Published:Updated:

சாமி, எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!

ஆறுமுகசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
ஆறுமுகசாமி

கொரோனா, ஊரடங்குக்கு முன்பே தமிழகத்தில் அதிக காலம் நீட்டிக்கப்பட்ட விஷயம் ஒன்று இருக்கிறது என்றால் அதுதான் ஆறுமுகசாமி ஆணையம்.

‘‘கோடாரியை எடுத்துக் கொசுவைக் கொல்வது போன்றதுதான் ஊரடங்கு” - பலமுறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டபிறகு, தமிழக அரசால் அமைக்கப்பட்ட மருத்துவ நிபுணர்குழு உதிர்த்த பொன்மொழிதான் இது.

‘கோழியால் முட்டை வந்ததா, முட்டையால் கோழி வந்ததா?’ என்பதற்குப் பிறகு நமக்குக் குழப்பமான கேள்வி, ‘கொரோனாவால் ஊரடங்கு வருகிறதா, ஊரடங்கால் கொரோனா வருகிறதா?’ என்பதுதான். அந்த அளவுக்கு ஊரடங்கை நீட்டிக்க நீட்டிக்க, கொரோனாவும் தன்னை நீட்டித்துக்கொள்கிறது.

கொரோனா, ஊரடங்குக்கு முன்பே தமிழகத்தில் அதிக காலம் நீட்டிக்கப்பட்ட விஷயம் ஒன்று இருக்கிறது என்றால் அதுதான் ஆறுமுகசாமி ஆணையம். ‘அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டாரா, இல்லையா?’ என்பதைக் கண்டுபிடிப்பதற்கு எட்டாவது முறையாகக் காலநீட்டிப்பைப் பெற்றுள்ளார் ஆறுமுகசாமி.

சாமி, எங்களுக்கு ஒரு
உண்மை தெரிஞ்சாகணும்!

முன்கதை

டிச.5, 2016-ல் ஜெயலலிதா மறைந்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வரானார். ராஜமாதாவாகக் கட்சியை வழிநடத்திய சசிகலாவுக்கு அரியணை ஆசை துளிர்விட்டது. சந்திரமுகியாக மாறிய கங்காபோல உடைகள், மேக்கப், பால்கனி கையசைப்பு, தான் நடக்க கொஞ்சம் தள்ளி நடக்கும் குனிந்த வெள்ளுடைக் கட்சிக்காரர்கள் என்று ஜெ.வாகவே தன்னை நினைத்து வரித்துக்கொண்டவர், போயஸ் தோட்டத்துக்குப் பன்னீர்செல்வத்தை அழைத்துப் பதவியைப் பறித்து அனுப்பினார். ‘நேற்றுவரை ஜெ.வுடன் தான் பார்த்த சசிகலா அல்ல இது’ என்பதை உணர்ந்து, அதுவரை ஏற்படாத ஞானோதயம் திடீரென பன்னீருக்கு உதயமானது. சட்டையை மாட்டிக்கொண்டார். மறக்காமல் சட்டைப்பையில் ஜெ. படத்தை வைத்துக்கொண்டார். கிளம்பி நேராக ஜெ. சமாதியில் தியானத்தில் உட்கார்ந்தார். ஒட்டுமொத்த மீடியாவும் வந்து குவிந்தது. ஆவியுடன் என்ன பேசினாரோ அது அவருக்குத்தான் வெளிச்சம். 40 நிமிட மூச்சுப் பயிற்சியை முடித்தவர், “ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது” என்று முதல் குண்டை வீசினார். அடுத்த நாள் செய்தியாளர் சந்திப்பில், “75 நாள்கள் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது ஒருநாள்கூட அவரை நான் நேரில் பார்த்ததில்லை” என்று இன்னொரு குண்டுபோட, தமிழகமே விக்கி விக்கி விக்கித்தது.

