“காதலனுடன் சேர்த்துவைக்கிறேன் மகளே..!” - ‘ஆப்’ மூலம் ஆசைகாட்டிய பஞ்சாப் ஜோதிடக் கும்பல்...

நகையைப் பறிகொடுத்த ‘சென்னை மாணவி’!
``உன் காதலனுடன் உன்னை நான் சேர்த்து வைக்கிறேன் மகளே’’ என்று அன்பாகவும் ஆறுதலாகவும் பேசி, சென்னை மாணவியிடம் 45 சவரன் தங்க நகைகளைப் பறித்த ‘ஜோதிடக் கும்பல்’ சென்னையில் கைதுசெய்யப் பட்டிருக்கிறது. சினிமாவை மிஞ்சும் வகையில் சென்னை விமான நிலையத்தில் நடந்த இந்தக் கைதுச் சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னையில் ஆசிரியையாகப் பணிபுரியும் சுந்தரி என்பவரின் மகள் மீனா (பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன). தனியார் பள்ளியொன்றில் ப்ளஸ் ஒன் படித்துவந்த மீனா, தன்னுடன் படிக்கும் சீனியர் மாணவர் ஒருவரைக் காதலித்துவந்திருக்கிறார். இந்த நிலையில், மாணவனின் பெற்றோர் வெளிநாட்டில் இருந்ததால், மேற்படிப்புக்காக அவரும் அங்கு சென்றுவிட்டார். அதன் பிறகு மீனாவுடன் மாணவனின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, தான் காதலித்துவந்த மாணவனுடன் சேர்த்துவைக்க யாராவது உதவுவார்களா என்று மாணவி மீனா, கூகுளின் உதவியை நாடியிருக்கிறார். அப்போது, மீனாவின் பார்வையில், ‘How to bring back Ex’ என்ற ஆன்லைன் செயலி தென்பட்டிருக்கிறது. உடனடியாக அதை டௌன்லோடு செய்து, அதில் தன்னுடைய காதலன் மற்றும் தன்னுடைய விவரங்களைப் பதிவுசெய்திருக்கிறார் மீனா. அடுத்த சில நாள்களிலேயே மீனாவின் எண்ணுக்கு ஜோதிடர் அர்ஜூன் சாஸ்திரி என்பவர் அழைத்துப் பேசியிருக்கிறார்.

அவர் ஆங்கிலம் கலந்த இந்தியில், “உன் காதலனோடு நான் உன்னைச் சேர்த்து வைக்கிறேன் மகளே, அதற்குச் சில பூஜைகள் செய்ய வேண்டும். என்னென்ன பூஜைகள் என்பதை என்னுடைய சிஷ்யன் உன்னிடம் விவரமாகச் சொல்வான்” என்று மீனாவிடம் பேசியிருக்கிறார். பின்னர், அனில்குமார் என்ற நபர் தன்னை அர்ஜூன் சாஸ்திரியின் சிஷ்யன் என்று மீனாவிடம் அறிமுகப்படுத்திக்கொண்டார். அவர், “உன் காதலனோடு உன்னைச் சேர்த்துவைக்கும் பரிகார பூஜைகளுக்கு சில லட்சங்கள் செலவாகும். அதை ஏற்பாடு செய்” என்று சொல்லியிருக்கிறார். காதல் மயக்கத்திலிருந்த மாணவி மீனா, “என்னிடம் பணம் இல்லை, ஆனால், வீட்டில் தங்க நகைகள் இருக்கின்றன. அதை வாங்கிக்கொண்டு எப்படியாவது என் காதலனோடு என்னைச் சேர்த்துவையுங்கள்” என்று அனில்குமாரிடம் கெஞ்சியிருக்கிறார்.
இதற்குச் சம்மதித்த அனில்குமார், கடந்த நவம்பர் மாதம் பஞ்சாப்பிலிருந்து ஃப்ளைட் பிடித்து சென்னைக்கு வந்திருக்கிறார். அப்போது, முதல் தவணையாக மீனாவிடமிருந்து 15 சவரன் நகைகளையும், மீண்டும் டிசம்பர் மாதத்தில் சிறப்பு பரிகார பூஜை செய்ய வேண்டும் என்று 30 சவரன் தங்க நகைகளையும் ஏமாற்றி வாங்கிச் சென்றிருக்கிறார். ஒரு மாதத்துக்குப் பிறகே, மகள் மீனா நகைகளைப் பறிகொடுத்த விவரத்தை அறிந்துகொண்ட ஆசிரியை, இது குறித்து போலீஸில் புகாரளித்திருக்கிறார்.

