Published:Updated:

நாகாலாந்து : ராணுவத்துக்கு சிறப்பு அதிகாரம் தேவையா? ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் சொல்வதென்ன?

நாகாலாந்து தாக்குதல்
News
நாகாலாந்து தாக்குதல்

இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் இருக்கும் பல்வேறு இனக்குழுக்கள் தங்களுக்குள் மோதிக் கொள்வது வழக்கம். ஆனால், அவர்கள் ஒரே குரலாக இணைந்து பேசுவது இந்த ஒற்றை விவகாரத்தை மட்டும்தான்!

Published:Updated:

நாகாலாந்து : ராணுவத்துக்கு சிறப்பு அதிகாரம் தேவையா? ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் சொல்வதென்ன?

இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் இருக்கும் பல்வேறு இனக்குழுக்கள் தங்களுக்குள் மோதிக் கொள்வது வழக்கம். ஆனால், அவர்கள் ஒரே குரலாக இணைந்து பேசுவது இந்த ஒற்றை விவகாரத்தை மட்டும்தான்!

நாகாலாந்து தாக்குதல்
News
நாகாலாந்து தாக்குதல்

நாகாலாந்தில் நம் ராணுவம் தவறுதலாக அப்பாவி மக்கள்மீது நிகழ்த்திய துப்பாக்கிச்சூடு, மீண்டும் ஒருமுறை வடகிழக்கைப் பற்றியெரிய வைத்திருக்கிறது. 'ஆயுதப்படைகளின் சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்' என்ற கோரிக்கை வலுவாக எழுந்திருக்கிறது. நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ, மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா ஆகிய இருவருமே இதை வலியுறுத்தியுள்ளனர். இருவருமே பா.ஜ.க கூட்டணியில் இருப்பவர்கள். 'எல்லையற்ற அதிகாரம் கொடுத்ததுதான் அவர்களை இப்படி அப்பாவிகளுக்கு எதிராகத் துப்பாக்கி தூக்க வைத்திருக்கிறது. அந்த அதிகாரத்தைத் திரும்பப் பெற வேண்டும்' என்று பல அரசியல் கட்சியினரும் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளனர். 'சொந்த நாட்டு மக்கள் மீதே நம் ராணுவம் தாக்குதல் நடத்துவதா?' என்று கொதிக்கிறார்கள் நாகாலாந்து பா.ஜ.க தலைவர்கள்.

இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் இருக்கும் பல்வேறு இனக்குழுக்கள் தங்களுக்குள் மோதிக்கொள்வது வழக்கம். ஆனால், அவர்கள் ஒரே குரலாக இணைந்து பேசுவது இந்த ஒற்றை விவகாரத்தை மட்டும்தான்!

80 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை ஒடுக்குவதற்காக பிரிட்டிஷ் இந்திய காலனியாதிக்க அரசு கொண்டுவந்த ஒரு சட்டம், வேறு ஒரு வடிவத்தில் இன்னும் நீடிக்கிறது. இந்தியக் குடிமக்களை அடிப்படை உரிமைகள் கொண்ட மனிதர்களாகக்கூட கருதாமல் பிரிட்டிஷ் அரசு போட்ட சட்டத்தின் இன்னொரு வடிவம்தான் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம்.

நேரு கொடுத்த எச்சரிக்கை!

முரண் என்னவென்றால், நாகாலாந்தில் அமைதியை ஏற்படுத்தவே இந்த சட்டம் முதலில் வந்தது. 1958 செப்டம்பர் 11-ம் தேதி இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அப்போதே எதிர்க்கட்சிகள் இதைக் கடுமையாக எதிர்த்தன. நாகாலாந்து அப்போது அசாம் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. நாகா தீவிரவாதக் குழுக்கள் அப்போது தனிநாடு கோரி ஆயுதக் கலகத்தில் இறங்கின. அவர்கள் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கவே இந்த சட்டத்தைக் கொண்டுவந்தார் அப்போதைய பிரதமர் நேரு.

