
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

“எல்லா உறவுகளும் பொருளியல் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகின்றன” என்றார் காரல் மார்க்ஸ். பொருளியல் அடிப்படையைச் சரியாகச் செய்துவிட்டாலே, மற்ற அனைத்தும் தானாகவே நடந்துவிடும். அரியலூர் மாவட்டத்தில் பெரும்பான்மையான இளைஞர்கள் படித்திருந்தாலும், அவர்களுக்குப் போதுமான வேலைவாய்ப்பு அமையாததால், பொருளீட்டப் பலர் வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுகிறார்கள். வாழவேண்டிய வயதில் பெற்றோர், மனைவி, குழந்தைகளைப் பிரிந்து செல்லும் அவர்கள், முதுமையோடு திரும்பி வரும்போது உள்ளுர் வாழ்க்கை பெரும்பாலானோருக்கு அந்நியமாகவே இருக்கிறது.
அரியலூர் மாவட்டத்தில் கனிம வளங்கள் அதிகம். ஆனால், அந்த வளத்தால் இந்தப் பகுதி மக்களின் வாழ்க்கையில் பெரிய அளவில் பொருளாதார முன்னேற்றம் நிகழவில்லை. இங்கே அமைந்துள்ள சிமென்ட் தொழிற்சாலைகளில் பெரும்பாலானோருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. இங்கேயுள்ள வளங்களைக்கொண்டு அதற்குரிய தொழிற்சாலைகளை நிறுவினாலே வேலைவாய்ப்புகளை அதிகரிக்க முடியும். என்றாலும், இந்தத் தொழிற்சாலைகளில் அந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்பட்சத்தில்தான், அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதோடு, பொருளாதார முன்னேற்றத்தையும் அடைவார்கள்.

முந்திரி ஓட்டிலிருந்து வார்னிஷ்!
முதலாவதாக இங்கே ஒரு வார்னிஷ் தொழிற்சாலையை உருவாக்க வேண்டும். அதற்கான மூலப்பொருளான முந்திரி ஓடு இங்கே அதிக அளவில் கிடைக்கிறது. அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். முந்திரி ஓட்டிலிருந்து பெறப்படும் ஆயிலை, சுருக்கமாக `சி.என்.எஸ்.எல்’ (CNSL - Cashew Nut Shell Liquid) என்று அழைக்கிறார்கள். வார்னிஷ் தயாரிப்பின் மூலப்பொருள் இது. இயற்கைக்குக் கேடு விளைவிக்காத இதை, மரங்களிலிருந்து தயாரிக்கப்படும் வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்ட பலவற்றுக்கு மேற்பூச்சாகப் பயன்படுத்துகின்றனர். இது செல் அரிப்பைத் தடுப்பதோடு, மரப்பொருள்களுக்கு நீண்ட ஆயுளையும் தருகிறது.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த திலக் பெயின்ட்ஸ் நிறுவனம், முந்திரி ஓட்டிலிருந்து வார்னிஷ் தயாரிக்கிறது. சந்தையில் ஒரு லிட்டர் சி.என்.எஸ்.எல் வார்னிஷ் 315 ரூபாய்க்கு விற்கிறார்கள். இதே போன்றதொரு புராடக்டை நாம் அரியலூர் மாவட்டத்தில் உருவாக்கி, அதற்கான தொழிற்சாலையை நிறுவ வேண்டும். ஒரு டன் முந்திரி ஓட்டிலிருந்து உயர்தரமான 100 கிலோ சி.என்.எஸ்.எல்-ஐ பெற முடியும்.