வழக்கை விசாரித்துவரும் காவல்துறை அதிகாரிகளிடம் இது குறித்துப் பேசியபோது, “அனில்குமாரின் செல்போன் சிக்னல் பஞ்சாப் மாநிலம், அமிர்தரஸ் அருகிலுள்ள மஜிதா பகுதியைக் காட்டியது. இதனால் அனில்குமாரை மாணவியின் மூலமே பிடிக்கத் திட்டமிட்டோம். இந்தச் சமயத்தில் மீனாவை மீண்டும் தொடர்புகொண்ட அனில்குமார், ‘மெக்காவில் சிறப்பு பூஜை செய்ய வேண்டும். அதற்காக 17 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது’ எனக் கேட்டார். இதற்குச் சம்மதிப்பதுபோல நடித்த மாணவி, நகைகளின் போட்டோவை வாட்ஸ்அப்பில் அனுப்பிவைத்தார். அதைப் பார்த்த அனில்குமார், ‘இந்த நகைகள் போதாது. இன்னும் அதிகம் தேவைப்படும்’ என்று பதில் அனுப்பினார். அதன் பிறகு கவரிங் நகைகளைக் காட்டி, அனில்குமாரை நம்பவைத்தோம்.
இதையடுத்து, கடந்த ஜனவரி 20-ம் தேதி, அந்த நகைகளை வாங்க அனில்குமாரும், அவரின் சித்தப்பா சுகன்தீப் பார்கவும் ஃப்ளைட் பிடித்து சென்னைக்கு வந்தனர். அங்கு மீனாவிடமிருந்த நகைப் பைகளை வாங்கிச் சென்றனர். அப்போது, மஃப்டியில் காத்திருந்த தனிப்படை காவலர்கள் இருவரையும் பின்தொடர்ந்து சென்று கைதுசெய்தனர். அந்த இருவரிடமுமிருந்து இதுவரை 8.5 லட்சம் ரூபாய் பணம், 54 கிராம் தங்க நகைகளைப் பறிமுதல் செய்திருக்கிறோம்” என்றனர்.

தனிப்படை போலீஸாரிடம் பேசினோம். “கைதுசெய்யப்பட்ட அனில்குமார் சைக்காலஜி டிகிரி படித்தவர். தலைமுறை தலைமுறையாக பஞ்சாப்பில் ஜோதிடம் பார்த்துவரும் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரின் சகோதரர்தான் அர்ஜூன் சாஸ்திரி. அவர்தான் பிரிந்துபோன காதலர்களைச் சேர்த்துவைக்கும் ஆண்ட்ராய்டு ஆப்பை உருவாக்கியவர். இவர்களின் ஏமாற்று வலையில் வீழ்ந்த மாணவியை மூளைச்சலவை செய்து இந்த மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்கள். மாணவியை ஏமாற்றி வாங்கிய நகைகளை விற்று, அந்தப் பணத்தில் அனில்குமார் பஞ்சாப்பில் பிரமாண்டமாகத் தன் திருமணத்தை நடத்தியிருக்கிறார். கடைசியாக நகைகளைப் பெற வந்தபோது, அதில் தங்க நகைகளுக்கு பதில் நாங்கள் கவரிங் மற்றும் இரும்புப் பொருள்களை வைத்து அனுப்பினோம். இதில் வேடிக்கை என்னவென்றால், அனில்குமார் கைதுசெய்யப்படும் முன்புவரை அவர் தன்னை ஏமாற்றவில்லை என்றே மாணவி நம்பிக்கொண்டிருந்தார்” என்றனர்.
பெற்றோர்களே உஷார்!