கட்டுரைகள்
Published:Updated:

தலைக்கு மேலே கொரோனா!

ஹெல்மெட்
பிரீமியம் ஸ்டோரி
News
ஹெல்மெட்

இந்த ஹெல்மெட்டை அணியச் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.

“உலகமே பயப்படும் கொரோனா தமிழ்நாட்டுச் சாலைக்கு வந்து, தேவையில்லாமல் பொது வெளியில் சுற்றித்திரிபவர்களின்மீது தொற்றிக் கொண்டால் எப்படி இருக்கும்? இந்தச் சிந்தனை யில் தோன்றியதுதான் கொரோனா ஹெல்மெட்” என்ற குறிப்போடு பேசத்தொடங்கினார் ‘ஆர்ட் கிங்டமி’ன் நிறுவனர் கவுதம். சமீபத்தில் வைரலான கொரோனா ஹெல்மெட்டை வடிவமைத்தது கவுதம்தான்.

75 கிலோமீட்டர் வரை தெரு ஓரங்களிலிருந்த பிளாஸ்டிக் குப்பைகளை அப்புறப்படுத்தி, உலகின் மிக நீளமான நடைப்பயணம் மேற்கொண்டு சாதனை படைத்தவர் இவர். தன்னுடைய ஓவியம் மற்றும் வித்தியாசப் படைப்புகளின்மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் கவுதமோடு உரையாடினேன்.

“கொரோனா ஹெல்மெட் செய்யவேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?”

“ஓவியனாய் மக்களுக்காக என்ன செய்ய முடியும் என்ற கேள்வியே, என்னை ஹெல்மெட்டை வடிவமைக்க வைத்தது. அரசாங்கம் இன்றுவரை நல்ல விதத்தில் கையாண்டுவருகிறது. லாக் டௌன் முயற்சி சற்றுத் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டாலும், அனைத்துத் துறைகளின் உதவியோடும் நல்ல முறையில் பின்பற்றி வருகின்றனர்.”

“காவல் துறையைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன?”

“வெளிநாடுகளில் இதுபோன்ற லாக் டௌன் நாள்களில் எப்படி இருந்தார்கள், யாரெல்லாம் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றிக் கொண்டிருந்தனர் என்பதை ஆராய்ந்தேன். அதில், சுகாதாரத்துறை, துப்புரவுத்துறை, காவல்துறை மற்றும் ஊடகத்துறை என நான்கு முக்கியமான துறைகளின் பங்களிப்பு தென்பட்டது. இவர்களுள் யாரேனும் ஒருவருக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று தூண்டியது.

கவுதம்
கவுதம்

பொதுவாகவே காவல்துறை என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு சிலரின் நடவடிக்கையை வைத்து ஒட்டுமொத்தக் காவல்துறையையே ஒதுக்கி வைத்துவிட்டார்கள் மக்கள். ஆனால், காவலர் களுடைய பணி மதிக்கத்தக்கது. அவர்களுக்காக இதனைச் செய்யவேண்டும் என்று நினைத்தேன். எண்ணம் தோன்றிய அடுத்த நொடி வில்லிவாக்கம் காவல் நிலையத்திற்குச் சென்று, அங்கிருந்த காவல் அதிகாரியிடம் பேசினேன். அவர்களும் எனக்கு முழு ஒத்துழைப்பைக் கொடுத்தனர். மக்களைப் பாதுகாக்க வேண்டுமென்கிற கூட்டு முயற்சிதான் இது. சாலைகளில் நம்முடைய பாதுகாப்பிற்காக நிற்கும் காவல் அதிகாரிகளுக்கு இந்த ஹெல்மெட்டை அணியச் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.”

 ஹெல்மெட்
ஹெல்மெட்

“இந்த ஹெல்மெட் செய்ய என்ன பொருள்களையெல்லாம் பயன்படுத்தியிருக்கிறீர்கள்?”

“கொரோனா போனாலும், நம்மைச் சுற்றியுள்ள குப்பைகள் போகாது. குப்பைக் காகிதங்கள், நிறமிகள், பழைய ஹெல்மெட், நீண்ட இரும்பு ராடு போன்றவற்றை உபயோகித்து இந்த ஹெல்மெட்டைச் செய்திருக்கிறேன். காவல் அதிகாரிகள் கேட்டால் மட்டுமே ஹெல்மெட்டைக் கொடுப்பேன். பயன்படுத்துவதற்கு முன்பும், பயன்படுத்திய பிறகும் ஹெல்மெட்டை நன்கு சுத்தம் செய்துவிடுவேன்.”

“ `ஆர்ட் கிங்டம்’ பற்றி?”

“வெளிநாடுகளில் மிகவும் பிரபலமான ‘Wall Arts’-ஐ, இந்தியாவில் செய்துகொடுக்கும் பணிதான் எங்களுடைய வாழ்வாதாரம். ஓவியங்கள் மூலம் வீடுகளை அலங்கரிக்கும் வித்தியாச கான்செப்ட். நம்முடைய மொத்தப் படைப்பாற்றலையும் காண்பிக்க இது மிகப் பெரிய பிளாட்ஃபார்ம். சமூகம் எதிர்கொள்ளும் வெவ்வேறு விதமான பிரச்னைகளை எங்களுடைய ஓவியங்கள் மூலம் உலகெங்கும் கொண்டுசேர்க்கும் முயற்சியிலும் ஆர்ட் கிங்டம் களமிறங்கியிருக்கிறது. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான வன்முறைகளை மனதில்கொண்டு தீட்டப்பட்ட ஓவியங்கள் ஏராளம்.”

ராஜேஷ்
ராஜேஷ்

இந்தக் கொரோனா ஹெல்மெட் அணிந்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய வில்லிவாக்கம் காவல்துறை ஆய்வாளர் ராஜேஷ் பாபுவிடம் பேசினோம்.

“கொரோனா ஹெல்மெட் அணிந்து மக்களை நெருங்கியபோது மக்கள் என்ன சொன்னார்கள்?”

“ `நீ வெளியே வந்தால் நான் உன்னுள் வந்துவிடுவேன்’ என்கிற வாக்கியம் கொண்ட பிளக்கார்டு முதலில் செய்தோம். அதனைத் தொடர்ந்து, இந்த ஹெல்மெட் கான்செப்ட். இதனை அணிந்துகொண்டு, வீதிகளில் நடமாடும் மக்களிடம் சென்று பேசினேன். ‘நான் யாரு?’, ‘உங்க பக்கத்துல வந்து உட்காரலாமா?’ போன்ற கேள்வி களை அவர்களிடம் கேட்டேன். அவர்களிடத்தி லேயே தெளிவான விடை இருக்கிறது.

 ஹெல்மெட்
ஹெல்மெட்

மக்களைப் பாதுகாப்பதில் எங்களால் முடியும் உதவிகளை இதுபோன்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவதன்மூலம் செய்துவருகிறோம்” என்றார் உறுதியாக.