைப்போல இந்தக் காலக்கட்டத்திற்குள் ‘இயல்பு நிலை’ என்ற வார்த்தைகளுக்குப் புதிய பொருள் கிடைத்துவிடும். இந்த ஆண்டு தொடர் ஊரடங்கால், நமது பொருளாதாரமும் உற்பத்தியும் வெகுவாக பாதிக்கப்பட்டு விட்டன. நம் மொத்த உற்பத்திக் குறியீட்டு எண்ணே (GDP) 2 சதவிகிதம்தான் அதிகரிக்கும் என்று சிலர் சொல்கிறார்கள், வேறு சிலரோ மைனஸ் இரண்டு சதவிகிதம் அளவுக்குக் கீழே வீழ்ந்துவிடுமோ என்று அஞ்சுகிறார்கள்.

ஜெயந்த் சின்ஹா
ஜெயந்த் சின்ஹா

பிழைப்பதற்காக ஊர் விட்டு ஊர் வந்த தொழிலாளர்கள், அதையடுத்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகள். அதன் பிறகு கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் விமானப் போக்குவரத்து, சுற்றுலா போன்ற தொழில்கள் என்று சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் கைதூக்கிவிட்டு ஊக்கமும் ஆக்கமும் கொடுக்க வேண்டியிருக்கிறது.

இப்படிச் சொல்வதால் நமக்கு எதிர்காலமே இல்லை என்று சோர்ந்து உட்கார்ந்துவிடத் தேவையில்லை. கருமேகங்களுக்கு இடையிலும் சில வெள்ளிக்கீற்றுகள் தென்படுகின்றன. நம் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு தடுமாறி னாலும், 2022-ல் நம் வளர்ச்சி 7 சதவிகிதமாக இருக்கும் என்று நம்பிக்கை கொடுக்கிறார்கள். கொரோனாவை மேலை நாடுகள் கையாண்ட விதத்துக்கும் நாம் கையாண்ட விதத்துக்குமான வித்தியாசத்தை உலகம், இப்போது கண்கூடாகக் கண்டுகொண்டது. உலக நாடுகளுக்கு இப்போது சீனாமீது வெறுப்பு வந்துவிட்டதால் புதிய தொழில்கள் தொடங்குவதற்கு அவர்கள் நம் நாட்டைத்தான் தேர்ந்தெடுப்பார்கள்.

கச்சா எண்ணெயின் விலை வரலாறு காணாத வகையில் அடிமட்டத்தில் இருப்பதால் பெட்ரோல், டீசலுக்காக நாம் ஆண்டுதோறும் செலவிடும் அன்னியச் செலவாணியில் பெரும் பகுதி மிச்சப்படும். வாய்ப்புகளை நாம் எப்படிப் பயன்படுத்தப்போகிறோம் என்பதில்தான் இருக்கிறது நம் எதிர்காலம்.

ஜெயந்த் சின்ஹா
ஜெயந்த் சின்ஹா

புதிய இயல்பு நிலை என்றால் என்ன என்ற கேள்விக்கு மீண்டும் வருவோம். ஊரடங்கு காலத்தில் மக்கள் சிக்கனமாக வாழப் பழகிவிட்டார்கள். வேலை இழப்பு, சம்பளக்குறைப்பு போன்ற காரணங்களால், அவர்கள் கையில் பணம் இருக்காது. பணம் இருப்பவர்கள்கூட, எது தேவையான செலவு, எது தேவையில்லாத செலவு என்று பிரித்துப் பார்க்கக் கற்றுக்கொண்டார்கள். அதனால் கொரோனா ஓய்ந்த பிறகும்கூட... மக்கள் முன்பு போல ஷாப்பிங் என்ற பெயரில் தேவையில்லாத பொருள்களை வாங்கிக் குவிக்க மாட்டார்கள். அதனால் பொருளாதாரம் மெதுவாகத்தான் வேகம் எடுக்கும் என்று சிலர் கணிக்கிறார்கள். இத்தனை நாள்களாக வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்ததால், வாங்க வேண்டும் என்று அவர்கள் ஏற்கெனவே திட்டமிட்டு வைத்திருந்த பொருள்களைக்கூட வாங்கவில்லை. அதனால், கடந்த காலத்துக்கும் சேர்த்து இப்போது பொருள்களை வாங்குவார்கள் ( Revenge spending) என்றும் சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல... சவாலான காலகட்டங்கள்தான் துணிச்சலான பல முடிவுகளை எடுக்க சரியான தருணமாக அமையும். விவசாயம், நிதி, தொழிலாளர் என்று பல துறைகளிலும் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டால் பலருடைய கைகளைக் கட்டியிருக்கும் கட்டுகள் அவிழ்ந்துவிடும். அப்போது விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கும். வேலை வாய்ப்புகள் பெருகும். நிதியோட்டம் சீராகும்.’’

நம்பிக்கை வார்த்தைகளை முன்வைத்தார் ஜெயந்த் சின்ஹா..!