''தவறாக வழிநடத்தப்படும் நாகா இளைஞர்களைக் கட்டுக்குள் கொண்டுவரவே இந்த நடவடிக்கை. இதுபோன்ற சூழலில் அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், தேசம் சிதறிப் போய்விடும். ஆயுதம் ஏந்தி வன்முறையில் ஈடுபடும் பாசிசக் குழுக்களை அரசு கடும் நடவடிக்கை எடுத்து ஒடுக்க வேண்டியிருக்கிறது'' என்று இந்த சட்டத்தின் தேவை குறித்து எச்சரித்தார் நேரு.

நேரு
நேரு

எங்கே அமலில் இருக்கிறது?

அசாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் நாகா மக்கள் வசிக்கும் பகுதிகளில் முதலில் இந்த சட்டம் அமலானது. அதன்பின் படிப்படியாக வடகிழக்கு மாநிலங்கள் எல்லாவற்றிலும் அமல்படுத்தப்பட்டது. காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கம் பஞ்சாப்பில் வேரூன்றியபோது அங்கும் அமலானது. கடந்த 1990 முதல் காஷ்மீரிலும் இந்த சட்டம் அமலில் உள்ளது.

பிரிவினைவாத இயக்கங்கள் செயலிழந்த பல மாநிலங்களில் இந்த சட்டம் வாபஸ் பெறப்பட்டுவிட்டது. பஞ்சாப், திரிபுரா, மேகாலயா போன்ற மாநிலங்கள் அமைதிப் பாதைக்குத் திரும்பியதால் அங்கு ராணுவத்துக்கு சிறப்பு அதிகாரங்கள் இல்லை. இப்போது ஜம்மு காஷ்மீர், நாகாலாந்து, அசாம் ஆகிய மாநிலங்களில் முழுமையாகவும், மணிப்பூர் மற்றும் அருணாசலப் பிரதேசத்தில் சில பகுதிகளிலும் இந்த ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் அமலில் உள்ளது.

என்ன அதிகாரம் இருக்கிறது?

ஒரு மாநிலத்தையோ, அந்த மாநிலத்தின் சில பகுதிகளையோ 'பிரச்னைக்குரிய பகுதி' என அடையாளப்படுத்தி அங்கு ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் அமல்படுத்தப்படும். ஒரு பகுதியை 'பிரச்னைக்குரிய பகுதி' என்று அறிவிக்கும் அதிகாரம் ஆரம்பத்தில் மாநில அரசுக்கே இருந்தது. 1972-ம் ஆண்டு இந்த சட்டம் திருத்தப்பட்டது. மாநில கவர்னரின் கருத்துப்படியோ, மத்திய அரசின் உத்தரவுப்படியோ மட்டுமே ஒரு பகுதியை 'பிரச்னைக்குரிய பகுதி' என அறிவிக்க முடியும்.

இப்படி அறிவிக்கப்பட்டதும், அந்தப் பகுதியில் ராணுவத்துக்கு சிவில் நிர்வாக அதிகாரம் கொடுக்கப்பட்டுவிடும். பாதுகாப்பு காரணங்களுக்காக மக்களின் அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்பட்டு, கிட்டத்தட்ட அறிவிக்கப்படாத எமர்ஜென்சி சூழல்தான் அங்கு நிலவும்.

வாரன்ட் இல்லாமல் ராணுவத்தினர் யார் வீட்டிலும் நுழைந்து சோதனை செய்யலாம். யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம். சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக எப்போது வேண்டுமானாலும் துப்பாக்கிச் சூடு நடத்தலாம். யாரின் அனுமதிக்காகவும் காத்திருக்கத் தேவையில்லை. தாக்குதல் ஆயுதமாகக் கருதப்படும் எந்த ஒரு பொருளை வைத்திருப்பவரையும் சுட்டுக் கொல்லலாம். உதாரணமாக, ஒரு நீளமான டார்ச் லைட் வைத்திருக்கும் இளைஞரைக்கூட, அந்த டார்ச் லைட்டால் தாக்க வருகிறார் என்று கருதி கொல்ல முடியும்.

