மகிழ்ச்சியோ, துக்கமோ சூழலுக்கேற்ப உருக்கமாக, ரைமிங்காக வசனங்கள் யோசித்து டிசைன் டிசைனாக போஸ்டர் அடிப்பது மதுரையின் ஸ்பெஷல்.

'காவிரித்தண்ணிய வச்சுக்கோ, எங்க அம்மாவை கொடுன்னு' ஜெயலலிதா கர்நாடக சிறையில் இருந்தப்போ, கர்நாடக கவர்மென்ட்டே அதிர்ச்சியாகிற மாதிரி 16 பிட்டு போஸ்டர் போட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது மதுரைக்காரங்கதான். ஊரில் யாருக்க்குமே தெரியாத உறவினரோ நண்பரோ இறந்துவிட்டால் உடனே இமயம் சரிந்தது, ஆல்ப்ஸ் அழிந்தது, ஆர்டிக் கரைந்தது, அமேசான் எரிந்தது என்று போஸ்டர் போட்டு அறிவியல், புவியியலுக்கே டஃப் கொடுப்பார்கள்.
அதனால் ஒவ்வொரு நாளும் மதுரை வீதிகளில் தென்படும் ஒவ்வொரு போஸ்டரும், பிளக்ஸ்களும் மக்களுக்கு புத்துணர்ச்சியை உண்டு பண்ணும்.
இந்த நிலையில்தான் மதுரை ஒத்தக்கடை பகுதியில் திருமண மண்டப வாசலில் வைக்கப்பட்டிருந்த ஒரு வாழ்த்து பிளக்ஸ் திரும்பி பார்க்க வைத்தது. இராம நாராயணன் பட போஸ்டர்போல் யானை, காளை, நாய் படங்களை இடம்பெறச்செய்து அவைகள் மணமக்களை ஆசிர்வதித்து மக்களை வரவேற்பதுபோல் சித்தரிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து அங்கிருந்தவர்களிடம் விசாரித்தபோது கிடைத்த தகவல் ரொம்ப சுவாராசியமாக இருந்தது.
மதுரை மேலமாசி வீதியைச் சேர்ந்த மதன்குமார்-பவித்ராவின் திருமண விழா. மணமகன் மதன்குமார் சுமதி என்ற யானையை வளர்த்து வருவதுடன் அதை திரைப்படங்களிலும் நடிக்க வைத்து வருகிறார். இவருக்கு முன்பே அவரது அப்பாவும், தாத்தாவும் மதுரவள்ளி, குலேபகாவலி என இரண்டு யானைகளை வளர்த்து வந்தனர். குடும்பமே யானை கட்டி வாழ்ந்தவர்கள்.மதன்குமார் யானையுடன் சேர்த்து ஜல்லிக்கட்டு காளைகளையும், நாட்டு நாய்களையும் வளர்த்து குடும்ப உறுப்பினர் போல பாதுகாத்து வருகிறார்.

அந்தப் பாசத்தின் விளைவால் வளர்க்கும் ஜீவராசிகளின் ஆசியோடு திருமண விழாவிற்கு உறவினர்களை வரவேற்பது போல் விளம்பரம் செய்திருந்தார்.
அது மட்டுமின்றி, திருமண விருந்தின்போது உறவினர்களை கவனித்ததுபோல், தான் வளர்த்து வரும் தமிழ் என்ற ஜல்லிகட்டு காளையை மண்டபத்துக்கு அழைத்து வந்து அதற்கு மணமகளுடன் சேர்ந்து விருந்து உபசரித்தார்.
சக மனிதர்களையே மதிக்காமல் ஜாதி, மத, கட்சித்தலைவர்களையும், நடிகர்களையும் அடையாளப்படுத்திக் கொள்ளும் சம காலத்தில் தான் வளர்க்கும் விலங்கினங்களை திருமணத்தில் அடையாளப்படுத்தி பெருமைப்படுத்திய மணமக்களின் செயல் மதுரை மக்களால் பாராட்டப்படுகிறது.