
நம் தேசியப் பாதுகாப்பில் இருக்கும் ஓட்டைகளையே இந்தப் பதிவுகள் நமக்குக் காட்டுகின்றன
பிப்ரவரி 14, 2019 மாலை 3.15: புல்வாமா தாக்குதல்களில் 40 ஐ.ஆர்.பி.எஃப் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
பிப்ரவரி 14, 2019 மாலை 4.19 (அர்னாப்): இந்த ஆண்டின் மிகப்பெரிய தீவிரவாத சம்பவம் நடந்து 20 நிமிடங்களில், நம் சேனல்தான் லீடிங்கில் இருக்கிறது.
பிப்ரவரி 14, 2019 மாலை 5.43 (அர்னாப்): இதன்மூலம் நாம் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறோம்.
பிப்ரவரி 23, 2019 இரவு 10.31 (அர்னாப்): இன்னொரு முக்கியமான விஷயம், சீக்கிரமே பெரிய செய்தி ஒன்று வரப்போகிறது.
இரவு 10.36 (தாஸ்குப்தா): தாவூத்தா?
இரவு 10.36 (அர்னாப்): இல்ல சார் பாகிஸ்தான்/ பெருசா ஒரு சம்பவம் நடக்கப்போகுது.
இரவு 10.40 (அர்னாப்): சாதாரண எதிர்த்தாக்குதலைவிட பெருசா இருக்கும். காஷ்மீர்லயும் மிகப்பெரிய விஷயம் நடக்கப்போகுது. பாகிஸ்தானைப் பொறுத்தவரைக்கும் அரசாங்கம், நம்ம மக்கள் சந்தோஷப்படற மாதிரி ஒரு ஸ்டிரைக் நடத்தப்போகுது.
February 26, 2019, காலை 3.45: பாலக்கோட்டில் `சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடத்தியது இந்திய ராணுவம். 300க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டு பழி தீர்க்கப்பட்டதாக செய்திகள் வெளியாக, சர்வதேச ஊடகமான அல் ஜசீராவோ, ‘அப்படி எதுவும் பெரிதாக நடக்கவில்லை’ என சம்பவம் நடந்த இடத்தில் இருந்து செய்தி வெளியிட்டது. பாகிஸ்தான் மீடியாவோ ‘மரங்கள் சாய்ந்தன, அவ்வளவே’ என்று முடித்துக்கொண்டது.

இந்த வாரம் மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறார் அர்னாப் கோஸ்வாமி. மகாராஷ்டிரா போலீஸார் கிணறு வெட்ட பூதம் கிளம்பியிருக்கிறது. அர்னாபின் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் டிஆர்பி ரேட்டிங் தகிடுதத்தங்களில் ஆரம்பித்த வழக்கு, தற்போது தேசியப் பிரச்னையாக முட்டி நிற்கிறது. காவல்துறை கடைசியாகத் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் இருந்து இரண்டு தொகுப்புகள் (3,400 பக்கங்கள்) தற்செயலாக (!) மீடியாவுக்குக் கசிய விடப்பட்டன. அவற்றைத்தான் தற்போது அர்னாப்பின் குரலிலேயே THE NATION WANTS TO KNOW என தேசமே கேட்டுக்கொண்டிருக்கிறது.
இந்தியாவின் பத்திரிகை சுதந்திரம் பற்றிய ஒரு கட்டுரையில் மூத்த பத்திரிகையாளரான ராஜ்தீப் சர்தேசாய், ‘இந்தியப் பத்திரிகைத்துறையில் பெருவாரியான கூட்டம் காவல்நாய்களாக இருப்பதற்குப் பதில் செல்ல நாய்களாக மாறிவிட்டன’ என வேதனைப்பட்டிருப்பார். தேசியத்தை வைத்து பெரும்பான்மை மக்களின் இறையாண்மைப் பசிக்குத் தீனி போட்டு வந்த ரிபப்ளிக் தொலைக்காட்சி சிஇஓவின் வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட்கள், அதைத்தான் மீண்டும் நமக்கு நிரூபிக்கின்றன. 40 ராணுவ வீரர்கள் படுகொலை செய்யப்பட்ட புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர் அர்னாப் உதிர்த்த வரிகள், அவரின் போலி தேசியத் தோலை உரித்திருக்கின்றன. அர்னாப்பும் முன்னாள் BARC தலைவருமான பார்த்தோ தாஸ்குப்தாவும் உரையாடிய வாட்ஸ்அப் செய்திகள், அர்னாபின் இன்னொரு முகத்தைக் காட்டியிருக்கின்றன.
