சினிமா
பேட்டிகள்
கட்டுரைகள்
Published:Updated:

சமூகத்துக்குத் திருப்பிக் கொடுக்கும் ஜமீன் குடும்பம்!

ஜமீன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜமீன்

ஜமீன் மரபின் 36-வது தலைக்கட்டைச் சேர்ந்த அருண்ராஜ் காலிங்கராயர் இப்போதும் அரண்மனையில்தான் வசித்து வருகிறார்.

விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!

ஜனநாயக உரிமைப்படி, நமக்கான தலைவர்களை நாமே தேர்ந்தெடுக்கத் தொடங்கி 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. மக்களாட்சி குறித்து தினம் தினம் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். அதைவிட மன்னராட்சி குறித்துப் பேச ஆயிரமாயிரம் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலும் அப்படிப்பட்ட வரலாற்றுத் தொடர்புகள் ஏராளமாக நிறைந்துள்ளன. பொள்ளாச்சி வட்டாரம் ஜமீன் கலாசாரத்துடன் நெருங்கிய தொடர்புடையது. காலிங்கராயர், சமத்தூர், புரவிபாளையம், ராமப்பட்டினம் என்று பல ஜமீன்கள் இங்கு இருந்தன. ஜமீன் ஊத்துக்குளி, ஜமீன்காளியாபுரம் என்று அந்தந்த ஜமீன்களின் பெயர்கள்தான் இப்போதும் ஊர்களுக்கு உள்ளன.

அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் அந்த அரண்மனைகள் பிரமாண்டமாக நிமிர்ந்து நிற்கின்றன. தமிழ் சினிமாக்களில் இடம்பெறும் பெரிய பழைமை மாறாத கம்பீர வீடுகள் பலவும் பொள்ளாச்சிப் பகுதி ஜமீன் அரண்மனைகளில் படம்பிடிக்கப்பட்டவைதான். இதில் முக்கியமாக காலிங்கராயர் ஜமீன் பரம்பரைக்கு மிகப்பெரிய வரலாற்றுத் தொடர்புள்ளது.

கி.பி 1200களில் கொங்கு மண்டலம், 24 நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. அதில் ஒன்று பூந்துறை நாடு. அங்கு நஞ்சய்யன் என்பவருக்குப் பிறந்தவர்தான் லிங்கய்யன். அவரின் அசாத்திய திறமையைப் பார்த்து பாண்டிய மன்னர், அவரைப் பூந்துறை நாட்டின் தலைவராக்கினார். மக்களுடன் மக்களாக நின்று பணியாற்றியதால் காலிங்கராயன் என்ற பட்டத்தைப் பெற்றார். கி.பி 1270-ம் ஆண்டு நொய்யல், பவானி, அமராவதி ஆறுகளை இணைத்துக் காலிங்கராயன் கால்வாயைக் கட்டும் பணியை அவர் தொடங்கினார். 12 ஆண்டுகள் கடுமையாக உழைத்து, 30,000 ஏக்கர் நிலம் பாசனவசதி பெறும் வகையில் 56.5 மைல் தொலைவுக்கு பிரமாண்டமாக அதைக் கட்டினார். 1282-ம் ஆண்டு காலிங்கராயன் கால்வாய் மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

சித்தார்த் காலிங்கராயர் - அருண்ராஜ் காலிங்கராயர்
சித்தார்த் காலிங்கராயர் - அருண்ராஜ் காலிங்கராயர்

ஆனாலும், தான் அதைப் பயன்படுத்தினால் நோக்கம் மாறிவிடும் என்று நினைத்தார் அவர். `இந்தக் கால்வாய் மக்களுக்காகக் கட்டப்பட்டது. இதிலிருந்து ஒரு சொட்டு நீரைக்கூட நானோ, என் குடும்பத்தினரோ பயன்படுத்த மாட்டோம்' எனக் கூறி அங்கிருந்து பொள்ளாச்சி ஊத்துக்குளிக்குக் குடிபெயர்ந்தனர். இங்கும் குறுநில மன்னர்களாகத் தொடர்ந்து, 1969-ம் ஆண்டு வரை ஜமீன்தாரராக இருந்துள்ளனர். பொதுவாக ஜமீன்தாரர்கள் என்றால், ஆங்கிலேயர்களுக்கு வரிவசூல் செய்வதைத் தாண்டி எதையும் செய்ய மாட்டார்கள் என்ற பார்வை உண்டு. ஊத்துக்குளி ஜமீன் தியாகம், வீரம் என்று பலவற்றின் அடையாளமாகத் திகழ்கிறது.

