Published:Updated:

யூரோ டூர் - 15: சோவியத் எழுச்சி - ஜோசப் ஸ்டாலின் ஆட்சியும், ரத்தக்கறையால் எழுதப்பட்ட வரலாறும்!

 லெனின் - ஸ்டாலின்
News
லெனின் - ஸ்டாலின்

லெனின் காலத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ஸ்டாலின், அப்போதே உள்நாட்டுப் போரில் போல்ஷ்விக்குகள் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கினார்.

Published:Updated:

யூரோ டூர் - 15: சோவியத் எழுச்சி - ஜோசப் ஸ்டாலின் ஆட்சியும், ரத்தக்கறையால் எழுதப்பட்ட வரலாறும்!

லெனின் காலத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ஸ்டாலின், அப்போதே உள்நாட்டுப் போரில் போல்ஷ்விக்குகள் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கினார்.

 லெனின் - ஸ்டாலின்
News
லெனின் - ஸ்டாலின்

சோவியத் யூனியனின் பிறப்பும் லெனினின் எழுச்சியும்

சோவியத் ஒன்றியத்தின் எழுச்சி ரஷ்ய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியில் தொடங்கியது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ரஷ்யா முழு அதிகாரமும் பெற்ற ஜார் (czars) என்ற அரச வம்சத்தால் ஆளப்பட்டது. 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஜப்பானியப் போர் மற்றும் முதல் உலகப் போர் ஆகிய இரண்டிலும் சந்தித்த தொடர்ச்சியான தோல்விகள் மன்னர் நிக்கோலஸின் தலையில் சென்று விழுந்தன. குழம்பிய குட்டையாக இருந்த ரஷ்யாவில் பலர் புரட்சி எனும் பெயரில் மீன் பிடிக்க முயன்றனர். இதில் மக்களின் அதிக ஆதரவு, தொழிலாளர் வர்க்கத்தின் பிரதிநிதியாக இருந்த லெனினின் போல்ஷ்விக் கட்சி வசமானது.

கார்ல் மார்க்ஸ்
கார்ல் மார்க்ஸ்


ஜெர்மன் தத்துவஞானிகளும், சமூக விஞ்ஞானிகளுமான காரல் மார்க்ஸ் (Karl Marx) மற்றும் ஃபிரடெரிக் ஏங்கல்ஸ் (Friedrich Engels) ஆகிய இருவர் விதைத்த கம்யூனிச விதை, சோவியத் ஒன்றியத்தில் மரமாக வளர்ந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் “ஐரோப்பா முழுவதிலும் இருந்த முதலாளித்துவம், இறுதியில் தன்னைத்தானே அழித்து, தொழிலாளிகள் தலைமையிலான அரசாங்கத்தால் மாற்றப்படும்” என்று அவர்கள் கூறியது போலவே, இருபதாம் நூற்றாண்டை கம்யூனிசம் கையிலெடுத்தது..!

லெனின் உருவாக்கிய தனி சாம்ராஜ்ஜியம்

ஏப்ரல் 22, 1876-ல் பிறந்த லெனினின் பெற்றோர் பணக்கார பழைமைவாதிகள். தீவிர சோஷலிஸ்ட்டான அவரது சகோதரரோ, ரஷ்ய மன்னர் அலெக்சாண்டரை படுகொலை செய்ய சதித் திட்டமிட்டதால் மரண தண்டனையை பரிசாகப் பெற்றவர். பிரபலமான கசான் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற லெனினுக்கு மார்க்சியத்தின் சமூக அரசியல் கோட்பாட்டைப் படிப்பதில்தான் உண்மையான ஆர்வம் இருந்தது. அப்போதைய, விவசாயம் சார்ந்த சமூகம் ஓர் உறுதியான புரட்சியை முன்னெடுக்கும் என அவர் நம்பவில்லை. அதைத் தொடர்ந்து மார்க்சிய கொள்கைகளை பரப்புவதற்காக சூரிச், பாரிஸ் மற்றும் பெர்லினுக்குச் சென்றவர் ரஷ்யா திரும்பியதும் கைது செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். மீண்டும் நாடு திரும்பிய லெனின், ரஷ்யாவை உலகின் முதலாவது கம்யூனிச நாடாக பிரகடனப்படுத்தினார். ஒரு காலத்தில் ரஷ்யப் பேரரசாக இருந்த பிரதேசத்தில் போல்ஷ்விக்குகள் ஒரு சோஷலிச அரசை நிறுவினர்.