நாகாலாந்து தாக்குதல்
நாகாலாந்து தாக்குதல்

ஒரு வீடு அல்லது கட்டடத்தில் இருந்தபடி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவார்கள் என்று கருதினால், அந்தக் கட்டடத்தையே தகர்க்கலாம். இந்த எதைச் செய்தாலும், அவர்களை உள்ளூர் போலீஸோ, மாநில அரசோ, நீதிமன்றங்களோ கேள்வி கேட்க முடியாது. தேசப் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவே இவை கருதப்படும். ஒருவேளை ராணுவம் அத்துமீறியதாக குற்றச்சாட்டு எழுப்பினாலும், மத்திய அரசின் அனுமதியுடன்தான் நடவடிக்கை எடுக்க முடியும். பெரும்பாலும் அப்படி மத்திய அரசு அனுமதி தராது.

ராணுவ முகாம்கள் அருகே யாரும் நடமாடக்கூடாது. ஒருவர் தன் சொந்த ஊரிலிருந்து வெளியூர் செல்வதையும் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். வாகனங்களில் பொதுமக்கள் செல்வதும் கூட இந்தப் பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் அடிக்கடி சோதனை செய்யப்படும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் நடவடிக்கை உண்டு.

ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிகளைக் கட்டுப்படுத்த ராணுவத்துக்கு இந்த அதிகாரம் தேவை என்பதே மத்திய அரசின் நிலைப்பாடு.

வட கிழக்கு மாநிலங்களுக்கோ, காஷ்மீருக்கோ போனால், நம் ஊர்போல இயல்பான சூழலைப் பார்க்க முடியாது. சிறிய நகரங்களில்கூட வீதிகளில் எப்போதும் ரோந்து வரும் ராணுவ கவச வாகனங்கள், முக்கிய சந்திப்புகளில் சோதனை முகாம்கள், எங்கெங்கும் நிறைந்திருக்கும் ராணுவ வீரர்கள் என்று அந்த சூழலே வேறு மாதிரி இருக்கும்.

ஐரோம் சர்மிளாவும் சர்ச்சை சம்பவங்களும்!

எல்லையற்ற அதிகாரத்தை யார் கையில் கொடுத்தாலும் அது ஆபத்தில் முடியும் என்பதற்கு ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் உதாரணம். தீவிரவாதிகளை ராணுவம் கண்டறிந்து கொல்வதற்கு இந்த சட்டம் உதவியது என்பது உண்மைதான். அதேநேரத்தில், அப்பாவிகளை சித்திரவதை செய்வது, சந்தேகத்தின் பேரில் ராணுவம் கூட்டிச் செல்லும் பலர் திரும்பவும் வீடு திரும்பாமலே போவது, இரக்கமற்ற படுகொலைகள் போன்றவையும் அதிகரித்தன.

ஐரோம் ஷர்மிளா!
ஐரோம் ஷர்மிளா!

இப்போது நாகாலாந்தின் மோன் பகுதியில் 13 அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதற்குமுன் இப்படி பல சம்பவங்கள்...

குறிப்பாக மணிப்பூரில் மிக மோசமான சம்பவங்கள் நிகழ்ந்தன. தலைநகர் இம்பால் விமான நிலையம் அருகே 2000 நவம்பரில் 10 அப்பாவிகளை அசாம் ரைஃபில்ஸ் படை சுட்டுக் கொன்றது. 'மாலோம் படுகொலை' என்று வர்ணிக்கப்படும் இந்தத் துயரச் சம்பவத்தை அடுத்து, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஐரோம் சர்மிளா உண்ணாவிரதம் தொடங்கினார். அவரைக் கைது செய்து வலுக்கட்டாயமாக உணவு புகட்டுவதும், அவர் மீண்டும் வெளியில் வந்ததும் உண்ணாவிரதத்தைத் தொடர்வதுமாக நடந்தது. கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் அவரின் உண்ணாவிரதம் தொடர்ந்தது. மணிப்பூரில் அந்த சட்டம் விலக்கப்பட்ட பிறகு, 2016 ஆகஸ்ட் 9-ம் தேதி அவரின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது.