ஜமீன் மரபின் 36-வது தலைக்கட்டைச் சேர்ந்த அருண்ராஜ் காலிங்கராயர் இப்போதும் அரண்மனையில்தான் வசித்து வருகிறார். ஒரு காலை நேரம் பொள்ளாச்சி அருகே உள்ள ஊத்துக்குளி அரண்மனைக்குச் சென்றோம். பிரமாண்ட மதில்சுவர்கள், மூன்று நுழைவு வாயில் என்று பரந்து விரிந்து காணப்பட்டது அரண்மனை. உள்ளே நுழைந்ததும் நூற்றாண்டுக்கால பழைமையான மாட்டு வண்டிகள், வின்டேஜ் கார், கல்வெட்டுகள் என்று பழைமையின் அணிவகுப்பு நம்மை அசத்தியது. அருண்ராஜ் காலிங்கராயரும் அவர் மகன் சித்தார்த் காலிங்கராயரும் நம்மை வரவேற்று அரண்மனைக்குள் அழைத்துச் சென்றனர்.

பிரமாண்டமான யானைத் தந்தம், பாடம் செய்து உயிர்ப்புடன் இருப்பது போலவே தெரிந்த யானை, கரடி மற்றும் சிறுத்தைகள், மான் கொம்புகள், விலங்குகளின் எலும்பில் செய்யப்பட்ட வாள்கள், அரசு முத்திரை, பணியாட்கள் பயன்படுத்திய சீருடை என்று அங்கிருந்த ஒவ்வொரு பொருளும் நம்மை அந்தக் காலத்துக்கே அழைத்துச் சென்றன.

சமூகத்துக்குத் திருப்பிக் கொடுக்கும் ஜமீன் குடும்பம்!

அவற்றைப் பற்றி விவரித்தபடியே நம்மிடம் பேசிய ஜமீன் ஊத்துக்குளி 37வது தலைக்கட்டைச் சேர்ந்த சித்தார்த் காலிங்கராயர், “லிங்கையா ஒரு குறுநில மன்னர். பாண்டிய மன்னனின் படைத்தளபதியாக இருந்து, படிப்படியாக வளர்ந்து பூந்துறை நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்தார். ஈரோடு மாவட்டத்தில் கட்டிய காலிங்கராயன் கால்வாயை மக்களுக்கு அர்ப்பணித்துவிட்டு, ஆனைமலைப் பகுதிக்கு வந்து தனக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். 29-வது தலைக்கட்டு வரை குறுநில மன்னர்களாக இருந்தனர். மைசூர் மன்னர்கள், மதுரை நாயக்கர்கள் உள்ளிட்ட பலருடனும் தொடர்பில் இருந்துள்ளனர். திப்பு சுல்தானை விரட்டுவதற்கான பணியிலும் முக்கிய பங்கு வகித்துள்ளனர். ஆங்கிலேயர்கள் வந்தவுடன், இங்கு யார் செல்வாக்காக இருக்கிறார்கள் என ஆராய்ந்தனர். அப்படித்தான் 29-வது தலைக்கட்டில் இருந்து, ஆங்கிலேயர்களுக்கு வரி வசூலித்துத் தரும் ஜமீன்தாரர்கள் ஆனார்கள்.

எங்கள் ஜமீனுக்குச் சொந்தமாக 10,000 ஏக்கர் நிலம், 12 கிராமங்கள் இருந்தன. உடுமலைப்பேட்டை அருகே உள்ள மைவாடி என்கிற ஆற்றை ஏலத்தில் எடுத்தோம். அங்கும் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தினோம். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தபோது, எங்கள் கட்டுப்பாட்டில் இருந்த 7,000 ஏக்கர் கேரளாவுக்குச் சென்றுவிட்டது. 3,000 ஏக்கர் தான் தமிழ்நாட்டுக்கு வந்தது. நிலத்துக்கு அரசு எந்த இழப்பீடும் வழங்கவில்லை. ஆனால், மக்கள் இப்போதும் எங்களுக்கு மரியாதை செய்கின்றனர். பவானியில் இருந்து கொடுமுடி வரை கோயில்களில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும், எங்கள் குடும்பத்தினரை அழைத்து முன்னிலைப்படுத்தி மரியாதை செய்வார்கள்.

