Published:Updated:

`தமிழ்நாட்டுக்குத் தனிக்கொடி வேண்டும்' - கோரிக்கை வலுப்பதன் பின்னணி என்ன?

தமிழ்நாடு தனிக்கொடி கோரிக்கை
News
தமிழ்நாடு தனிக்கொடி கோரிக்கை

தமிழ்நாடு மொழிவாரி மாநிலமாக உருவான நவம்பர் 1-ம் தேதியன்று, தமிழ்நாட்டுக்கெனத் தனிக்கொடி அறிவிக்க வேண்டும் எனப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

Published:Updated:

`தமிழ்நாட்டுக்குத் தனிக்கொடி வேண்டும்' - கோரிக்கை வலுப்பதன் பின்னணி என்ன?

தமிழ்நாடு மொழிவாரி மாநிலமாக உருவான நவம்பர் 1-ம் தேதியன்று, தமிழ்நாட்டுக்கெனத் தனிக்கொடி அறிவிக்க வேண்டும் எனப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

தமிழ்நாடு தனிக்கொடி கோரிக்கை
News
தமிழ்நாடு தனிக்கொடி கோரிக்கை

தி.மு.க அரசு ஆட்சிப்பொறுப்பேற்றதிலிருந்து மத்திய அரசை `ஒன்றிய அரசு' என்றே அழைத்துவருகின்றனர். கூட்டாட்சித் தத்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதாக முதலமைச்சர் ஸ்டாலினும் விளக்கமளித்தார். அதேபோல, இந்தியாவின் பன்முகத்தன்மை, மாநில சுயாட்சியை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ் மாநிலத்துக்குத் தனிக்கொடி ஒன்றையும் அறிமுகப்படுத்த வேண்டும் என வி.சி.க உள்ளிட்ட கட்சிகளிடமிருந்து குரல்கள் எழத் தொடங்கின. அந்த நிலையில், ஏற்கெனவே தமிழ்நாடு தனிக்கொடி தொடர்பாக போராடிக்கொண்டிருக்கும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர், கடந்த அக்டோபர் 16-ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்து, தமிழ்நாட்டுக்குத் தனிக்கொடி, தமிழ்நாடு நாள் நவம்பர்-1 அரசு விடுமுறை போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு வைத்த கோரிக்கைகள்:

``தமிழறிஞர்கள், கல்வியாளர்கள், தமிழ்நாடு தலைவர்கள் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் நீண்டநாள் கோரிக்கையான `நவம்பர் 1-ம் நாளை தமிழ்நாடு நாள்' என அறிவித்து அரசு விழா எடுக்க வேண்டும்'' என 25-10-2019 அன்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து, 1-11-2019-ல் அரசே விழா எடுத்து தமிழ்நாடு நாளைக் கொண்டாடியது. எனவே,

* இந்தப் பெரும் விழாவை தமிழ்நாட்டிலுள்ள எல்லாக் கல்வி நிறுவனங்களிலும், அரசு அலுவலகங்களிலும், மாநகராட்சி முதல் ஊராட்சி அலுவலகங்கள் வரையிலும் உள்ள தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டுமென அரசு அறிவிக்க வேண்டும்.

* நவம்பர் 1-ம் நாளை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்.

* கர்நாடக அரசு உள்ளிட்ட பல மாநிலங்களில் அரசுகள், தங்கள் மாநிலங்களுக்கென தனித்தனியே கொடிகளை அடையாளப்படுத்தி ஏற்றி மகிழ்ந்திடுவதுபோல், தமிழ்நாட்டு மக்களும் கட்சி சார்பற்ற நிலையில் ஒரு பொதுவான கொடியை ஏற்றிக் கொண்டாட ஏதுவாக, தமிழ்நாடு தமிழறிஞர்கள், கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரின் கருத்தறிந்து தமிழ்நாடு அரசே தமிழ்நாட்டுக் கொடியை வடிவமைத்து அறிவிக்க வேண்டும்.

