அரசியல்
Published:Updated:

மிரட்டும் ராணுவம்... அஞ்சாத மக்கள்! - என்ன நடக்கிறது மியான்மரில்?

மியான்மர்
பிரீமியம் ஸ்டோரி
News
மியான்மர்

ஆட்சிக்கவிழ்ப்பு, ராணுவ ஆட்சியால் ஏற்படும் உள்நாட்டுக் குழப்பங்கள் போன்றவை மியான்மருக்குப் புதிதல்ல.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்த்துவிட்டு, ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவத்தின் அட்டூழியங்களால் இந்தியாவின் அண்டை நாடான மியான்மர் அமைதியிழந்து தவிக்கிறது. ராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராடிவரும் மக்கள்மீது ராணுவம் நடத்திவரும் தாக்குதல்களால், இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

மியான்மரில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், ஆங் சான் சூகி தலைமையிலான ‘தேசிய ஜனநாயக லீக் கட்சி’ வெற்றிபெற்றது. அதிபர் வின் மைன்ட் தலைமையில் ஆட்சியமைக்கப்பட்டது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, புதிய அரசை ஏற்பதற்கு அந்நாட்டு ராணுவம் மறுத்துவிட்டது. அதனால், அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் நிலவிவந்தது. இந்தநிலையில், பிப்ரவரி 1-ம் தேதியன்று ஆட்சியைக் கவிழ்த்து, அதிகாரத்தைக் கைப்பற்றியது ராணுவம். தற்போது, ராணுவத் தலைமை தளபதி மின் ஆங் லெய்ங் கையில் அதிகாரம் இருக்கிறது. ராணுவ ஆட்சிக்கு எதிராக அங்கு பெரும் போராட்டங்களை மக்கள் முன்னெடுத்துவருகிறார்கள்.

மிரட்டும் ராணுவம்... அஞ்சாத மக்கள்! - என்ன நடக்கிறது மியான்மரில்?

ஆட்சிக்கவிழ்ப்பு, ராணுவ ஆட்சியால் ஏற்படும் உள்நாட்டுக் குழப்பங்கள் போன்றவை மியான்மருக்குப் புதிதல்ல. பிரிட்டிஷாரிடமிருந்து 1948-ம் ஆண்டு மியான்மருக்கு விடுதலை கிடைத்திருந்தாலும், அங்கு ஒருபோதும் அமைதி நிரந்தரப்பட்டதில்லை. 1962-ம் ஆண்டு ஆட்சிக்கவிழ்ப்பு நடைபெற்று, ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. ராணுவ ஆட்சிக்கு எதிராக அங்கு ஏராளமான போராட்டங்கள் நடைபெற்றன. ஜனநாயகத்துக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்ற ஆங் சான் சூகி, 1989-ம் ஆண்டு வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார். பின்னர், அடுத்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவர் வெற்றிபெற்றார். ஆனாலும், அவரிடம் ஆட்சியை ஒப்படைப்பதற்கு ராணுவம் மறுத்துவிட்டது. 15 ஆண்டுகள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்ட அவருக்கு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 2010-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட ஆங் சான் சூகி, 2012-ம் ஆண்டு இடைத்தேர்தல் ஒன்றில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். 2015-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், ஆங் சான் சூகி தலைமையிலான ‘தேசிய ஜனநாயக லீக் கட்சி’ வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. 2020 தேர்தலில் அதைவிடப் பெரிய வெற்றியை அதாவது, 83 சதவிகித வாக்குகளை அந்தக் கட்சி பெற்றது. ஆனால், ஆட்சியை ராணுவம் கவிழ்த்துவிட்டது.

மிரட்டும் ராணுவம்... அஞ்சாத மக்கள்! - என்ன நடக்கிறது மியான்மரில்?

ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் மூத்த அதிகாரிகளும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். பொது இடங்களில் ஐந்து பேருக்கு மேல் கூடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கும் நிலையில், ராணுவத்துக்கு எதிரான போராட்டம் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. தலைநகர் நேபிடா, யாங்கூன், மண்டலே உள்ளிட்ட நகரங்களில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் திரண்டு போராட்டம் நடத்திவருகிறார்கள். போராட்டங்களில் இளைஞர்களே பெருமளவில் பங்கேற்கிறார்கள். புத்தத் துறவிகள் பேரணி நடத்துகிறார்கள். தொடர்ச்சியான இந்தப் போராட்டங்கள், ராணுவ ஆட்சியாளர்களுக்குப் பெரும் அழுத்தத்தைக் கொடுத்துவருகிறது. போராட்டத்தை நசுக்குவதற்கு ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டதுடன், வாட்ஸ்அப் போன்ற தகவல் தொடர்பு செயலிகளும் முடக்கப்பட்டுள்ளன.

போராடிவரும் மக்கள்மீது ராணுவம் கொடூரமான தாக்குதல் நடத்திவருகிறது. கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும், ரப்பர் தோட்டாக்களால் சுட்டும் போராட்டக்காரர்களை விரட்டியடிக்கிறார்கள். அதனால், பாதுகாப்புக்காக இரும்புக் கவசங்களுடன் போராட்டங்களில் மக்கள் பங்கேற்கிறார்கள். அப்படியும்கூட, ராணுவத்தின் தாக்குதல்களில் இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சுமார் 3,000 பேர் சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள்.

மிரட்டும் ராணுவம்... அஞ்சாத மக்கள்! - என்ன நடக்கிறது மியான்மரில்?

மியான்மர் ராணுவத்தின் இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு, உலகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. “அமைதியான போராட்டத்துக்கான உரிமை மதிக்கப்பட வேண்டும். மக்களின் போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க நினைத்தால், மியான்மர் ராணுவம் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்’’ என்று ஐ.நா சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. இத்தகைய சூழலில், ஓராண்டு காலத்துக்கு அவசரநிலை தொடரும் என்று முதலில் அறிவித்திருந்த ராணுவம், போராட்டங்கள் வலுத்துவருவதால், ‘நீண்டகாலம் ராணுவ ஆட்சி இருக்காது. ஜனநாயகரீதியில் நடைபெறும் தேர்தலில் வெற்றிபெறும் கட்சியிடம் அதிகாரத்தை ராணுவம் ஒப்படைக்கும்’ என்று கூறியுள்ளது. ஆனால், தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பது பற்றி மட்டும் ராணுவம் வாய் திறக்கவில்லை. போராட்டக்காரர்கள் மீதான ராணுவத்தின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதாகச் செய்திகள் வருகின்றன. இருப்பினும், அடக்குமுறைகளைக் கண்டு பெரிதாக அச்சப்படாமல், தங்கள் உரிமைகளுக்காக மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

மக்களின் கோபத்தையும் உறுதியையும்விட ஒரு வலிமையான ஆயுதம், உலகின் எந்த ராணுவத்திடமும் இல்லை!

*****

இந்தியாவும் மியான்மரும்!

தற்போது `மியான்மர்’ என்று அறியப்படும் பர்மா, 1939-ம் ஆண்டு வரை பிரிட்டிஷ் இந்தியாவின் ஓர் அங்கமாக இருந்தது. விடுதலைக்குப் பிறகு, தனித்தனி நாடுகளாக ஆகிவிட்ட இந்தியாவும் பர்மாவும் நெருக்கமான உறவையே பேணிவந்தன. மியான்மரில் கணிசமான எண்ணிக்கையில் இந்தியர்கள் வசித்துவந்த நிலையில், 1930-களில் நடந்த ஜப்பான் ஆக்கிரமிப்பு, 1960-களில் ஏற்பட்ட வன்முறை உள்ளிட்ட காரணங்களால் அங்கிருந்து இந்தியர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள். அதனால், மியான்மரில் இந்தியர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. அண்டை நாடாக இருந்தபோதிலும், தற்போதைய ராணுவ ஆட்சி குறித்து இந்திய அரசு ‘அமைதி’ காத்துவருகிறது!