சமூகத்துக்குத் திருப்பிக் கொடுக்கும் ஜமீன் குடும்பம்!

அதேபோல கேரளாவில் ஆண்டுதோறும் நடக்கும் அரண்மனைக் கூத்து நிகழ்ச்சிக்கு நாங்கள்தான் தலைமை தாங்கிவருகிறோம். அப்போது எங்களுக்கான மரியாதைகளை அவர்கள் செய்வார்கள். மைவாடி, கேரளாவில் சிறிய அரண்மனைகள் இருந்தன. கேரளாவில் உள்ள அந்த 7,000 ஏக்கரில் யாராவது வங்கிக் கடனுக்குச் சென்றால், எங்களுக்கு மலையாளத்தில் நோட்டீஸ் வரும். நாங்கள் என்.ஓ.சி கொடுத்தால்தான் அவர்களுக்கு வங்கிக் கடன் கொடுக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு மயானம் கட்ட வேண்டும் என்று கேரள அரசு எங்களிடம் என்.ஓ.சி வாங்கியது.

சமத்தூர் அரண்மனைக்கும், எங்களுக்கும் 30 தலைக்கட்டாகப் பெண் கொடுத்து, பெண் எடுக்கும் உறவு இருந்தது. அவர்கள் எங்களது நெருங்கிய உறவினர்கள். எங்களைப் பொறுத்தவரை முன்னோர்கள்தான் தெய்வம். பவானியிலிருந்து இங்கு வரும்போது முன்னோர்களின் சிலைகளைப் பொக்கிஷம் போல எடுத்துக்கொண்டு வந்தோம். இப்போதும் ராஜா சாமி, நல்ல மங்கை என்று எங்களது முன்னோர்களை அந்த மக்கள் குலதெய்வமாக வழிபட்டுவருகின்றனர். காலிங்கராயன் கால்வாயை ஆராய்ந்த ஐ.நா சபை, ‘உலகத்திலேயே ஒரு தனி மனிதனின் மிகச்சிறந்த பங்களிப்பு’ என்று பாராட்டி, இதன் மதிப்பு ரூ.60,000 கோடி என்று ஆவணப்படுத்தினர். அதேபோல பல இடங்களில் குளங்களையும் தோண்டியுள்ளனர். ஊத்துக்குளியிலும் செய்துள்ளனர். இந்தப் பகுதிக்கு பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டம் வந்தபோது, ‘அதைத் தண்ணீர் இல்லாத பகுதிக்கு அனுப்புங்கள். எங்களுக்கு இதுபோதும்’ என மக்கள் கூறினர். பொள்ளாச்சியில் இன்றைக்கும் எவ்வளவு மழை பெய்தாலும், அது இந்தக் குளத்துக்கு வந்துவிடும். அதனால்தான் பொள்ளாச்சியில் வெள்ளபாதிப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லாமலிருக்கிறது” என்று சொல்லி அரண்மனை முழுவதையும் பார்வையிட அழைத்துச் சென்றார்.

சமூகத்துக்குத் திருப்பிக் கொடுக்கும் ஜமீன் குடும்பம்!

ஊத்துக்குளி ஜமீன் அரண்மனையை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கட்டடங்களைப் புனரமைத்து வசித்து வருகின்றனர். ஆனால், 800 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கட்டடத்தைப் புனரமைக்க முடியவில்லை. அதற்கான தொழில்நுட்பக் கலைஞர்கள் இல்லாததால், அது புனரமைக்கப்படாமல் இருக்கிறது. பாதுகாப்பு கருதி அங்கு யாரையும் அனுமதிப்பதில்லை. நூலகம், தர்பார், மக்களிடம் அமர்ந்து பேசும் அறை, படுக்கையறை, நந்தவனம் என்று அரண்மனை முழுவதும் ஒரு ரவுண்டு அடித்தோம்.

