நூற்றாண்டுகளைக் கடந்து யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய அந்தஸ்துடன் நீலகிரி மலையில் தடதடத்துக்கொண்டிருக்கிறது நீலகிரி மலை ரயில். ஆசியாவிலேயே மிக நீண்ட பல்சக்கர தண்டவாள அமைப்புடன் இயங்கும் இந்த மலை ரயிலில் பயணிக்க உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டிவருகின்றனர். பயணிகளின் ஆர்வம் காரணமாகச் சிறப்பு மலை ரயிலும் இயக்கப்படுகிறது. மேலும் முழுத் தொகை செலுத்தி முழு ரயிலையும் வாடகைக்கு எடுத்துப் பயணிக்கும் வசதியும் உள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் ஆசிஷ் என்பவர் மலை ரயிலை மொத்தமாக வாடகைக்கு எடுத்து மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை பயணிக்க ரயில்வே நிர்வாகத்திடம் விண்ணப்பம் கொடுத்துள்ளார். அதற்கான தொகையாக 4.8 லட்சம் ரூபாய் செலுத்தி குடும்ப உறுப்பினர்கள் 13 பேருடன் உற்சாகமாகப் பயணித்துள்ளார்.
இதுகுறித்துத் தெரிவித்த ரயில்வே அதிகாரிகள், "சிறப்பு சேவை அடிப்படையில் மலை ரயிலை மொத்தமாக வாடகைக்கு எடுத்துப் பயணிக்கும் வசதி உள்ளது. தேனிலவுத் தம்பதியர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் சிலர் இதுபோன்று வாடகைக்கு எடுத்துப் பயணிக்கின்றனர். மறக்க முடியாத மாறுபட்ட அனுபவமாக இருப்பதாகப் பயணிகள் தெரிவிக்கின்றனர்" என்றனர்.