அரசியல்
அலசல்
Published:Updated:

அவங்களுக்கு தண்டனை கிடைக்கணும்! - வலுக்கும் தூத்துக்குடி கோரிக்கை... செவிமடுக்குமா அரசு?

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு
பிரீமியம் ஸ்டோரி
News
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு

சென்னை உயர் நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட இரண்டு முறை தீர்ப்பளித்திருக்கிறது

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் இறுதி அறிக்கை வெளியாகி இரண்டு மாதங்களாகியும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது இதுவரை குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கொந்தளிக்கிறார்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள். ‘அவங்களுக்கு தண்டனை கிடைக்கணும்!’ என்ற ஒற்றைக் கோரிக்கையுடன் கடந்த 12-ம் தேதி பல்வேறு அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட, மீண்டும் பரபரக்கிறது தூத்துக்குடி.

அவங்களுக்கு தண்டனை கிடைக்கணும்! - வலுக்கும் தூத்துக்குடி கோரிக்கை... செவிமடுக்குமா அரசு?

இது குறித்து ஒருங்கிணைந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம். “கடந்த 22.03.22-ல் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது தூத்துக்குடிக்கு வந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலின், ‘அ.தி.மு.க-வும், பா.ஜ.க-வும் கூட்டுச் சேர்ந்து நடத்திய பச்சைப் படுகொலைதான் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிறப்புச் சட்டம் இயற்றி, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றிட நடவடிக்கை எடுப்போம். துப்பாக்கிச்சூடு படுகொலைக்குக் காரணமானவர்கள் எவராக இருந்தாலும், எந்த உயர் பதவியில் இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்’ என்று வாக்குறுதி கொடுத்தார். அத்தனையும் வெறும் தேர்தல் காலத்துப் பேச்சுதானா... பல நூறு சாட்சிகளை விசாரித்து, சிசிடிவி கேமரா, பிரேத பரிசோதனை அறிக்கை, காயச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் பரிசீலனை செய்த ஆணையம், தவறு செய்த அதிகாரிகளை அடையாளம் காட்டிவிட்டது. சட்டமன்றத்தில் வைத்து அரசு அதை ஏற்றுக்கொண்ட பிறகும், அவர்கள்மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் தயங்குவது ஏன்?

அவங்களுக்கு தண்டனை கிடைக்கணும்! - வலுக்கும் தூத்துக்குடி கோரிக்கை... செவிமடுக்குமா அரசு?

சென்னை உயர் நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட இரண்டு முறை தீர்ப்பளித்திருக்கிறது. இரண்டு முறையும் ஸ்டெர்லைட் தரப்பு உச்ச நீதிமன்றத்தை அணுகி, ரூ.100 கோடி அபராதம் செலுத்தி ஆலையைத் திறப்பதற்கு உத்தரவு வாங்கியிருக்கிறது. தற்போது உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு வரும் 17-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. எனவே, முதல்வர் இந்த ஆலையை நிரந்தரமாக மூட, அமைச்சரவையைக் கூட்டியோ, சட்டமன்றத்தைக் கூட்டியோ சிறப்புத் தீர்மானம் இயற்ற வேண்டும்” என்றார்.

துப்பாக்கிச்சூட்டில் வாயில் சுடப்பட்டு உயிரிழந்த ஸ்னோலினின் தாயார் வனிதாவிடம் பேசினோம். “துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய குற்றவாளிகள் அத்தனை பேருக்கும் தண்டனை கிடைக்கிற நாள்தான், என் மகள் உள்ளிட்ட 13 பேரின் இறப்புக்கும் நீதி கிடைக்கிற நாள். தமிழக முதல்வரை மலைபோல் நம்பியிருக்கிறோம். எனவே, அவர் கொடுத்த வாக்குறுதியை விரைந்து நிறைவேற்ற வேண்டும்” என்றார் கண்ணீருடன்.

என்ன செய்யப் போகிறது தமிழக அரசு?