மீண்டும் தொடர்ந்த சித்தார்த், “ஒவ்வொரு தலைக்கட்டும் அவர்களால் முடிந்த பங்களிப்பைச் செய்து வருகின்றனர். காலங்கள் மாற மாற, அதற்கேற்ற வடிவில் இயங்கினர். காங்கிரஸ் கட்சி, திராவிடக் கட்சிகளைப் பிரபலப்படுத்துவதற்குப் பெரிய அளவில் உதவியுள்ளனர். இப்போதும் இயற்கை விவசாயம் செய்துவருகிறோம். இந்தத் தலைக்கட்டில், 32,000 ஆண்டுப் பழைமையான ‘லெமூரியன்’ என்கிற தமிழ் யோகா முறையைக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். ஊத்துக்குளியில் தினசரி நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் பயிற்சி வழங்கிவருகிறோம். இதை உலகம் முழுவதும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம். இதில் நாங்கள் எந்த மதம் அல்லது குருவையும் முன்னிலைப்படுத்தவில்லை. சமூகம் எங்களுக்கு ஏராளமானவற்றைக் கொடுத்துள்ளது. சமூகத்துக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்கிற அர்ப்பணிப்பு உணர்வு எங்களது ரத்தத்தில் ஊறிப்போன விஷயம். எந்த நிலையில் இருந்தாலும் அது மாறாது.

சமூகத்துக்குத் திருப்பிக் கொடுக்கும் ஜமீன் குடும்பம்!
சமூகத்துக்குத் திருப்பிக் கொடுக்கும் ஜமீன் குடும்பம்!

மற்ற ஜமீன்களின் கட்டடங்கள் எங்களைவிடப் பெரிதாக இருக்கலாம். எங்களைவிட அதிக நிலம் அவர்களிடம் இருக்கலாம். எங்களது தியாகமும், சமூகத்துக்குத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்கிற பொறுப்புணர்வும்தான் மற்ற ஜமீன்களிலிருந்து எங்களைத் தனித்துக் காட்டுகிறது. இந்த அரண்மனை 4-5 ஏக்கர் பரப்பளவில் இருக்கிறது. 80 முதல் 800 ஆண்டுகள் வரை வெவ்வேறு காலங்களில் கட்டிய கட்டடங்கள் இருக்கின்றன. ஆரம்பத்தில் மலபார் கட்டடக்கலைதான் இருந்தது. அந்தக் காலத்தில் காவல் நிலையம், நீதிமன்றம் என ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் இங்குதான் இயங்கும். இயற்கைப் பேரிடர் ஏதாவது வரும்போது, மக்கள் இங்குதான் தஞ்சமடைவார்கள். மக்களுக்கான நல்லது கெட்டது அனைத்தையும் கொண்டாடும் தாய்வீடும் இதுதான்.

யானை, குதிரை, கால்நடைகள் ஏராளமாக இருந்தன. ஒருகாலகட்டத்தில் மற்ற ராஜ்ஜியங்களுக்கு இந்தக் காடுகளிலிருந்து யானைகள் பிடித்துக் கொடுத்திருக்கிறோம். மைசூர் மன்னர்களுக்குக் கர்நாடகாவில் உள்ள கூர்க்கைக் கைப்பற்றுவது பெரிய சவாலாக இருந்தது. காலிங்கராயர்தான் கூர்க்கை அவர்களுக்குக் கைப்பற்றிக் கொடுத்தார். ஈரோட்டில் இருந்தவரை காலிங்கராயன் பரம்பரையாக தான் இருந்தோம். இங்கு வந்த பிறகு, ஒருமுறை கிருஷ்ணதேவராயரின் மகனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. எங்கு சென்றும் குணமடையவில்லை. அப்போது நாங்கள் காளி கோயிலில் பூஜை செய்து கொடுத்த விபூதியைக் கொடுத்தவுடன் உடனடியாக சரியாகிவிட்டது. இதில் வியந்துபோன கிருஷ்ணதேவராயர், `ராயர்' பட்டம் கொடுத்தார். அப்படித்தான் காலிங்கராயன், காலிங்கராயர் என்றானது. அப்போதிருந்தே நாங்கள் ஆன்மிகத்திலும் ஆழமாக ஈடுபட்டுவருகிறோம்.

சமூகத்துக்குத் திருப்பிக் கொடுக்கும் ஜமீன் குடும்பம்!