அதன்பிறகு பன்னீர், எடப்பாடி பழனிசாமி, சசிகலா வகையறா என அ.தி.மு.க மூன்றாக உடைந்து கட்சியை ஆளுக்கொரு பீஸாக எடுத்துக்கொண்டனர். இடையில் ஜெ.தீபா தன்னோடு மாதவனையும் டிரைவர் ராஜாவையும் வைத்துக்கொண்டு ‘நானும் ரௌடிதான்’ என்று மதிய தூக்கத்துக்குப் பிறகு மஞ்சள்கொடி ஆட்டியதை யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ள வில்லை. தன் பின்னால் ஒரு பெரிய படையே திரண்டு வரும் எனப் பன்னீர்செல்வம் எதிர்பார்த்தது நடக்கவில்லை. டெல்லி எஜமானின் உத்தரவின் பேரில் பன்னீரும் எடப்பாடியும் கைகோக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. துணை முதலமைச்சர் பதவி தருவதாக எடப்பாடியும் பச்சைக்கொடி காட்டவே, பன்னீருக்கு சற்று சங்கோஜம். பதவிக்காகத் தான் கரம்கோப்பதைத் தொண்டர்கள் கண்டுபிடித்துவிடக் கூடாதே என்பதற்காக, அதை மறைப்பதற்காக அமைக்கப்பட்ட லுல்லுலாயி ஆணையம்தான் ஆறுமுகசாமி ஆணையம்.

சசிகலா, பன்னீர், எடப்பாடி பழனிசாமி
சசிகலா, பன்னீர், எடப்பாடி பழனிசாமி

செப்டம்பர் 22, 2016 இரவு ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சூழல் முதல், டிசம்பர் 5, 2016-ல் ஜெயலலிதா மரணித்தது வரை நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தையும் விசாரித்து அறிக்கை அளிப்பதற்காக அமைக்கப்பட்டது அந்த ஆணையம்.

இதுவரை...

158 பேரிடம் இன்றுவரை விசாரணை நடத்தியுள்ளனர். ‘ஜெயலலிதா பாத்ரூமில் தடுக்கி விழுந்துவிட்டார். ஆம்புலன்ஸில் ஏற்றும்போது அவருக்கு சுயநினைவு இருந்தது’ என சசிகலாகூட பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துவிட்டார். ஜெயலலிதாவிடம் தலைமைச் செயலாளர்களாக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், ராமமோகன ராவ் இருவரும் வாக்குமூலம் அளித்துவிட்டார்கள். ஆனால், மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று காட்டுக்குள்ளே கண்ணிவெடி விதைத்த பன்னீர்செல்வம் இன்றுவரை ஒருமுறைகூட விசாரணைக்கு ஆஜராகவில்லை. ஒருவேளை ஜெ. ஆவியின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறாரா என்பது அவருக்கும் ஆவிக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்.

2017 ஆகஸ்டில் எடப்பாடியும் பன்னீரும் ‘முஸ்தபா முஸ்தபா’ பாடிக்கொண்டனர். ஏப்ரலில் ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பரில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சசிகலா இருந்ததோ பரப்பன அக்ரஹாரா சிறையில். அவரின் தளபதியாக இருந்த தினகரன், தன் அணிக்கு என்ன பெயர் சூட்டுவது என்று தெரியாமல் திக்கித் திணறிய தருணம் அது. இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்டார் தினகரன். ஓட்டுகளை திசை திருப்பவோ அல்லது வேறெந்தத் திரைக்கதையோ... தினகரன் அணியில் இருந்த வெற்றிவேல், மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெறும்போது எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டார். மக்கள் பார்வைக்கு வந்த ஜெ.வின் கடைசி வீடியோ, பிரௌன் நிற உடையில் அவர் ஜூஸ் குடித்துக் கொண்டிருந்த அந்த வீடியோதான். அரசியல் அரங்கில் அனல் அடித்தது. வீடியோவைத் தங்களிடம் சமர்ப்பிக்காமல் வெற்றிவேல் தன்னிச்சையாக வெளியிட்டதாகக் கூறி ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் போலீஸ் புகாரும் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் நிலையும் ஜெ. மரணம் போலவே இன்றுவரை மர்மம்தான்.

