வறுமையின் காரணமாகப் பள்ளிக்குச் செல்லாமல் சிறு வயதிலேயே பிழைப்புக்காக வேலைக்குச் செல்லும் சிறுவர்களைப் பள்ளிக்கு வரவைப்பதற்காகத் தொடங்கிய திட்டம்தான் சத்துணவுத் திட்டம்.

இந்தப் புரட்சித் திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான ஏழை, எளிய மாணவர்கள் பயனடைந்தனர். தொடர்ந்து, பயனடைந்துகொண்டிருக்கின்றனர். தமிழகத்தின் கல்வி அறிவு சதவிகிதம் அதிகரித்ததற்குக் கல்வியாளர்கள் முன்வைக்கும் காரணங்களில் இந்தச் சத்துணவுத் திட்டமும் ஒன்று.

தமிழகத்தில் கடந்த சில வருடங்களாகப் பள்ளிகளில் 13 வகையான கலவை சாதங்கள், நான்கு வகையான முட்டை மசாலாவுடன் மதிய உணவு வழங்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில், இந்தச் சத்துணவுத் திட்டத்தை மேலும் தரம் உயர்த்தும் முயற்சியில் இறங்கி வெற்றிகண்டிருக்கிறார்கள் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள்.
இந்தப் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழக அரசின் இலவச சத்துணவுத் திட்டத்தின் மூலம் உணவு சாப்பிட்டுவருகிறார்கள். தமிழக அரசு சார்பில் அவர்களுக்கு நாள்தோறும் சத்தான உணவு வகைகள் வழங்கப்பட்டுவரும்போதிலும், அவர்கள் இன்னும் ஆரோக்கியமாக இருக்க, கூடுதல் சத்து தேவை எனக் கருதியிருக்கின்றனர் பள்ளி ஆசிரியர்கள். அதனால், அவர்கள் சத்துணவுத் திட்டத்துடன் சத்தான காய்கறிகளையும் சமைத்து மாணவர்களுக்கு மதிய உணவோடு வாரம் முழுவதும் வழங்கிவருகிறார்கள்.

இந்தப் பள்ளியில் மதிய உணவுத் திட்டத்தின் மூலம் உணவு சாப்பிடும் மாணவர்களில் பெரும்பாலானோர் கிராமப்புற ஏழை மாணவர்கள்தான். தமிழக அரசின் மதிய உணவுத் திட்டம் திங்கள் முதல் வெள்ளி வரை வாரம் ஐந்து நாள்கள் மட்டுமே செயல்படுகிறது. தற்போது பள்ளியின் வேலை நாள்கள் ஆறு நாள்களாக அதிகரிக்கப்பட்டிருக்கும் நிலையில், சனிக்கிழமை மாணவர்களுக்குச் சாம்பார் சாதம் மட்டுமே வழங்கப்பட்டுவருகிறது.

இதை கவனித்த பள்ளியின் தலைமையாசிரியர், சனிக்கிழமையும் காய்கறிக்கூட்டு வழங்க வேண்டும் என்று தன் சொந்தச் செலவில் ஒரு நாள் திட்டமாகச் சனிக்கிழமை அன்று மட்டும் மாணவர்களுக்குக் காய்கறிக்கூட்டுக்கு ஏற்பாடு செய்தார். அவரின் முயற்சிக்கு ஆதரவளிக்கும்விதமாக, பள்ளியின் 46 ஆசிரியர்கள் ஒன்றாகக் கைகோக்க, சுழற்சிமுறையில் பூசணிக்காய், உருளைக்கிழங்கு, பீட்ரூட், பீன்ஸ் என வாரத்தில் ஆறு நாள்களும் அரசின் சத்துணவுத் திட்டத்தோடு தினம் ஓர் ஊட்டச்சத்து காய்கறி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது.
பள்ளி ஆசிரியர்களின் இந்தச் செயலுக்குப் பாராட்டுகள் குவிந்தவண்ணமாக இருக்கின்றன.