மேற்கண்ட இம்மூன்று கோரிக்கைகளையும் செயல்படுத்தி, வரலாற்றில் இடம்பிடித்திட தமிழ்நாட்டு அரசை பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு வேண்டிக்கொள்கிறது. தமிழர்களை சாதி, மதம் கடந்து ஒருங்கிணைந்த இது போன்றதான முயற்சிகள் தமிழ்நாடு அரசுக்கு பெரும் வலுவைத் தந்திடும் என்றே கருதுகிறோம்'' என அந்தக் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் சில நாள்களாக இந்தக் கோரிக்கைகளை முன்வைத்துப் பேசியும், அறிக்கை வெளியிட்டும்வருகின்றனர். குறிப்பாக,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்:

``நவம்பர் 1-ம் தேதி மொழிவாரி அடிப்படையில் மாநிலம் பிரிந்த நாள். இந்த ஆண்டு முதல், தமிழக அரசு இந்த நாளை தமிழ்நாடு நாளாகக் கொண்டாட வேண்டும். தமிழகத்துக்குத் தனிக்கொடி அறிவிக்க வேண்டும். நவம்பர் 1-ம் தேதியை தமிழர் இறையாண்மை நாள் என அறிவிக்க வேண்டும். சங்கரலிங்கனார் நினைவைப் போற்றும்விதமாக அவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும். அவர் பெயரில் விருது வழங்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார். அதேபோல,

திருமாவளவன்
திருமாவளவன்

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன்:

``மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினமான நவம்பா் 1-ம் தேதியை, கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்கள் அவா்களுக்கான தனிக்கொடியை ஏற்றிக் கொண்டாடிவருகிறார்கள். அந்த மாநிலங்களைப் போன்று, தமிழ்நாட்டுக்கு என தனிக்கொடி உருவாக்கப்படவில்லை. 1970-களில் தமிழ்நாட்டுக்கு தனிக்கொடி வேண்டும் என்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் கோரிக்கை விடுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். அப்போது நிலவிய அரசியல் சூழ்நிலை காரணமாக ஒன்றிய அரசிடமிருந்து அனுமதி பெற முடியவில்லை.

 தான் வடிவமைத்த தமிழ்நாட்டு தனிக்கொடியுடன் கருணாநிதி
தான் வடிவமைத்த தமிழ்நாட்டு தனிக்கொடியுடன் கருணாநிதி

இந்த நிலையில், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு 61 ஆண்டுகளைக் கடக்கும் நிலையில், கலைஞர் அவர்களின் ’தமிழ்நாட்டுக்குத் தனிக்கொடி’ என்ற கனவை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். இந்தியா என்பது ஒரு நாடு அல்ல; இது பல நாடுகள் சேர்ந்த ஒன்றியம். இதன் காரணமாகத்தான், அரசு அமைப்புச் சட்டம் `யூனியன் ஆஃப் இந்தியா’ என்று குறிப்பிடுகின்றது. அதன் அடிப்படையில்தான், தி.மு.க பதவியேற்றதிலிருந்து, இந்திய அரசை `ஒன்றிய அரசு' என நாம் கூறிவருகிறோம்.

அதே இந்திய அரசியலமைப்புச் சட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டுதான், தமிழ்நாட்டுக்கு தனிக்கொடி வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. ஏற்கெனவே பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாட்டுக்கு தனிக்கொடி வேண்டும் என வலியுறுத்திவருகிறது.

வேல்முருகன்
வேல்முருகன்

``சாதியாலும், மதங்களாலும் மக்களைப் பிரித்து தமிழ்நாட்டில் எப்படியாவது காலுன்றிவிடலாம் என பாஜக-வும், ஆர்.எஸ்.எஸ்-ஸும் நினைத்துவரும் நிலையில், தமிழ்நாட்டுக்குள் தனிக்கொடி உருவாக்கப்படுவதன் வாயிலாக தமிழ்நாட்டு மக்களை ஒன்றிணைக்க முடியும்" என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கருதுகிறது. தமிழ்நாட்டுக்கு என தனிக்கொடி அமைப்பதில் எந்தத் தவறும் இல்லை. அதைத் தடுக்கும் அதிகாரம் ஒன்றிய அரசுக்குக் கிடையாது.