நாட்டு மாடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக, நம் நாட்டு இனத்தைச் சேர்ந்த பல்வேறு மாடுகளை வளர்த்துவருகிறோம். நாங்கள் நினைத்தாலும் பிரமாண்டமான வாழ்க்கையை வாழ முடியும். ஆனால் பணத்தைத் தேவையின்றி விரயம் செய்வதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எங்களுக்குத் தேவையான வசதிகள் உள்ளன. போதும் என்ற மனத்துடன் மக்களுக்கு நம்மால் முடிந்த பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்பதைத்தான் அடுத்தடுத்த தலைமுறைக்குச் சொல்லிக் கொடுத்து வளர்க்கிறோம்.

இங்கைவிட, காலிங்கராயன் கால்வாய் பாசனப் பகுதிகளில் எங்களை அதிகம் உரிமை கொண்டாடுவார்கள். எங்களை கடவுள் போலத்தான் பார்க்கிறார்கள். தை 5-ம் தேதி காலிங்கராயர் தினம் (கால்வாயை மக்களுக்கு அர்ப்பணித்த நாள்) அன்று நாங்கள் அவர்களுக்கு ஒதுக்கிவிடுவோம். கிட்டத்தட்ட 50 இடங்களில் நிகழ்ச்சிகள் நடக்கும். விடியற்காலை 3 மணிக்குச் சென்றால், கோலாட்டம், கும்மியாட்டம், பொங்கல் வைப்பது என நிறைய நிகழ்ச்சிகள் நடந்துகொண்டேயிருக்கும். ஆற்றில் மாசுபடுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்து வழிபாடு நடத்துவார்கள். அருமையான உணவு பரிமாறுவார்கள். மனதுக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும், அங்கு சென்றால் லேசாகிவிடும். ஆனால், தற்போது சாயப்பட்டறைத் தண்ணீரைக் கால்வாயில் கலப்பது மனதுக்கு கஷ்டமாக உள்ளது” என்றபோது அருகில் இருந்த ஊழியர் ஒருவர் “ராஜா...” என்று அழைத்து ஏதோ தகவலைப் பரிமாறிச் சென்றார்.

சமூகத்துக்குத் திருப்பிக் கொடுக்கும் ஜமீன் குடும்பம்!
சமூகத்துக்குத் திருப்பிக் கொடுக்கும் ஜமீன் குடும்பம்!

சிரித்தபடி நம் பக்கம் திரும்பியவர், ``மன்னர், ஜமீன் காலம் முடிந்துவிட்டது. ஆனாலும் இங்கிருக்கும் ஊழியர்களும் சில மக்களும் அன்பாக ராஜா என்றழைப்பார்கள். என் அப்பாவுடன் சேர்த்து மொத்தம் 4 பேர் உடன்பிறந்தவர்கள். தற்போது அப்பா மட்டும் அரண்மனையில் இருக்கிறார். நான் வார இறுதி நாள்களில் வந்து செல்வேன். எங்களுக்கு ஏராளமான உறவினர்கள் உள்ளனர். நடிகர் சத்யராஜ் எங்களது உறவினர்தான். மற்ற உறவினர்கள் குலதெய்வக் கோயிலுக்கு வந்தாலோ, மற்ற நிகழ்ச்சிகளுக்கு வந்தாலோ அரண்மனையில் தங்குவார்கள். அரண்மனை என்றதும் இங்கு பெரிய கட்டுப்பாடுகள் எல்லாம் இல்லை. இது மக்களால் உருவாக்கப்பட்டதுதான். இங்குள்ள ஆங்கிலேயர் நூலகத்தில் எல்லாமே ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. கோவை, பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய ஊர்களில் இப்போதிருக்கும் முக்கிய இடங்கள் நாங்கள் தானமாக வழங்கியவைதான்.

ஜமீன் வம்சத்தினர் பலர் தற்போது அரசியல் கட்சிச் செல்வாக்குடன் பெரிய தொழில்களைச் செய்துவருகின்றனர். நாங்கள் அப்படி இல்லை. இடைப்பட்ட காலத்தில் எங்களுக்கும் எத்தனையோ பிரச்னைகள் வந்து சென்றுள்ளன. எந்தச் சூழ்நிலையிலும் எங்கள் பாரம்பர்யத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம். விவசாயம், சிறிய தொழில் என்று சாமானியர்களின் வாழ்க்கையைத்தான் வாழ்ந்துவருகிறோம். பாரம்பர்ய மாண்பைக் காப்பதுடன், மக்களுக்கு ஏதாவது பயனளிக்கும் வாழ்க்கையே போதுமானது” என்கிறார் நிறைவான குரலில்.