விசாரணையைத் தொடங்கியபோது மூன்று மாதத்தில் விசாரணையை முடித்துவிடுவதாக சூடமேற்றிய ஆறுமுகசாமி, முப்பது மாதமாகியும் இன்னும் முடிக்கவில்லை. ஓர் இடைக்கால அறிக்கையையாவது சமர்ப்பித்திருக்கலாம், அதுவும் இல்லை. ஜெயலலிதாவுக்கு டிபன் வாங்கிக் கொடுத்ததாக 1.17 கோடி ரூபாய்க்கு அப்போலோ பில் போட்டதைவிட, ஆறுமுகசாமி ஆணையத்துக்கு டீ, காபி வாங்கிய பில் எகிறிவிடும் போலிருக்கிறது.

இதற்கிடையே மருத்துவக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என அப்போலோ நிர்வாகம் உச்சநீதிமன்றத்தை நாடியது. இவ்வழக்கில் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டதால் ஒருவருடமாக எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை. ஏற்கெனவே காலநீட்டிப்பு கொடுத்துக் கொண்டிருந்த அரசுக்கு அல்வா போல, மருத்துவமனை பெற்ற இந்த இடைக்காலத் தடையும் வர, செயல்படாத ஆணையத்தை நீட்டித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

என்ன காரணம்... யார் செய்த தாமதம்?

‘இதற்குக் காரணம் வேறொன்றுமில்லை... சசிகலா பயம்தான்’ என்கிறது எடப்பாடி வட்டாரம். சட்டப்படி பார்த்தால் இவ்வருட இறுதிக்குள் சசிகலா விடுதலை செய்யப்பட வேண்டும். ஆகஸ்டிலேயே வருவார் என்று ஆருடங்களும் வர ஆரம்பித்துவிட்டன. வெளியே வரும் சசிகலா அமைதியாக இருப்பாரா, இல்லை ஆர்ப்பரிப்பாரா என்பது தெரியவில்லை. ஒருவேளை தனக்கெதிராக சசி காய் நகர்த்தும்பட்சத்தில், அவருக்கு செக் வைக்கவே ஆறுமுகசாமி ஆணையத்தைத் துருப்புச்சீட்டாகக் கையில் வைத்திருக்கிறார் எடப்பாடி என்கிறார்கள்.

‘ஆனி போய் ஆடி வந்தா டாப்பா வருவான்’ என்று வசனம் பேசிய ‘களவாணி’ படத்துக்கும் பார்ட் டூ வந்துவிட்டது. ஆனால் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு இன்னும் ஒரு விமோசனம் வரவில்லை.

ஜெயலலிதா மரணத்தின் மர்மம் குறித்து விசாரிக்கப்பட்ட ஆணையம் அது. இப்போது அடுத்த தேர்தலே வரப்போகிறது. இடையில் எடப்பாடியும் பன்னீரும் தமிழகத்தின் சே குவேரா, ஃபிடல் ஆகியிருக்கிறார்கள். 11 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு குற்றுயிரும் குலையுயிருமாய் இருக்கிறது. தினகரன் கட்சியின் ஸ்லீப்பர் செல்கள் எல்லாம், அடுத்த கட்சிகளில் உறுப்பினர் அட்டை வாங்கிவிட்டார்கள். ஜெ.தீபாவும் தீபக்கும் ஜெயலலிதா சொத்தின் வாரிசு ஆகியிருக்கிறார்கள். அட, கம்ப ராமாயணத்தை எழுதியது கம்பரே அல்ல, சேக்கிழார்தான் என்ற ரகசியத்தைக்கூட எடப்பாடி கண்டுபிடித்துவிட்டார். ஆனால் ஜெயலிதா மரணத்தின் மர்மத்தை இன்னும் ஆறுமுகசாமி கண்டுபிடிக்கவில்லை.