கருணாநிதி வடிவமைத்த தமிழ்நாடு தனிக்கொடி
கருணாநிதி வடிவமைத்த தமிழ்நாடு தனிக்கொடி
விக்கிபீடியா

எனவே, நவம்பர் 1-ம் தேதியை, தமிழ்நாடு தினமாக அறிவித்து, அந்த தினத்தை கொண்டாட வேண்டும். தமிழர்களின் தொன்மையையும், வரலாற்றையும் பறைசாற்றும் வகையில் தமிழ்நாட்டுக்கு தனிக்கோடியை உருவாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என அறிக்கையின் மூலம் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா:

``இந்தியாவின் விடுதலைக்குப் பிறகு நிலவழி மாநிலம் எனும் தனது கருத்துக்கு மாறாக இருந்தபோதும், மக்களின் மொழிவழி மாநில உரிமைக்குரலுக்கு மதிப்பளித்த அன்றைய பிரதமர் நேரு, 'மாநில மறுசீரமைப்புச் சட்டத்தை' இயற்றினார். அதன்படி, 1956 நவம்பர் 1-ல் இந்தியா, 14 மாநிலங்களாகவும் 6 ஒன்றியப் பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டது. தமிழகம் சென்னை மாநிலம் என்றும், கர்நாடகம் மைசூர் மாநிலம் என்றும் கேரளம் தனியாகவும் நவம்பர்-1, 1956-ல் தனித்தனி மாநிலங்களாகின.

 ஜவாஹிருல்லா
ஜவாஹிருல்லா

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினமான நவம்பர் 1-ம் தேதியை நமது அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரா போன்ற மாநிலங்கள் அவர்களுக்கான தனிக்கொடியை ஏற்றிக் கொண்டாடிவருகிறார்கள். தமிழக அரசு 2019-ல்தான் முதன்முதலாக அரசு விழாவாகக் கொண்டாடியது. தமிழ்நாட்டுக்கு என்று தனியாகக் கொடி எதுவும் வடிவமைக்கப்படவில்லை. பல மாநிலங்களில் அரசுகள், தங்கள் மாநிலங்களுக்கென தனித் தனியே கொடிகளை அடையாளப்படுத்தி ஏற்றி மகிழ்ந்திடுவதுபோல், தமிழ்நாடு அரசும் தமிழ்நாட்டுக் கொடியை வடிவமைத்து அறிவிக்க வேண்டும்.

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் வெளியிட்ட தமிழ்நாட்டுக்கான தனிக்கொடி
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் வெளியிட்ட தமிழ்நாட்டுக்கான தனிக்கொடி

மேலும், நவம்பர் 1-ம் நாளை விடுமுறை நாளாக அறிவித்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு முன்வைத்திருக்கிறது. சாதி மதங்களைக் கடந்து தமிழர்கள் ஒருங்கிணைவதற்கு இந்த முன்னெடுப்பு உதவியாக இருக்கும் என்று மனிதநேய மக்கள் கட்சியும் கருதுகிறது. தமிழக அரசு இந்தக் கோரிக்கையை ஏற்று, தமிழர்களின் ஒற்றுமையை வலுப்படுத்த முன்முயற்சி மேற்கொள்ளுமாறு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்" என தனது அறிக்கையின் வாயிலாகத் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.

மாதிரி தனிக்கொடி
மாதிரி தனிக்கொடி

இதைப்போலவே பல்வேறு அரசியல் இயக்கங்கள், தேர்தல் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள் தொடர்ந்து இந்தக் கோரிக்கையை தமிழ்நாடு அரசிடம் வலியுறுத்திவருகின்றனர்.

தமிழ்நாடு நாள் நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு தனிக்கொடி பறக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!