Published:Updated:

`அமைச்சர் டேபிளில் ஆயிரம் பைல்களா?' - நிதித்துறையை சுற்றும் சர்ச்சை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தமிழக அரசின் 33 துறைகளுக்கு நிதிகளை ஒதுக்குவது நிதியமைச்சகம். அமைச்சரின் டேபிளில் உள்ள பைல்களில் கையெழுத்திடாமல் தொடர்ந்து அமைச்சர் காலம்தள்ளிவருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. ஆனால், முக்கிய வாக்குறுதிகள் சிலவற்றை நிறைவேற்ற முடியாமல் இருப்பதற்குத் தமிழக நிதிநிலையும் ஒருகாரணம் என்று அரசு தரப்பில் விளக்கம் சொல்லப்பட்டது. குறிப்பாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை இதுவரை அறிவிக்காமல் இருப்பதற்குக் காரணமே நிதிச்சுமை தொடர்ந்து அதிகரித்து வருவதே என்கிற கருத்து பரவலாக இருந்து வரும் நிலையில், நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் போக்கும் நிதித்துறையின் செயல்பாடுகளும் ஒரு காரணம் என்கிறார்கள்.

ஸ்டாலினுடன் பழனிவேல் தியாகராஜன்
ஸ்டாலினுடன் பழனிவேல் தியாகராஜன்

தமிழக அரசின் நிதி நிலை மிகவும் மோசமான நிலையில் எல்லாம் இல்லை என்கிறார்கள் நிதித்துறை அதிகாரிகள். தற்போது தமிழக அரசுக்குச் சொந்தமான அசையா சொத்துக்களை அடமானம் வைத்து ரிசர்வ் வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கிகளில் கடன் வாங்கப்படுகிறது. அந்த கடனுக்கான வட்டி தொடர்ந்து அதிகரித்து நிதிப் பற்றாக்குறையாக மாறிவிட்டது. மத்திய அரசு கொண்டுவந்த ஜி.எஸ்.டி-யால் மாநில அரசின் கட்டுபாட்டில் இருந்த வரிகள் எல்லாம் மத்திய அரசின் கட்டுபாட்டில் சென்றுவிட்டது. பெட்ரோலுக்கான வரி மட்டுமே மாநில அரசின் கட்டுபாட்டில் இருப்பதும், மத்திய அரசு அதற்கான இழப்பீட்டுத் தொகையை மாநில அரசுகளுக்குத் தராமல் இருப்பதும் பற்றாக்குறைக்கு மற்றொரு காரணம். அதே நேரம் தமிழக அரசின் கட்டுபாட்டில் உள்ள பத்திரப்பதிவுக்கான கட்டணம், கட்டட அனுமதிக்கான வரி, பேருந்துக்கட்டணம், வாகனங்களுக்கான வரி போன்றவற்றில் மாற்றங்களைச் செய்ய முடியும்” என்கிறார்கள்.

“தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறந்த நிர்வாகி. பாரம்பரியமான பின்னணியைக் கொண்டவர் எல்லாம் சரிதான். ஆனால் ஒரு மாநிலத்தின் நிதியமைச்சராக இருப்பவர் மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெற்றுத்தருவதில் கெட்டிக்காரராக இருக்கவேண்டும். ஆனால் இவர் மத்திய நிதியமைச்சருடன் தொடர்ந்து மல்லுக்கட்டி வருவதால், மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் தொடர்ந்து இழுத்தடித்து வருகிறது. குறிப்பாக ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையில் இந்த நிதி ஆண்டில் மத்திய அரசு தமிழகத்துக்கு ஒதுக்கியது 3,818 கோடி மட்டுமே. இப்படி மத்திய அரசிடமிருந்து வரும் நிதி ஆதாரங்கள் தொடர்ந்து குறைந்து வருதால் நிதி நெருக்கடியும் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதைத் தவிர்க்க மத்திய நிதியமைச்சரை தமிழக நிதியமைச்சர் சந்தித்து முறைப்படி கோரிக்கை வைக்க வேண்டும். ஆனால் தமிழக நிதியமைச்சர் மத்திய அரசோடு தொடர்ந்து மோதல் போக்கைக் கடைபிடிப்பதால் மத்திய அரசு தமிழக அரசை நிதிநெருக்கடிக்கு உள்ளாக்கிவருகிறது” என்கிறார்கள் நிதித்துறை அதிகாரிகள்.

பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்: அதிரடியாகப் பேசுகிறாரா... அதிகம் பேசுகிறாரா?!
தமிழக பட்ஜெட்
தமிழக பட்ஜெட்

கடந்த ஒருமாதத்தில் மட்டும் நிதி அமைச்சர் டேபிளில் 1000-க்கும் மேற்பட்ட பைல்கள் தேங்கியுள்ளது என்கிற தகவல் கோட்டைக்குள் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக தமிழக அரசின் 33 துறைகளுக்கு நிதி ஒதுக்குவது நிதியமைச்சகம். ஆனால், அந்த நிதியமைச்சகத்தில் அதிகாரிகள் பைலைத் தயார்செய்து அமைச்சரின் டேபிளுக்கு கொண்டுசென்றால், அதில் கையெழுத்திடாமல் தொடர்ந்து அமைச்சர் காலம்தள்ளிவருகிறார் என்கிறார்கள். இதற்கு அமைச்சர் தரப்பிலோ “ நிதியமைச்சர் டேபிளில் பைல்கள் தேங்கியிருப்பது உண்மை. காரணம். பல கோப்புகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு சரியான பதில் இல்லை. பல திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளுக்கு சரியான விவரங்களையும் அந்தந்தத் துறைகளின் சார்பில் கொடுக்கப்படவில்லை. இதை குறிப்பிட்டு அமைச்சர் விளக்கம் கேட்பதால் அமைச்சர் மீது பலரும் கடுப்பில் இருக்கிறார்கள்“ என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு