தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையின் முன்னெடுப்பின்படி மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் கலைத்திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நடனம், இசை, ஓவியம், நாட்டுப்புறக் கலைகள், நவீன கலை வடிவங்கள் எனப் பலவற்றிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் தங்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
``பள்ளி மாணவர்களின் கலைத்திறனை ஊக்கப்படுத்துவதன் வழியாக அவர்களுக்கு கல்வியின் மீதான ஈடுபாட்டையும் வளர்த்தெடுக்க முடியும்" என்கிறார் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குநர் ஆர்.சுதன் ஐ.ஏ.எஸ்.
``பெருந்தொற்றுக்குப் பிறகு மீண்டும் பள்ளிக்குத் திரும்புகிற மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் இடையே ஓர் இடைவெளி நிலவுகிறது. ஆசிரிய - மாணவ உறவு நன்றாக இருந்தால்தான் கல்வி வளப்படும். ஆகவே, கலைகளைக் கொண்டு இந்த இடைவெளியை நிரப்புவதும், ஒவ்வொரு மாணவரின் தனித்திறனை வெளிக்கொண்டு வருவதும்தான் அரசுப் பள்ளிகளில் நடத்தப்படுகிற கலைத்திருவிழாவின் நோக்கம். பாடம், தேர்வு எனக் கல்வித்திறனை அடிப்படையாக வைத்து மட்டுமே ஒரு மாணவரை மதிப்பிடுவது தவறானது. அதிக மதிப்பெண் வாங்குகிறவர்கள்தான் சிறந்த மாணவர்கள் என்றில்லை. கல்வி தாண்டியும் கலை, விளையாட்டு என பிற துறைகளில் திறன் படைத்த மாணவர்கள் அதற்கான வாய்ப்புகள் அற்ற நிலையில் இருப்பர். அவர்களின் தனித்திறன்கள் கண்டறியப்பட்டால் அவற்றில் அவர்களை வளர்த்தெடுக்க முடியும்.
ஒவ்வொரு பாடத்துக்கும் கலைக்கும் இடையே தொடர்பு இருக்கிறது. உதாரணமாக, இசையில் திறனுள்ள மாணவர்களால் கணிதத்திலும் சிறந்து விளங்க முடியும். அறிவியலுக்கும் கலைக்கும்கூட நெருங்கிய தொடர்பு இருக்கிறது. லியானர்டோ டாவின்சி, மைக்கேல் ஏஞ்சலோ போன்றவர்கள் கலைஞர்களாகவும் அதே நேரத்தில் அறிவியலாளர்களாகவும் திகழ்ந்திருக்கின்றனர். கலைக்கும் அறிவியலுக்கும் இடையில் செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த இடைவெளியைத் தகர்க்க வேண்டும்" என்றவர், இக்கலைத் திருவிழாவின் அடுத்தடுத்த திட்டங்கள் குறித்தும் பேசினார்.
``மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தும் விதமாக இசை, நடனம், நாடகம் எனப் பல்வேறு கலைகளில் மாணவர்களை இக்கலைத் திருவிழாவில் பங்கேற்கச் செய்கிறோம். இத்திருவிழாவில் பல்வேறு தளங்களில் தங்களது அசாத்தியத் திறனை வெளிப்படுத்தி வென்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் கையால் பரிசு வழங்கும் விழா அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறவிருக்கிறது. தலைசிறந்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடு களில் நடைபெறும் கலைத் திருவிழாக்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
பள்ளி அளவில் நடைபெறும் கலை இலக்கியப் போட்டிகளைக் கடந்து மாநில அளவில் நடைபெறக்கூடியது என்பதே இக்கலைத் திருவிழாவின் சிறப்பம்சம். இதில் அரசுப் பள்ளிகளுக்கிடையே ஆரோக்கியமான போட்டி இருக்கும். போட்டியில் வெல்ல வேண்டும் என்கிற முனைப்பு மாணவர்களுக்கு எழும். மாணவர்கள் படிப்பில்தான் சாதிக்க வேண்டும் என்றில்லை. கலை, விளையாட்டு என அவர்களின் தனித்திறனை வெளிக்காட்டினாலே போதும். இதன் வழியே ஆசிரிய - மாணவ உறவும் மேம்படும்.
பெண் உரிமை, முதியோர் பாதுகாப்பு, சாதியற்ற சமூகத்தை உருவாக்குவது என சமூகநீதி சார்ந்த பல தலைப்புகள் அவர்களுக்கு அளிக்கப்பட்டு, பங்களிக்க வைக்கப்படுகிறார்கள். இதன் மூலம் சமூக நீதி சிந்தனையையும் குழந்தைகளிடம் வளர்த்தெடுக்க முடியும். குழந்தைகளுக்கு பேசுவதற்கான சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அவர்களை கேள்வி கேட்கவிட வேண்டும். கலைத்திருவிழாவைப் போலவே அறிவியல் சார்ந்து மாணவர்களின் திறனை வெளிக்கொண்டு வர `வானவில் மன்றம்' ஆரம்பித்திருக்கிறோம். விரைவில் வானவில் மன்றத்தின் செயல்பாடுகள் ஆரம்பிக்கும்" என்கிறார் சுதன்.