சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டம் வேகமாக வளர்ந்துவருகிறது. மெட்ரோ ரயில் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், மேம்பாலங்கள் எனப் பல திட்டங்களுக்குப் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடந்துவருகின்றன. ஆனால் 20 நிமிடங்கள் மழை பெய்தாலே கோவை மாவட்டம் முழுவதும் ஸ்தம்பித்துப் போய்விடுகிறது. கோவையின் முக்கியச் சாலைகள் மழைநீர் தேங்கி, குளம்போலக் காட்சியளிக்கின்றன. காரணம், முறையான மழைநீர் வடிகால் இல்லாமல் இருப்பதுதான். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோவை மாவட்ட மக்கள் மழைக்காலத்தில் இந்தப் பிரச்னையைச் சந்தித்துவருகின்றனர். ஆனால், இதுவரை மாவட்ட நிர்வாகம் மூலம் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கொண்டுவரப்படவில்லை.
இது குறித்து கோவையின் முக்கிய இடங்களில் கள ஆய்வு செய்தோம்.

கோவை-அவினாசி சாலை:
கோவையின் பிரதான சாலைகளில் ஒன்று கோவை-அவிநாசி சாலை. மழைக்காலங்களில் மழைநீர் செல்ல வடிகால் இல்லாமல் சுரங்கப்பாதையில் குளம்போல் மழைநீர் தேங்கிவிடுகிறது. கோவையின் மையப் பகுதியில் இந்தச் சாலை இருப்பதால் வாகனங்கள் செல்ல வழியில்லாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மழைக்காலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என அனைவரும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
லங்கா கார்னர் சாலை:
அரசு மருத்துவமனை, கோவை ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றம், கோவை மாநகராட்சி அலுவலகம், ரயில் நிலையம் என கோவை நகரின் மையப்பகுதி சாலை. குறிப்பாக மழைக்காலங்களில் ரயில் நிலையம் சந்திப்பு அருகே சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கிவிடுகிறது. கடும் போக்குவரத்து நெரிசலில் அவசர ஊர்திகள் செல்ல வழியில்லாமல் நிற்கின்றன. அரசு மருத்துவமனை, ரயில் நிலையம் அருகில் இருப்பதால் மழைக்காலங்களில் உரிய நேரத்தில் மக்களால் செல்ல முடியவில்லை.

காந்திபுரம் பேருந்து நிலைய சாலை:
தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடமாக காந்திபுரம் பேருந்து நிலையம் இருக்கிறது. கனமழை நேரத்தில் இங்கு குளம்போல் மழைநீர் தேங்கிவிடுகிறது. போக்குவரத்து நெரிசலால் உரிய நேரத்தில் பேருந்துகள் செல்ல முடியவில்லை. இது தொடர்பாக கோவை மாவட்டப் பொறியாளர் அரசு அதிகாரியிடம் கேட்டபோது, ``கோவை மாவட்டத்தில் மண்டலவாரியாக தூர்வாரும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. மோட்டார் மூலம் மழைக்காலங்களில் தேங்கிய மழைநீரை அகற்றுவதற்குத் திட்டமிடப்பட்டிருக்கிறது. வடிகால்கள் இல்லாத பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இது தொடர்பாக சமூகச் செயற்பாட்டாளர் தியாகராஜனிடம் பேசியபோது, ``தற்போது இருக்கும் மழைநீர் வடிகால்கள் அனைத்தும் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டவை. புதிதாக கோவை காந்திபுரம்-நஞ்சுண்டாபுரம் பகுதிகளில் மட்டும் வடிகால்கள் அமைக்கப்பட்டன. கால்வாய்கள் கட்டப்படும்போது தேவையான ஆழத்தில் கட்டப்படுவதில்லை . ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் குளங்களின் நீர் கொள்ளளவு குறைந்துவிட்டதால், குளங்களுக்குச் செல்ல வழி இல்லாமல் மழைநீர் ஆறுபோலச் சாலையில் செல்கிறது. தேவையற்ற நடைபாதைகளை அகற்றிவிட்டு முறையாகக் கால்வாய்களைத் தூர்வார வேண்டும். அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் முறையான திட்டமிடல் இல்லாததும் பிரச்னைக்குக் காரணமாக இருக்கிறது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றுவதற்கு மோட்டார் பம்ப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் குளம்போல் தேங்கிய மழைநீரை எவ்வளவு நேரத்தில் மோட்டார் பம்ப் மூலம் வெளியேற்ற முடியும்... கோவை மாநகராட்சி அதிகாரிகள் இந்தப் பிரச்னைக்குப் பெரிய அளவில் ஆர்வம் காட்டுவதில்லை. அரசு அதிகாரிகள் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு நிரந்தரத் தீர்வாக மழைநீர் வடிகால்களை அமைக்க வேண்டும்" எனக் கூறினார்.

பொதுமக்கள் பேசுகையில், ``எப்போது மழை பெய்தாலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் உரிய நேரத்தில் வேலைக்குச் சென்று வர முடியவில்லை. அரசு அதிகாரிகள் உடனடியாக மழைநீர் செல்ல ஏதுவாக மழைநீர் வடிகால்களை அமைக்க வேண்டும்" என்றனர்.
நம்மிடம் பேசிய கடை வியாபாரி ஒருவர், ``இந்த வாரம் இரவில் பெய்த மழையில் ரயில் நிலையம் அருகில் இருக்கும் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கிவிட்டது. என்னுடைய கடை முழுவதும் மழைநீரால் சூழ்ந்துவிட்டது. கோவை மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசினேன். எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. கடையிலிருந்த ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் மழைநீரால் வீணாகிவிட்டன" என்றார்.