புரட்சியளர் லெனின்
புரட்சியளர் லெனின்

1922-ல் Russian, Transcaucasian, Ukrainian மற்றும் Belorussian பிரதேசங்களின் ஒருங்கிணைப்புடன் சோவியத் யூனியன் உருவாக்கப்பட்டு, கம்யூனிஸ்ட் போல்ஷ்விக் கட்சியின் ஆட்சி ஆரம்பமானது. உலக நிலப்பரப்பில் கிட்டத்தட்ட ஆறில் ஒரு பகுதியை ஆக்கிரமித்து, உலகின் மிகப்பெரிய சக்திவாய்ந்த வல்லரசாக மாறிய சோவியத் ஒன்றியம், மாஸ்கோவைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தது. ரஷ்யா, உக்ரைன், ஜார்ஜியா, பெலாரஸ், உஸ்பெகிஸ்தான், ஆர்மீனியா, அஜர்பைஜான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், மால்டோவா, துர்க்மெனிஸ்தான், தஜிகிஸ்தான், லாட்வியா, லிதுவேனியா மற்றும் எஸ்டோனியா எனும் மொத்தம் 15 சோவியத் குடியரசுகளால் பிரமாண்டமாகக் கட்டியெழுப்பப்பட்டது. இந்தப் பதினைந்து பிரதேசங்களின் ஒன்றிணைந்த படைபலம் பிற்காலத்தில் இரண்டாம் உலகப்போரில் சோவியத் யூனியனின் அசுர வெற்றிக்கு அடிக்கோடிட்டது.

லெனினைக் கொல்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சில படுகொலை முயற்சிகளின் தோல்விக்குப் பிறகு, அவர் உருவாக்கிய ரெட் டெரர் என்று அழைக்கப்பட்ட Chekka Institute ரகசிய ராணுவப் படை, ஆட்சிக்கு விசுவாசமாக இல்லாத பலரையும் கொன்று குவித்தது. “அண்ணன் எப்போ சாவான், திண்ணை எப்போ காலியாகும்” என லெனின் ஆட்சியில் உயர்மட்டப் பதவிக்குப் போட்டியிட்ட பல குள்ள நரிகள் மத்தியில், ஜோசப் ஸ்டாலின் அமைதியாக தனது காய்களை நகர்த்த ஆரம்பித்தார்.

லெனின் காலத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ஸ்டாலின், அப்போதே உள்நாட்டுப் போரில் போல்ஷ்விக்குகள் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கினார். இன்று, ஜோசப் ஸ்டாலின் என்ற பெயரைக் கேட்கும் பலர் மனதில் விரியும் முதல் பிம்பம், 'ஒரு காலத்தில் சோவியத் யூனியனை ஆண்ட இரக்கமற்ற சர்வாதிகாரி' என்பதே! ஆனால், ரஷ்ய மக்களில் பெரும்பான்மையினர் அவரை வேறுவிதமாகப் பார்த்தனர். முதல் உலகப்போரின் பின்னர் துவண்டிருந்த சோவியத் ரஷ்யாவைத் தூக்கி எழுப்பவும், உலக அரங்கில் அதுவிட்ட இடத்தைப் பிடிக்க வைக்கவும், தம்மைக் காக்கவும் வந்த ஒரு திறமையான தலைவராக ஸ்டாலினை அவர்கள் கருதினர்.

 லெனின்
லெனின்

ரஷ்யப் பேரரசின் ஜார்ஜிய காட்டு எல்லையில், மிகவும் ஒரு வறிய குடும்பத்தில், செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு 1878-ல் பிறந்த Joseph Jew Gosh Villi எனும் குழந்தை, பிற்காலத்தில் சோவியத் ரஷ்யாவை 30 வருடங்களுக்கு தன் இரும்புக் கரம் கொண்டு ஆட்டிவைத்த சர்வாதிகாரியாக மாறியது எப்படி..? வெறும் ஜீரோவிலிருந்து, சோவியத்தின் ஹீரோவாக ஸ்டாலினின் எழுச்சி யாருமே எதிர்பாராத ஒரு ட்விஸ்ட்... யார் இந்த ஸ்டாலின்?

Uncle Joe என்று ஒரு பக்கம் அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவர். The Man of Steel என மறுபுறம் டெரராக பார்க்கப்பட்டவர். சோவியத் ரஷ்யாவை தன் உள்ளங்கைகளுக்குள் அடக்கி வைத்திருந்த ஜோசப் ஸ்டாலின் 30 வருட ஆட்சியில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றுவரை மர்மமாகவே உள்ளது.