தமிழ்நாட்டில் முந்திரி உற்பத்தியில் கடலூருக்கு (சுமார் 80,000 ஏக்கர்) அடுத்தபடியாக அரியலூரே முன்னணி வகிக்கிறது. சுமார் 60,000 ஏக்கருக்கு முந்திரி பயிரிடப்பட்டுள்ளது. இரண்டு மாவட்டங்களைச் சேர்த்துக் கணக்கிட்டால் ஏறக்குறைய 1,40,000 ஏக்கருக்கு முந்திரி பயிரிடப்படுகிறது. ஒரு ஏக்கரிலிருந்து 320 கிலோ முந்திரி ஓடு கிடைக்கிறது. தோராயமாக 5,00,00,000 கிலோ அளவுக்கு முந்திரி ஓடு கிடைக்கிறது. அந்தவகையில், வார்னிஷிலிருந்து மட்டும் ஆண்டுக்கு 141 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் அளவுக்கு வார்னிஷ் தொழிற்சாலை அமைக்கலாம். இதனால் நேரடி, மறைமுகமாகச் சுமார் 3,000 பேர் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள்.
முந்திரி ஓட்டைப் பயன்படுத்தி வார்னிஷ் (Varnish) மட்டுமின்றி, ஆடைகளுக்குப் போடப்படும் டை (Dye), நெயில் பாலிஷ் (Nail Polish), சாக்கோல் போன்றவற்றையும் தயாரிக்க முடியும்.


சுண்ணாம்புக்கல் - கண்ணாடித் தொழிற்சாலை!
இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் கட்டுமானத்துறை பரபரப்பாக இயங்கிக்கொண்டும், பெரிய அளவில் வருமானம் ஈட்டிக்கொண்டும் இருக்கிறது. கொரோனா பேரிடரால் சற்றுச் சறுக்கினாலும், மீண்டும் புத்துயிர் பெற்றுவிட்டது. கட்டுமானப் பொருள்களின் தேவை அதிகரித்தபடியே இருப்பதால், அதன் விலையும் உயர்ந்தேவருகிறது. ஜனவரி 2022-ம் ஆண்டு தொடக்கத்தில் மட்டும் அனைத்துக் கட்டுமானப் பொருள்களின் விலையும் சுமார் 25 சதவிகிதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.
சிமென்ட், ஜல்லி, மணலுக்கு இணையாகக் கட்டுமானங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் ஒரு பொருள் கண்ணாடி. இந்தியாவில் கட்டடங்களுக்குத் தேவையான கண்ணாடிகளை உற்பத்தி செய்வதில் இந்திய நிறுவனமான அஸாகி (Asahi) நிறுவனமே முன்னணியில் நிற்கிறது. கண்ணாடி விற்பனையில் ஆண்டுக்குத் தோராயமாக 5,750 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் பெறுகிறது. இவற்றோடு Brosil Renewables, La Opala RG, Saint Gobain போன்ற நிறுவனங்களின் ஆண்டு வருமானத்தைச் சேர்த்துக் கணக்கிட்டால், சுமார் 15,000 கோடி ரூபாய் அளவுக்குக் கண்ணாடித் தொழிலில் வர்த்தகம் நடக்கிறது. இதிலிருந்து ஐந்து சதவிகித மார்க்கெட்டைக் கைப்பற்றினாலே போதும், ஆண்டுக்கு 750 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் கிடைக்கும். நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 6,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதனால், அவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுவதோடு, சொந்தங்களை விட்டுவிட்டு வெளிநாடுகளுக்குச் செல்லவேண்டிய தேவையும் ஏற்படாது.




சுண்ணாம்புக்கல் (Limestone), கண்ணாடித் தயாரிப்புக்கான மூலப்பொருளாகப் பயன்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் சுண்ணாம்புக் கற்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. சுமார் 73 சுரங்கங்களிலிருந்து சுண்ணாம்புக்கல் வெட்டியெடுக்கப்படுகிறது. சுண்ணாம்புக்கல், மணல், சோடியம் கார்பனேட் (Limestone+Sand+Sodium Carbonate = Glass) போன்றவற்றைச் சேர்த்துத்தான் கண்ணாடி உருவாக்கப்படுகிறது. கண்ணாடி மட்டுமல்ல, சிமென்ட், கான்கிரீட் போன்ற கட்டுமானங்களுக்குத் தேவையான பிற பொருள் களை உருவாக்கவும் இதே சுண்ணாம்புக்கல்தான் உபயோகப்படுத்தப்படுகிறது!
(இன்னும் காண்போம்)