இதற்கிடையில் 2004-ம் ஆண்டு தங்ஜம் மனோரமா என்ற பெண்ணின் உடல், குண்டு காயங்களுடன் படுகொலை செய்யப்பட்டு கண்டெடுக்கப்பட்டது. ராணுவம்தான் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. தேசம் முழுக்க பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, 30 மணிப்புரி பெண்கள் 'இந்திய ராணுவமே, எங்களையும் பாலியல் வன்கொடுமை செய்' என்ற பதாகையை ஏந்தி முழு நிர்வாணமாக மணிப்பூர் தலைநகர் இம்பால் வீதிகளில் ஊர்வலமாகச் சென்றனர். மாநில முதல்வர் அலுவலகம் எதிரே ஐந்து இளைஞர்கள் தங்களைத் தீயிட்டுக் கொளுத்தித் தற்கொலைக்கு முயன்றனர்.

ரத்து செய்ய வேண்டும்!

மணிப்பூரில் ராணுவ நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இணைந்து Extra Judicial Execution Victims Families Association (EEVFAM) என்ற அமைப்பை வைத்துள்ளன. இந்த அமைப்பு சார்பில், ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு போடப்பட்டது. இந்த சட்டம் அமலுக்கு வந்த 1970களிலிருந்து மணிப்பூரில் 1,528 போலி என்கௌன்டர்கள் நடைபெற்றதாக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது. இவை பதிவு செய்யப்பட்ட மரணங்கள் மட்டுமே! ராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்களின் கணக்கு இதில் வராது. 'ராணுவத்துக்கு எல்லையற்ற அதிகாரம் கொடுத்திருப்பது முறையில்லை' என்று இந்த வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.

ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ஆராய்வதற்காக 2004-ம் ஆண்டு மத்திய அரசு நீதிபதி ஜீவன் ரெட்டி கமிட்டியை அமைத்தது. 'இந்த சட்டம் வெறுப்பு, அடக்குமுறை மற்றும் எதேச்சதிகாரத்தின் அடையாளமாக இருக்கிறது. இந்தச் சட்டத்தை அடியோடு ரத்து செய்ய வேண்டும்' என்று அரசுக்கு இந்த கமிட்டி அறிக்கை கொடுத்தது. நிர்வாக சீர்திருத்த ஆணையமும் தனது ஐந்தாவது அறிக்கையில் இதே பரிந்துரையைக் கொடுத்திருந்தது.

வட கிழக்கு மாநிலங்களில் அமைதி மலரச் செய்ய வேண்டும் என்ற அக்கறையில் மத்திய அரசு பல்வேறு ஆயுதக்குழுக்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. தனிநாடு கேட்கும் அமைப்புகளிடம் கூட தயக்கமின்றி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. அரசியல் தீர்வு நோக்கி தலைவர்கள் நகரும் நேரத்தில், ராணுவ நடவடிக்கைகள் அதைத் தடுத்துவிடுகின்றன என்பதுதான் வேதனை.

மாதிரி படம்
மாதிரி படம்

ராணுவ முகாம்களைத் தாண்டி வேறு எங்கும் ராணுவத்தினர் நடமாட்டத்தைப் பார்த்திருக்காத அமைதி மாநிலங்களுக்கு இந்த சட்டம் ஒரு பொருட்டே இல்லை. ஆனால், தினமும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் முதல் மாளிகைக்கடைக்குச் செல்லும் குடும்பத் தலைவிகள் வரை எல்லோரும் ஒரு ராணுவ முகாமையும் திடீர் சோதனைகளையும் தாண்டித்தான் போக வேண்டும் என்ற சூழல் இருப்பது பெருந்துயர். மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா சொல்வது போல, ''ராணுவத்தின் இருப்பால் அமைதி வருவதில்லை. ஏகப்பட்ட வலிகளை தினம் தினம் கடக்க வேண்டி இருப்பதால், அது மேலும் மேலும் கொந்தளிப்பையே ஏற்படுத்துகிறது.''

நாகாலாந்து தாக்குதலின் அதிர்வை மற்றவர்கள் எளிதில் மறந்து கடந்து போய்விடலாம். ஆனால், அந்த மக்களின் மனதில் அது அழியாத காயமாக இருக்கும். அந்தக் காயங்களுக்கு மருந்திடுவது அரசின் பொறுப்பு!

- தி.முருகன்