40 ராணுவ வீரர்களின் துக்க நிகழ்வின் போது, பிரதமர் எதுவும் தெரியாமல் காட்டில் ஷூட்டிங் நடத்திக்கொண்டிருந்தது ஒருபுறம் என்றால், இன்னொரு புறம் கண்ணீர் மல்க நரம்பு புடைக்க தொலைக்காட்சியில் யாரையும் பேசவிடாமல் கர்ஜித்துக்கொண்டிருந்த அர்னாப் இப்படி நம் ராணுவ வீரர்களின் பிணங்களை வைத்து ரேட்டிங்களில் குளிர்காய்ந்து இருக்கிறார். தொழில் வேறு, கொள்கை வேறு என சால்ஜாப்புகள் சொன்னாலும், தேசபக்தியின் ஒட்டுமொத்தக் குத்தகையாளராகக் கூச்சலிடும் அர்னாப், செய்தி வெளியான மூன்று மணி நேரத்தில் வாட்ஸ்அப் மூலம் இனிப்பு பகிர்ந்திருப்பதுதான் அவலத்துக்குரியது.
அத்துடன் நிற்கவில்லை... அமைச்சரவை மாற்றம், பிரதமர் அலுவலகச் செயல்பாடுகள், மத்திய அமைச்சர் ஒருவரைப் பற்றிய கமென்ட் என நீளும் அதிர்ச்சிகள் ஏராளம்.
இப்படியாக புல்வாமா தாக்குதல், காஷ்மீரின் 370-வது சட்டப்பிரிவு ரத்து பற்றியெல்லாம் அர்னாப்புக்கு முன்னரே தெரிந்தது எப்படி என்பதுதான் தற்போதைய பேசுபொருள்.

“நம் தேசியப் பாதுகாப்பில் இருக்கும் ஓட்டைகளையே இந்தப் பதிவுகள் நமக்குக் காட்டுகின்றன” என பிரசாந்த் பூஷன், யஷ்வந்த் சின்ஹா போன்றோர் விமர்சிக்கின்றனர். ‘‘சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்துவது அர்னாபுக்கு முன்கூட்டியே தெரியும் என்றால், வேறு என்னென்ன ராணுவ ரகசியங்கள் அவருக்குப் போயின? இதேபோல் யார் யாருக்கெல்லாம் போயின?’’ என்று கேட்கும் எதிர்க்கட்சிகள், நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோருகின்றன.
‘ஒரு செய்தியை முன்கூட்டியே அறிந்து வைத்திருப்பது குற்றமல்ல’ என அர்னாப்புக்காக வாதிடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால், ‘இந்தச் செய்தி பாகிஸ்தான் ராணுவத்துக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தால், தாக்குதல் நடத்தச் சென்ற இந்திய விமானப்படை வீரர்களின் கதி என்ன?’ என்ற கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை.
யாருக்கும் எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதி காத்துவந்த அர்னாப், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மட்டும் காட்டமாக பதில் எழுதிவிட்டு, `சத்யமேவ ஜெயதே, பாரத் மாதா கி ஜே, ஜெய்ஹிந்த்’ என மீண்டும் தேசியத்தின் பின்னால் ஒளிந்துகொண்டிருக்கிறார். இந்தியப் பெரும்பான்மை மக்களை அர்னாப் அளவுக்கு யாரும் புரிந்து வைத்திருக்க முடியாது போலிருக்கிறது.
முன்னர் கைது செய்யப்பட்டு, சிறையில் வைக்கப்பட்டபோது, தனக்கான நீதியை உச்ச நீதிமன்றம் வரை சென்று வாங்கி வந்தார் அர்னாப் கோஸ்வாமி. போதை மருந்துகள் பற்றி பேசியதற்காகவே பாலிவுட் நடிகர் சுஷாந்த்தின் தற்கொலையை வைத்து வியாபாரம் பார்த்து, நடிகை ரியா உட்பட பல்வேறு நடிகர்களை கூண்டுக்குள் ஏற்றினர் ரிபப்ளிக் தொலைக்காட்சி நிர்வாகிகளும், அதன் பார்வையாளர்களும். தற்போது இந்தச் செயலுக்கு என்ன செய்யப்போகிறார்கள் என உண்மையான தேசியவாதிகள் கேள்வி எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.