ரஷ்யாவின் இரும்பு மனிதன் என்று அழைக்கப்படும் ஸ்டாலின் முதலில் ஒரு ரஷ்யரே கிடையாது. ஜார்ஜியாவின் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த ஸ்டாலின், அதி புத்திசாலிக் குழந்தை. அவரது அபார திறமையையும், நினைவாற்றலையும் கண்டு ஆசிரியர்களே மூக்கின் மேல் விரல் வைத்தனர். எதிலும் எப்போதும் தான் முதலிடத்தில் இருக்கவேண்டும் என விரும்பிய அவர், அதற்காக என்ன வேண்டுமானாலும் பண்ணலாம் என உறுதியாக நம்பினார்.

செமினரியில் படிக்கும்போது ஆரம்பத்தில் நாத்திகராக இருந்த ஸ்டாலின், கார்ல் மார்க்ஸைப் படிக்க ஆரம்பித்ததவுடன், அப்போதைய ரஷ்யாவை ஆண்ட ஜார் வம்சத்துக்கு எதிரான புரட்சிக்கான புதிய பாதைகளை காணத்தொடங்கினார். 20 வயதில் செமினரியை விட்டு விலகிய ஸ்டாலின், ஜார்ஜியாவில் தலைமறைவாக இயங்கிய மார்க்சிய அமைப்பில் சேர்ந்து தன் அரசியல் வாழ்க்கைக்கான முதல் அடியை எடுத்து வைத்தார். மன்னராட்சியை முடித்து வைப்பதில் ஏற்பட்ட கலகத்தில் அதி உற்சாகமாக பங்குகொண்ட ஸ்டாலினின் மேல் லெனினின் பார்வை விழுந்தது. விளைவு, போல்ஷ்விக் இயக்கத்தின் தலைவர் லெனினைச் சந்திக்கும் அழைப்பு தேடி வந்தது.

இரும்புக் கரங்களுக்குள் சிறைப்பட்ட சோவியத் ஒன்றியம்

லெனினின் கண்களுக்கு ஸ்டாலின் ஒரு நம்பகமான புரட்சியாளனாகத் தெரிந்தார். அந்த நம்பிக்கை ஸ்டாலின் கைகளுக்கு பல முக்கியமான பதவிகளைக் கொண்டு சேர்த்தது. அதிகாரம் கொடுத்த மயக்கத்தில் சட்டமோ, மனித உயிர்களோ ஸ்டாலின் கண்களுக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை.

பின் விளைவுகளைப் பற்றி சிறிதும் கவலைப்படாத ஸ்டாலின், ‘வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயங்கள்’ என்ற கொள்கையில் வாழ்ந்தவர். அவரது காதல் மனைவி 22 வயதில் இறந்தபோது “அவள் இறந்துவிட்டாள். அவளோடு சேர்த்து மனித இனத்தின் மீதான என் அத்தனை கருணைகளும் இறந்துவிட்டன” (“This creature softened my heart of stone. She died and with her died my last warm feelings for humanity.”) என்று விரக்தியாகப் பேசினார். அவரின் இந்த மனநிலை, சோவியத்தின் சோகங்களுக்கு வித்திட்டது.

லெனின் - ஸ்டாலின்
லெனின் - ஸ்டாலின்

“மரணமே எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு. மனிதன் இல்லையெனில் எந்தப் பிரச்னையும் இல்லை” என்ற ஸ்டாலினைப் பார்த்து லெனினுக்கு மெல்ல மெல்ல கிலியெடுக்கத் தொடங்கியது. ஸ்டாலினை உடன் வைத்திருப்பது புலி வாலைப் பிடித்த கதையாக மாறிவிடும் என்பதை உணர்ந்த லெனின், உடனடியாக ஸ்டாலினை பதவியில் இருந்து தூக்கும்படி கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பினார். அதிலிருந்து சரியாக 10 மாதங்களில் லெனின் இறந்ததும், “லெனினின் பாரம்பரியத்தைத் தாங்கியவர்” என தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்டு லெனினின் இடத்தைக் கைப்பற்றினார் ஸ்டாலின்.

லெனின் இறந்து சரியாக ஐந்து வருடங்களில் சோவியத் யூனியன் மொத்தமாக ஸ்டாலின் கைகளுக்கு வந்தது. கம்யூனிஸ்ட் ஆட்சியில் பத்து வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் மிகவும் பின்தங்கியிருந்த நாட்டை சீர்படுத்த சரியான தீர்வு, ஒரு சொட்டு மார்க்சிய மருந்தை பருகுவது என்று ஸ்டாலின் தீர்மானித்த அந்த நிமிடம், சோவியத் மக்களின் தலைவிதி மாற்றி எழுதப்பட்டது.

