Published:Updated:

சென்னை: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து - தீயைக் கட்டுப்படுத்தும் பணி தீவிரம்

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து
News
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கல்லீரல் சிகிச்சைப் பிரிவு கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்படுத்தும் பணி தீவிரம்.

Published:Updated:

சென்னை: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து - தீயைக் கட்டுப்படுத்தும் பணி தீவிரம்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கல்லீரல் சிகிச்சைப் பிரிவு கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்படுத்தும் பணி தீவிரம்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து
News
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்பக்கம் உள்ள மூன்று டவர் பிளாக்குகளுக்குப் பின்புறமாக பல்வேறு சிகிச்சைகளை மேற்கொள்வதற்காகப் பல கட்டடங்கள் இருக்கின்றன. அங்குள்ள கல்லீரல் சிகிச்சைக்கான கட்டடத்தில் மொத்தம் மூன்று தளங்கள் இருக்கின்றன. இந்தக் கட்டடத்தின் தரைத்தளத்தில், இன்று காலை வெடிச் சத்தம் கேட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து அந்தக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.

தீ விபத்து
தீ விபத்து

கட்டடத்தில் மருத்துவ உபகரணங்கள் வைக்கும் அறையில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது. தீ விபத்து குறித்த தகவல் தீயணைப்புத்துறையினருக்கு உடனடியாகத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப்படையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். தீ விபத்து ஏற்பட்ட வளாகத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்ளே இருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அந்தக் கட்டடத்தில் கல்லீரல் சிகிச்சைப் பிரிவு ஐ.சி.யூ வார்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

கட்டடத்தின் உள்ளே சிக்கியுள்ள நோயாளிகளை வெளியே கொண்டுவருவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. நான்குக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அதோடு, சென்னை குடிநீர் வாரியத்தின் தண்ணீர் லாரிகளும் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இருந்தபோதிலும், தீயைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் நீடிக்கிறது. தரைத்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் கரும்புகை மேல் தளம் வரை செல்கிறது. மருத்துவ உபகரணங்கள் வைக்கும் அறையிலிருந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெடித்ததில் தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

உள்ளேயிருக்கும் 30-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக மருத்துவமனை சார்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தீ விபத்து தகவலறிந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா ராஜன், மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அந்த மருத்துவக் கல்லூரி முதல்வர் முதல் காவல்துறை உயரதிகாரிகள் வரை பலரும் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்தனர். 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்கள். தற்போதைய நிலையில் தீயைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான பணியாகவே இருந்துவருவதாகச் சொல்லப்படுகிறது. தீயைக் கட்டுப்படுத்திய பிறகுதான் இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவரும்.