சோவியத் யூனியனின் எழுச்சி

அப்போது வேகமாக வளர்ந்து வந்த அமெரிக்காவையும், ஜெர்மனி, பிரிட்டன் போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளையும் எட்டுக்கால் பாய்ச்சலில் எட்டிப்பிடித்து முந்திச் செல்ல விரும்பிய ஸ்டாலின், ஒரு ஐந்தாண்டு திட்டத்தை நிறுவினார். புதிய திட்டங்களை உருவாக்கி, நாட்டை தொழில்மயமாக்கி, உற்பத்தியை பெருக்கி, விவசாயத்தை இயந்திரமயமாக்கி ஒரு கூட்டு விவசாயத்தை அறிமுகப்படுத்தி, என கில்லி போல பல துல்லியமான திட்டங்களைச் சொல்லி அடித்தது இந்த ஐந்தாண்டு திட்டம். ஒரு தொழில் துறைப் போரில் மட்டுமல்ல, இன்னுமொரு உலகப் போர் உருவானாலும், அதில் வெல்ல சோவியத் ரஷ்யா தன்னை ஆவேசமாகத் தயார்படுத்தத் தொடங்கியது.

முதலாளித்துவ மேற்கத்திய சக்திகளை வெல்லாவிட்டால், சோவியத் சிதைவுற்று அழிவுற்றுவிடும் என ஸ்டாலின் நம்பினார். ”We are fifty or a hundred years behind the advanced countries. We must make up this gap in ten years. Either we do it or they will crush us” என்ற எழுச்சி மிகு கூற்று சோவியத் மக்களின் ரத்தத்தை சூடாக்கி புதிய உத்வேகத்தகை ஊட்டியது.


இந்த ஐந்தாண்டு திட்டத்தின் விளைவாக நிலக்கரி, எஃகு, எண்ணெய் மற்றும் மின்சாரம் ஆகியவற்றின் உற்பத்தி பெருமளவில் அதிகரித்தது. நீர் மற்றும் ரயில் போக்குவரத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது. ஏராளமான டிராக்டர்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இது கிராமப்புறங்களில் உணவு உற்பத்தியை அதிகரிக்க உதவியது. Magnitogorsk போன்ற புதிய தொழில்துறை நகரங்கள் கட்டப்பட்டன. ஒற்றை நாடாக பலமிழந்திருந்த ரஷ்யா, ஓர் ஒன்றியமாக ஒன்று கூடி, விஸ்வரூபம் கொண்டது.

சோவியத் யூனியன்
சோவியத் யூனியன்

எது எப்படியோ, இந்த ஐந்தாண்டு திட்டம் வெற்றிபெற கொடுக்கப்பட்ட மிகக்கூடிய விலை மனித உயிர்கள். பஞ்சம், பட்டினியால் மில்லியன் கணக்கானவர்கள் இறந்தனர். இதில் பல இறப்புகள் உக்ரைன் போன்ற பகுதிகளில் நிகழ்ந்தால் இந்த ஐந்தாண்டுத் திட்டம் ரஷ்யர்கள் மற்றும் ரஷ்யர்கள் அல்லாதவர்களுக்கு இடையே பிளவை உருவாக்கியது. அதுவரை உலகம் காணாத மிகப்பெரிய மனித படுகொலைகள் அரங்கேறின. உலக அரங்கில் சோவியத் யூனியன் அசைக்க முடியாத சக்தியாக உருமாறிய அதே வேளை, அதன் உள்ளரங்கில் மக்கள் உறக்கத்தைத் தொலைத்த இரவுகளோடு போராடிக்கொண்டிருந்தனர்.

ஸ்டாலினின் கால சோவியத் எழுச்சி, வரலாற்றின் பக்கங்களில் ரத்தக்கறையினால் எழுதப்பட்டது. சுமார் 20 மில்லியன் மக்களின் மரணங்கள் மீது, சோவியத் யூனியனின் எழுச்சியும் வீழ்ச்சியும் ஸ்டாலின் எனும் ஒற்றை இரும்புத் தூணால் நிர்ணயிக்கப்பட்டது. அதுவரை அடித்து ஆடிய அமெரிக்கா, ஜெர்மனி போன்ற வல்லரசுகளுக்குப் போட்டியாகக் களத்தில் குதித்தது சோவியத் யூனியன்!

யூரோ டூர் போலாமா?